மஹாபாரதத்தை நேசிக்கிறேன்-5

ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய:

ஆராதிப்பவர்களின் சாரதி...
**************************************
பகவான் கிருஷ்ணனை படைத்துணையாக அழைக்க,
துரியோதனன் மற்றும் அர்ச்சுனன் துவாரகை சென்று
துயில் கொண்டிருக்கும் பகவானின் தலைப்புறத்தில் உள்ள ஆசனத்தில் துரியனும், கால்புறத்தில் அஞ்சலிக்கும் விதமாக பார்த்தனும் அமர்ந்திருக்க, அரிதுயில் நீங்கப்பெற்றவராக கண்ணன் கண்விழிக்க முதலில் பல்குனன் பக்கம் பார்க்கிறார். பிறகே, துரியனைக் கண்ணுற்றார், வந்தக்காரணம் வினவினார்.

துரியன்: போர் மூளும் பட்சத்தில் தனக்கு படைத்துணையாக வருமாறு கேட்டுக்கொண்டான்.

விஜயனும் தனக்கு படைத்துணையாக வருமாறு விண்ணப்பித்தான்.

பகவான் புன்னகைத்து, தருமன் முன்பே தமக்கு துணையாக இருக்க எனைக் கேட்டுள்ளார், அதற்கு அவரிடம், நான் இருக்கும் இடம் தேடி முன்னே வருபவர் யாரோ! அவர் பக்கம் இருப்பேன் என்று வாக்களித்துள்ளேன், என்றார்.

உடனே, துரியன்: மாதவரே! நானே உமது நாட்டுக்கும் வீட்டுக்கும் முன்னே வந்தவன், என்றான்.

தனஞ்சயனோ தன்மையுடன், கண்ணா! அடியேனே உமது கண்ணுக்கும் கருத்துக்கும் முன்னே வந்தவன்;;, என்றான்.

இருவரையும் பார்த்து, என்னை நாடி வந்தவர்கள் யாராகிலும் வெறுமையாகத் திரும்பக் கூடாது.

ஆகையால், குடாகேசா மற்றும் துரியோதனா! ஆயுதந் தொடாத நான் ஒரு பங்கு, ஆயுதம் தொட்டு கடும் போர் புரியும் ஓர் அக்ரோணி சேனை ஒரு பங்கு. உங்களில் நான் முதலில் கண்ணுற்ற சவ்யஸாசி விரும்புவது போக மீதி உனக்கே, துரியோதனா! என்றார் பகவான் கிருஷ்ணர்.

விஷ்ணுவின் வடிவானவர் ஜிஷ்ணுவிடம் வேண்டியதைக் கேள் என்றே வாய்ப்பளித்தார்.

தர்மத்தின் திருவுருவான நீயே! நான் என்றும் வேண்டுவது என்றே பகவானைப் பணிந்தான் கிரீடி.

மேலும், வேத வாகனா! அடியேனுக்கு சாரதியாக வந்தருள வேண்டும் என்றான் சுவேத வாகனன்.

அருந்தபசு புரிந்த பீபத்ஸு! அவ்வாறே ஆகட்டும், என்றார் மாதவன். தம்மை ஆராதிப்பவர்களின் வாழ்வெனும் ரதத்தின் சாரதியாக விரும்பி வருகிறான் இறைவன்.

துரியன் அளவற்ற மகழ்ச்சியில் திளைத்தான். ஆயுதம் ஏந்தாத வாசுதேவன் பல் பிடுங்கிய பாம்பு, ஆக, அவனால் ஒரு பலனுமில்லை என்றே எண்ணியவாறு தமக்கு ஒரு அக்ரோணி சேனைகள் கிடைத்ததே மிகுபலன் என்று அர்ச்சுனனைப் பார்த்து நகைத்தான்.

இதையறிந்த, பலராமர் போரில் பங்கேற்க்காமல் தீர்த்த யாத்திரை செல்ல எண்ணினார்.

(மேற்க்கண்ட நிகழ்வைக் கண்டு, கேட்டு, படிப்பவர்கள் துரியனின் நிலைக்கண்டு எண்ணி நகைப்பவரே உண்டு என்னையும் சேர்த்து ஆனால், நாமும் இறைவன் இருக்குமிடம் தேடிச் சென்றும் ஏதேதோ வேண்டுகிறோம் துரியனைப் போல இறைவனைத் தவிர. ஆக, நாமும் ஒருவகையில் துரியோதனன் தான்)

மேற்க்கண்ட கட்டூரையில் அர்ச்சுனனின் பதினொரு பெயர்களும் இடம்பெறுமாறு எழுதப்பட்டுள்ளது. - “இறையருள்” ரமணபாரதி…

எழுதியவர் : ரமணபாரதி (19-Jun-14, 2:14 am)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 139

சிறந்த கட்டுரைகள்

மேலே