இறுதியாசை

இறுதியாசை

என்னை நான்
உயிரோடு எங்கோ
தொலைத்துவிட்டேன் !

நடமாடுவது
காணாமல் போன
ஒரு கவிஞனின்
மிச்சம் மட்டுமே !

உன்னைத் தேடித் தேடி
எனக்குள்
உற்றுப் பார்க்கிற
இதயத்தின் நினைவுகளைச்
சிதைத்து -
பிழியத் துடிக்குமிந்த
சபிக்கப்பட்ட இரவுகளில்
கைவசம்
உன் நினைவுகளன்றி
வேறொன்றுமில்லை !

உயிர் நெசவின்
வாழ்விழைகள்
அசுர கதியில்
விலகிக் கொண்டிருக்கும்
இறுதியாத்திரை வதத்தின்
உச்சத்திலும் -
உச்சரிக்கத் தகுந்த
வார்தையென
உனது பெயரை
ஜெபித்துக் கொண்டிருக்கிற
என் ஆன்மயாகத்தில்
ஆகுதியென
என்னையே எரித்தெனது
சாம்பலளிக்கிறேன்
உனது
உயிர் செடிக்கு
உரமாக்கிக் கொள் !

உடம்பில் உயிரிருக்கும்
இடத்தைத் தேடும்
பிரயத்தனத்தினூடே
உனக்கான
அத்வைதத்தில்
கலந்து , கரைந்து
காணாமல் போய்
இலையுதிர்காலத்துக்
கிளைபோல்
இளைத்து -
உன் நினைவுகளின்
தூக்குக் கயிறில்
தூக்கிலிடப் பட்டு
துடிக்குமிந்த
சபிக்கப்பட்ட ஜீவனின்
ஒரேயொரு இறுதியாசை !

ஒரு
அஸ்தமனத்தின் முடிவில்
எனது
இறுதித் தேதிகள்
உனது கைகளால்
கிழிக்கப் படவேண்டுமென்பதைத்
தவிர
உன்னிடம்
வேறேதும் வேண்டிலேன் ....
அதனினும் அற்புதம்
இப்பிறவியில் இங்கெனக்கு
வேறேதுமில்லை .

எழுதியவர் : பாலா (12-Jun-14, 12:13 pm)
பார்வை : 140

மேலே