உலக தந்தையர் தினம் 15062014
அன்னையிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை !
ஆய்ந்து அனுபவித்து அறிவித்தவை
அறிவார்ந்த தத்துவ வரிகளே இவை !
அன்னைக்கு இணையாய் தந்தையும்
அகிலத்தில் உயர்வே நமக்கு நிச்சயம் !
உணர்ந்தவர் சிலரே உலகிலே இங்கு
உணர்வார் பலரும் மறைந்திட்ட பிறகு !
அன்போடு பாசத்தை ஊட்டிடும் அன்னை
அனுபவ அறிவால் வழிகாட்டிடும் தந்தை !
வீரத்தோடு விவேகத்தை விளக்கிடுவார்
விளையாட்டில் அடிபதிக்க உதவிடுவார் !
அறநெறி வாழ்வுடன் ஆற்றலை அளிப்பார்
முறையாய் வாழ்ந்திட வழிதனை வகுப்பார் !
முன்னேற்ற பாதையில் வழிநடத்தி செல்வார்
முழுமூச்சாய் பாடுபட்டு நமை வளர்த்திடுவார் !
இலக்கை நாம்அடைய இரவுபகல் உழைப்பார்
இறக்கை முளைத்தாலும் பறக்க உதவிடுவார் !
இதயத்து வேட்கைகளை வேகமுடன் தீர்ப்பார்
இவ்வுலக நடப்பினை அறிந்திட செய்திடுவார் !
பலனையே எதிர்பாராத பன்முக வழிகாட்டி
நம்மை வளர்த்திடுவார் நலமுடனே சீராட்டி !
அக்கறை காட்டிடுவார் அவரும் இறுதிவரை
அடியோடு நாம் மறந்தாலும் நம்மிடம் தந்தை !
அன்னையே நமக்கு உள்ளவரை உயிரெழுத்து
தந்தையே நமக்கு தரணியில் மெய்யெழுத்து !
உயிரும் மெய்யும் இதயத்தில் இருந்தால்தான்
உயிர்வாழலாம் தமிழாய் உலவலாம் மொழியாய் !
பழனி குமார்