ஜஸ்ஸி

அவள் அலுவலகத்திற்கும், வேலை பார்க்கும் இடத்திற்கும் இடைவெளி ஐந்து நிமிட நடை பயணம் ஆகும். போகும் வழியில் சாயங்காலம் செல்ல வேண்டியதை பற்றி யோசித்துக் கொண்டே நடந்தாள். ஆகையால் அவள் எப்போதும் ரசிக்கும் மரங்களும், சிற்சில செடிகளும் அவள் கண்களுக்கு தென்படவில்லை. அவள் பணியாற்றும் தொழிற்சாலை மற்றவற்றை விட அழகு பொருந்தியது.

தொழிற்கூடங்களின் உள்ளே எப்போதும் தக தகவென்று வெந்து கொண்டே இருக்கும். சாதாரணமாக அங்கு பயன்படுத்தபடும் வெப்பம் 300 டிகிரியிருந்து 12௦௦ டிகிரியாகும். ஆனால் தொழிற்கூடத்தை விட்டு வெளியில் காலடி எடுத்து வைத்தால் பச்சை பசேலென்று கண்ணுக்கு விருந்தாக மரங்களும், பூச்செடிகளும், வித விதமான செடிகளும் பராமரிக்கப்பட்டுள்ளன. பலா, நாவல், மா மரக்கனிகள் பல நாள் இரண்டாவது ஷிப்ட் பணியாட்களுக்கு விருந்தாக அமையும்.
அலுவலகம் வந்து கணினியில் மின்னஞ்சல்களை பார்க்கையில்

“ ஜஸ்பீர் வேலையை விட்டு விட்டான் ” என்ற செய்தி அவளுக்கு அதிர்ச்சியை தந்தது. இது உண்மை தானா, ஏனென்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தது.

அவள் சாயங்காலம் அவளுடைய பேட்ச்மேட் நாலைந்து பேர் அவள் பணிபுரியும் பயிற்சி சாலைக்கு வந்திருப்பதால் அவர்களை பார்த்து வர திட்டமிட்டாள். அவர்களும் ஜஸ்பீர் வேலை செய்யும் கிளையில் பணியாற்றி கொண்டிருந்தனர். அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று வேலை முடியும்வரை காத்திருந்தாள்.

வேலை முடிந்ததும் தன் ஹோண்டா ஆக்டிவாவில் அலுவலகம் விட்டு புறப்பட்டாள். அவள் அலுவலகத்திற்கும் பயிற்சிகூடத்திற்கும் மூன்று கிலோமீட்டர் தான். ஆனால் பெங்களூர் சாலை நெரிசலும், அந்த மூன்று மணி அடித்தவுடன் ஈசல்போல் மக்கள் தொழிற்சாலையை விட்டு வெளியே வருவதும் ஒரு திருவிழாவைப் போல் இருக்கும். அந்த நேரத்தில் நாம் வண்டியை எடுத்தால் கட்டாயம் அரைமணிநேரமாகி விடுமென்று சற்றே வண்டியில் அமர்ந்தாள்.

அவர்கள் பணிபுரிவது ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனம். அது இந்தியாவில் பல இடங்களில் தன்னுடைய கிளையை நிறுவியிருந்தது. கூட்டத்தை பார்த்துக்கொண்டு மனதில் பல எண்ணங்களோடு அதில் கரைந்து கொண்டிருந்தாள்.

எவ்வளவு வேகம் மக்களுக்கு? பலருக்கும் இணைக்கும் பேருந்துகளை சரியாக பிடித்துவிடவேண்டுமென்ற கவலை. சிலர் அவர்களின் கடிகாரத்தை பார்த்து கொண்டே பேருந்து போய் விட்டதா இல்லையா என்று தன் சக பயணியை தேடி கொண்டிருந்தனர். ஒரு பக்கம் தக்காளி விற்பவர், மறுபக்கம் ஆப்பிள், ஆரஞ்சு, குடை, டார்ச், சமோசா, புத்தகங்கள் விற்பவர். பாவம் இவர்களுக்கு இருக்கும் பதினைந்து நிமிடத்தில் எல்லாவற்றையும் விற்று விடவேண்டுமென்ற ஆசை. இருபது நிமிடம் கழித்தால் அத்தனை ஜனங்களும் காணமல் போய் அந்த இடமே வெற்றிடமாக காட்சியளிக்கும்.

நிம்மதியாக பரபரப்பை பார்த்து கொண்டேயிருந்தாள். அனைத்தும் அடங்கியபின் மெதுவாக வாகனத்தை எடுத்து புறப்பட்டாள். பயிற்சிசாலையில் வண்டியை நிறுத்திவிட்டு விருந்தினர் வருகை பதிவேட்டில் பெயரை எழுதினாள். உள்ளே நுழைந்தவுடன் விசாரித்ததில் பயிற்சி முடிய இன்னும் அரைமணிநேரம் ஆகுமென்றனர். அரைமணிநேரத்தை கழிக்கவா முடியாது? உள்ளே நுழைந்தவுடன் பழைய பழைய நினைவுகள் பசுமையாக மேலெழ துவங்கின.

ஏழு வருடங்களுக்கு முன்னர் சுமார் நாற்பது பேர் மேனேஜ்மென்ட் டிரெய்ணியாக சேர்ந்தனர். இந்திய முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. அங்கேதான் சந்தித்தாள் ஜஸ்பீர் சிங்கை. எல்லோரும் “ஜஸ்ஸி” என்று சுருக்கமாக அழைப்பார்கள். செல்விக்கு ஜஸ்பீரை பார்த்ததும் தன்னைப்போலவே சற்று குள்ளமாக இருக்கிறானே என்று தோன்றியது. பயிற்சிகாலத்தில் அனைவரும் ஒரே இடத்தில் தங்க வேண்டும். கீழே தாங்கும் அறை, மேலே பயிற்சியறை. ஆகையால் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்க நேர்ந்தது.

ஜஸ்ஸி சண்டிகரை சேர்ந்தவன். பெயர் முடிவதென்னவோ சிங்கில், ஆனால் அவன் தலைப்பாகை அணிந்திருக்கவில்லை. அப்போதுதான் அவளுக்கு தெரிந்தது பஞ்சாபில் தலைப்பாகை அணியாமல் இருப்பவர்களும் உண்டென்று. அவன்தான் பசங்களும் பாத்ருமில் அழுவார்கள் என்ற யதார்த்த செய்தியை சொன்னவன். ஏன் பசங்கள் வெளிப்படையாக அழ கூடாதா, பணத்தை மிதிக்கக்கூடாதா என்றெல்லாம் வாதம் செய்பவன். மிகவும் அமைதியான, பழகுவதற்கு ஏற்ற நண்பனாய் இருந்தான். அவன் தனிமை விரும்பியாகவும் இருந்தான். பல விஷயங்கள் இருவருக்கும் ஒத்து போகவே நல்ல நண்பர்களாயினர்.

அவள் அவளுடைய அறையை நெருங்கியதும் அங்கே வைக்கப்படிருந்த காபி மெஷின் பழைய நினைவுக்கு இழுத்துச்சென்றது. எப்போதும் மூன்று மணி வரை காபி மெஷின் இயங்கிக்கொண்டிருக்கும். அலுவலகம் முடிந்தவுடன் பூட்டி சென்றுவிடுவார்கள். ஆனால் நண்பர்களோ எப்படியோ அதற்கு திருட்டு சாவி கண்டுபிடுத்து விட்டனர். அதுவும் அவளுடைய சூட்கேஸ் சாவி. எப்போதெல்லாம் காபி வேண்டுமோ அப்போதெல்லாம் இவளின் அறைக்கதவு தட்டப்படும். இப்படியே எல்லோரும் செல்விக்கு நண்பர்களாயினர்.

அறைமணிநேரம் கழித்து இவளின் நண்பர்கள் வந்தனர். அவரவர் பரஸ்பரம் நலம் விசாரித்துகொண்டு பழையதை அசைபோட்டு கொண்டிருந்தனர். அப்போது ஜஸ்ஸியின் பேச்சு ஆரம்பித்தது.

“ஏன் ஜஸ்ஸி வேலையை ரிசைன் பண்ணிட்டான்?” என்றாள் செல்வி.

“கொஞ்ச நாளாவே அவன் சரியா பேக்டரிக்கு வர்றதில்லை. ஏதொ குடும்பத்தில் பிரச்சினை. அடிக்கடி அவன் ஊருக்கு போயிடறான். அவனுடைய மனைவி மட்டும் தனியா இருக்கிறா. அப்புறம் ஆபீசிலேயும் கொஞ்சம் பணியாட்களோட தகராறு. அதான் வேற வேலைய பார்த்திட்டான். எல்லோருக்கும் கஷ்டமாதான் இருந்துச்சு.” என்றான் சௌரப்.

“இப்ப எங்க வேலை பார்க்கிறான்?” என்றாள் செல்வி.

“அவன் ஊரிலே இருக்கிற ஸ்டேட் கவர்ன்மென்ட் கம்பனியில் ஜாயின் பண்ணிட்டான்.” என்றான் சௌரப்.

அனைவரும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு விடை பெற்று சென்றனர். அவளும் வீட்டை நோக்கி புறப்பட்டாள். அன்றே மின்னஞ்சல் ஒன்றை ஜஸ்ஸிக்கு தட்டிவிட்டாள். இரண்டு நாட்கள் வேலையில் மூழ்கிவிட்டாள். ஓய்வாக தன்னுடைய மின்னஞ்சலை பார்த்துக்கொண்டிருக்கும் போது ஜஸ்ஸி பதில் அனுப்பியிருந்தான். அதைப் பார்த்து நெகிழ்ந்துவிட்டாள்.

“ உன்னுடைய மெயில் பார்த்து சந்தோசம். இங்கு எல்லோரும் நலம்.

நேரம் எதற்கும் நில்லாதது....நான் கல்லூரியில் படித்ததும், நாம் வேலைக்கு சேர்ந்ததும் இப்போதும் பசுமையாக உள்ளது.... பத்து வருடம் போனது தெரியவேயில்லை...

நம் தொழிற்சாலையில் பணியாற்றியது எனக்கு நல்ல அனுபவத்தை தந்தது... இப்போதும் நினைத்து பார்த்துக்கொள்கிறேன்....ஆனால் நம்முடைய முன்னுரிமைகள் போகப் போக மாறும்.

என் அம்மா 2009ல் ஓய்வு பெற்றார். என் தந்தை 2011ல் ஓய்வு பெற இருந்தது ... நான் எப்போதும் அவர்களை நாசிக் அழைத்து வர வேண்டுமென்றும் ஒன்றாக சேர்ந்து வாழ முடியும் என்றும் எதிர்பார்த்திருந்தேன்.

ஆனால் 2011 நெருங்கியதும் சூழ்நிலைகள் மாற துவங்கின.

என்னுடைய மனநலம் பாதித்த தம்பிக்கு திடீரென உடம்பு மிகவும் மோசமாகிவிட்டது. என்னுடைய தங்கை ஷில்லாங்லில் வேலை பார்த்து கொண்டிருந்தாள். வீட்டில் அவர்களை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை. இதனால் சில நாட்களுக்கு ஒரு தடவை வீட்டுக்கு விரைந்து செல்ல வேண்டியிருந்தது. இது இப்படியிருக்க திடிரென என் அம்மாவுக்கு பக்கவாதம் தாக்கிவிட்டது. எனக்கோ வாழ்வின் மீது விரத்தி வந்துவிட்டது. அப்போதுதான் வீட்டுக்கு பக்கத்தில் இருக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. அவர்களை அவ்வளவு எளிதாக நாசிக் மாற்ற முடியாது என்று தோன்றியது. அவர்களை இடமாற்றம் செய்வது வேருன்றிய மரங்களை பிடுங்குவது போன்றது.... நாம் செடிகளை இடமாற்றம் செய்யலாம் ஆனால் மரங்களை அல்ல...

ஆபீசில் எனக்கு நல்ல பெயர் இருந்தது. அங்கு நல்ல அறிமுகமான முகமும் கூட. அங்கு நல்ல முன்னேற்றமும் இருந்தது. ஆனால் வீட்டு நிலவரம் என் முன்னுரிமையை மாற்றி விட்டது. அப்போதுதான் இப்போதுள்ள வேலை தெய்வமாக பார்த்து கொடுத்த மாதிரி இருந்தது. என்ன கொஞ்சம் சம்பளமும், பதவியும் கம்மிதான், ஆனால் நான் குடும்பத்தோடு செலவிடும் நேரம் அதிகமாக உள்ளது. இது எனக்கு சந்தோஷம் தான்.

எனக்கு பணம் சம்பாதிக்க இன்னும் நெறைய காலமும், வயதும் இருக்கு, ஆனால் என்னோடு என் பெற்றோர்கள் இருக்க மாட்டார்கள். அதை என்னால் என்ன செய்தாலும் சரி படுத்த முடியாது. இங்கே ரெண்டு நாள் லீவு, என்னால வாரவாரம் அவங்களோட இருக்க முடியுது. இப்போ இருக்கிற இடம் நாலு மணிநேரம் தான் எங்க வீட்டிலிருந்து, அதனால அவங்களும் இங்கே அடிக்கடி வர முடியுது.

இப்படி நான் பார்த்திட்டு வந்ததில் என் தம்பியின் உடல்நிலை நன்றாக தேறிவிட்டது. அம்மாவோட பக்கவாதமும் குணமாகிவிட்டது. என் தங்கைக்கு வரன் பார்த்திட்டு இருக்கோம், அவளுடைய டிரான்ஸ்பர்க்கும் அலைய வேண்டியிருக்கிறது. என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.

இதுதான் நான் வேலையை விட்டதற்கான காரணம்.

என்றும் அன்புடன்
ஜஸ்பீர் “

படித்தவுடன் கண்களில் நீர் துளிர்விட்டது செல்விக்கு. இப்போடியொரு நல்ல மனிதனை நண்பனாக பெற்றதை எண்ணி நெகிழ்ந்தாள்.

எழுதியவர் : ஜெயந்தி ஆ (15-Jun-14, 7:39 pm)
பார்வை : 270

மேலே