சே குவேரா

அர்ஜெண்டினாவின் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர் சே குவேரா. மருத்துவம் படித்த இவர் டாக்டர் தொழிலைச் செய்யவே முதலில் விரும்பினார்.

ஆனால், காலம் அப்போது அவருக்கு வேறு ஒரு பாடத்தைக் கற்றுத் தந்தது. கௌதமாலா நாட்டில் நடந்து வந்த ஓர் ஆட்சியை அமெரிக்க அராசங்கம் தனது சுயநலத்துக்காக தூக்கி எறிந்தது. இதைப் பார்த்து சே துடித்தார். தங்களின் அரசாங்கம் தூக்கிஎறியப்பட்டதைப் பார்த்து மௌனம் சாதித்த அந்த நாட்டு மக்களின் செயல் சே குவேராவை மேலும் துடிதுடிக்க வைத்தது. அமெரிக்காவின் இந்த அட்டூழியத்தை எதிர்த்து அவர் புரட்சி வெடிக்கப் பேச... அவருக்கு வந்தது ஆபத்து. மெக்ஸிகோவுக்குத் தப்பி ஓடினார். அப்போது கியூபாவில் சர்வாதிகாரி பாடிஸ்டாவுக்கு எதிராக கெரில்லா படை திரட்டிப் போராடிவந்த பிடெல் கேஸ்ட்ரோவின் அறிமுகம் கிடைத்தது. அது அற்புதமான நட்பாக மலர்ந்தது.

கேஸ்ட்ரோவின் தலைமைத் தளபதி ஆனார் சே. இவரின் வீரமும் கெரில்லாப் படை சாகசங்களும் பாடிஸ்டாவை வீழ்த்தி, கேஸ்ட்ரோவின் கைகளில் க்யூபாவின் ஆட்சியை ஒப்படைத்தன.

பின் சே குவேரா கியூபாவின் பொருளாதார அமைச்சர் ஆனார். கியூபாவை பன்னெடுங்காலமாக சுரண்டி வந்த அமெரிக்க நிறுவனங்களின் உடைமைகளைப் பறிமுதல் செய்தார். கியூபாவின் விடுதலைக்காக தன்னோடு போராடிய ஒரு பெண்ணை மணந்து இரு குழந்தைகளையும் பெற்றார். இந்த வாழ்க்கை சேவைக் கவரவில்லை. காரணம் காங்கோ நாட்டில் புரட்சியில் ஈடுபட்டு வந்த கெரில்லாப் போராளிகளின்மீது அவரின் கவனம் சென்றது.


தனது நண்பர் கேஸ்ட்ரோவுக்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதிவிட்டு திடீரெனத் தலைமறைவானார். தனது உளவு ஸ்தாபனமான சி ஐ ஏவை ஏவிவிட்டு சே குவேராவை உலகம் முழுக்கத் தேடியது அமெரிக்கா. ஆனால் காங்கோ நாட்டின் அடர்ந்த காடுகளில் கம்யூனிஸ்ட் கெரில்லா வீரர்களுக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார் சே.

சுமார் இரண்டு வருட காலத்தை காங்கோ நாட்டு காடுகளில் கழித்த சே, பொலிவியா சென்று அங்கே ஆட்சி செய்துவந்த அமெரிக்காவின் கைக்கூலி அரசுக்கு எதிராக கெரில்லா யுத்தம் நடத்தினார்.அமைச்சராக இருந்த ஒருவர் போராளியாக மாறி யுத்தம் செய்தார் என்றால், வரலாற்றில் அது சே ஒருவர் மட்டும்தான்.

எதிரிகளுக்கு தெரியாமல் காடுகளில் அவர் ஒளிந்திருந்த சமயம் , சே குவேராவால் பயிற்சி அளிக்கப்பட்ட ஒருவன் துரோகியாக மாறி, சி ஐ ஏவுக்குத் துப்பு கொடுக்க, பொலிவியாவின் ராணுவம் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, சேவின் மார்புகளைத் தோட்டாக்களால் துளைத்தது. ஆனால் அந்த வீரனின் கண் இமைகள் அப்போதுகூட மூடிக்கொள்ளவில்லை. கண்கள் திறந்தபடியேதான் அவர் உயிர் அவரைவிட்டுப் பிரிந்தது.

எழுதியவர் : (11-Jun-14, 11:25 am)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 209

மேலே