அப்பா புராணம் Mano Red
இவரைப் பற்றி எப்படி எழுதுவது..??
என்று பல முறை எழுதி
எழுதியதை அடித்து,கிழித்து
யோசித்துக் கொண்டே
முடிவுக்கு வந்தது அப்பா புராணம்...!!
அப்பா...!!!
அப்படி என்ன தான் இருக்கிறதோ
அதிசயித்து வியந்து சொல்ல..!!
சாதாரண மனிதனில்
அத்தனை அசாதாரணம்..!!
நாம் என்ன ஆவோம் என்று
நமக்கு தெரியாத போது
நச்சென தலையில் தட்டி
நண்பனாக மாறும்
நல்லவர் அவர்...!!
பாசம் ஒரு வன்முறை,
ஆதிக்கம் செலுத்தும் போது
அடிமை ஆக்கவே நினைக்கும்..!!
இவற்றில் தப்பிச் சென்று
லேசாக வருடுவது
அப்பாவின் பாசம் மட்டுமே,
அப்பாக்களின் கெடுபிடி
கோவம் தந்தாலும்
கெட்டுப் போக விடாது,
விரட்டி அடித்தாலும்
விட்டுக் கொடுத்து விடாது..,!!
உண்மையில் காலம் ஒரு
நீண்ட திரைத் தொடர் போல,
அதில் வாழும்
அப்பாக்கள் ஒருபோதும்
கதாநாயகன் அல்ல
முழுக் கதையும் அவர்களே...!!
அப்பா உங்களுக்கு எத்தனை வயது.?
ஒரே நேரத்தில்
சர்வாதிகாரியாகவும்,
நகைச்சுவையாகவும்
இருக்க உங்களாலே முடியும்..!!
நீங்கள்,
நான்,
என யாரென்றாலும்,
நம் பின்னே இருப்பதும்
இருக்கப் போவதும்
அப்பாக்கள் மட்டுமே...!!