ஆட்டிப் அடைக்கும் சிந்தனைகள் -10

ஆட்டிப் படைக்கும் சிந்தனைகள் -10.

கவிதை என்றால் என்ன என்ற விளக்கமின்மை எல்லொருக்கும் இருக்கும். அப்படி ஒன்று இருக்கவும் வேண்டும். ”எல்லாம் எமக்குத் தெரியும்” என கவிதை சொல்லிய கடவுள் போல் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டால் நாம் எழுதும் கவிதைகளை வழுவின்றி எழுதும் முயற்சியில் வளர்ச்சி ஏதும் அடைய முடியாது. கவிதை எழுதுவதற்கு, வாழ்க்கையில் திருமணத்திற்கு பொருத்தம் பார்ப்பதுபோல் பத்துவகை பொருத்தங்களும் பார்க்க வேண்டும் எனச் சொன்னால், உன் நெனைப்பை செருப்பால்தான் அடிக்க வேண்டும் எனக் கூறுபவர்களும் உண்டு. இதற்கு முன்னர் மங்கலம்,சொல், எழுத்து, தானம் பால் ஆகியவற்றில் பொருத்தம் பற்றி சிந்தனை செய்து இருப்பினும் பசி வந்தால் பத்தும் பறந்து போம் என்பர். இத்தகைய பசிக்கு மருந்தாவது உணவாகும்.

பசிக்கு மருந்தாகும் உணவினை உன்னும் முறையினை,

“நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்து
உண்டாரே உண்டார் எனப்படுவர் அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர் அதுவெறுத்துக்
கொண்டார் அரக்கர் குறித்து”

என ஆசாரக் கோவையில் பெருவாயின் முள்ளியார் பதினெட்டாம் ஆசாரமாகக் குறிப்பிடுகிறார். அத்தோடு நில்லாமல்,

“கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
சிறந்து மிகஉண்ணார் கட்டில்மேல் உண்ணார்
இஅந்தொன்றும் தின்னற்க நின்று”

என எந்தெந்த முறைகளில் உணவு உண்ணக் கூடாது எனவும் விளக்குகிறார். இந்த உணவு பசியைப் போக்கும் மருந்து எனினும் இதுவே நோய்க்கும் வித்தாகும். அதனால்தான்
“உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு” எனக் கொன்றை வேந்தன் கூறியதற்கு ஒப்ப, ”உண்டிக்கழகு விருந்தோடுண்டல்” என வெற்றி வேற்கை முழக்கமிடுகிறது..

விருந்து அளிப்பது என்பது ஒரு தனி கலை. அதற்கு நல்ல மனம் வேண்டும். இப்படித்தான் கவி காளமேகம் திருவரங்கத்தில் ஒருத்தி வீட்டில் சோற்றில் கல்லுடன், காய்ச்சாத புளிக் குழம்பும் உண்ட வெறுப்பில் இவ்வாறு பாடினார்.

“நீச்சல் பெருத்திடு காவேரி ஆற்றை நிலை நிறுத்திச்
சாய்ச்சாள் இலைககறிச் சாற்றைஎல் லாமதுதானும் அன்றிக்
காய்ச்சாப் புளியும் கல்லுடன் சோறும் கலந்து வைத்த
ஆய்ச்சாளை யான்மறவேன் மறந்தால்மனம் ஆற்றிடுமே”

மேற்கண்டவாறு மறக்க முடியாத நிகழ்வை தனக்கே உரிய பாணியில் எடுத்து இயம்புகிறார். உணவு பசிக்கு ஏற்றது போல் அமைய வேண்டும், மனம் நிறைவதாய் இருக்க வேண்டும். அதுவே வாழ்வில் நமக்குப் பிடித்ததாய் இருப்பில் அதனை அமுதென்றும், பிடிக்காத உணவினை அது எவ்வளவு நன்றாக இருப்பினும் அதனை நஞ்சென்றும் கூறுகின்றோம். உணவில் பொருத்தம் இவ்வாறு இருப்பதைப் போலவே கவிதையில், செய்யுளில் பொருத்தம் அமைய வேண்டும்.

இத்தகைய உணவுப் பொருத்தம் என்பது அ,இ,உ, எ என்னும் நான்கு உயிரும் க்,ச்,த்,ந்,ப்,ம்,வ், என்னும் ஏழு ஒற்றும் அமுதெழுத்து எனப்படும் இவை முதற்சீர்க்கும் தசாங்கத்து அயற்குமாம் என சிதம்பரப் பாட்டியல் கூறுகின்றது.

ஆண் பெண் இருபாலுக்கும் அமுதமும் நஞ்செழுத்து என்னும் உண்டியும் உணவும் ஆகும். அவற்றுள் உயிர்க்குறிலும் உயிர்மெய்க் குறிலும் ஆண் எழுத்து. உயிர் நெடிலும் உயிர்மெய் நெடிலும் பெண் எழுத்து. எனவே ஆண்பாலைப் புகழும் இடத்து ஆண் எழுத்துச் சிறப்பு. பெண்பாலைப் புகழும் இடத்து பெண் இடத்து சிறப்பு. ஆணுக்குப் பெண் எழுத்தும் பெண்ணுக்கு ஆண் எழுத்தும் வந்தாலும் பாதகமில்லை ஆயினும் பாவின் கிழத்தி நாமகள் ஆதலின் பெண் எழுத்து அல்லது முன்வைத்து உரையார் என்றார் பிங்கலர். வ, லா, கா ஆகியவை பேடொற்றாய்தம் என்பர். ஒற்றும் ஆய்தமும் அலியும் இவை முன்மொழிக்கு ஆகா என்பர். இதனால் அமுத எழுத்தாவன: கசதநபமவ ஐஉஎ. இவை முதற்சீர்க்கு ஆகும். தசாங்கத்து அயற்கும் வைக்கப்படும்.

அமுத எழுத்து அல்லாத எழுத்தும் மகரக் குறுக்கமும் ஆய்தக் குறுக்கமும் உயிரளபெடையும் ஒற்றாளபெடையும் ஆய்தமும் நஞ்செழுத்தாம். இவை முதன்மொழிக்கண் வைக்கில் தீதே என்று கற்றுணர்ந்தோர் சொல்லுவர். இதனால்தான்

அமுதென விடமென வருமிரு வகையும்
உணவெனப் புலவர் உரைத்தனர் உளரே

என பன்னிரு பாட்டியல் இயம்புகிறது

iயாப்புடன் மரபு இலக்கணம் பிறழாமல் எழுதுபவர்களே இந்தப் பொருத்தம் எல்லாம் பார்க்க வேண்டும். இன்றைய நவீன புதுக் கவிதைக்கு இது தேவையா என நம்மை இது சிந்திக்க வைக்கிறது. இன்றைய நவீன கவிதை பன்முகப் பரிமாணம் கொண்டதாக இயங்கி வருகிறது. இவற்றில் எளிய சொற்கள், இளகிய தெளிவான வடிவம், உரைநடைச் சாயல் தாங்கி, தன்னிலை சார்ந்தும் புனைவு சார்ந்தும் படைக்கப் படுகின்றன. இன்னவகை கவிதை என அடையாளத்தை தேட முயல்வதும் அப்படி ஒரு அடையாளத்தை தர மறுத்து வாசகர் தம் விருப்பு வெறுப்பு அறிவுத் திறத்துக்கேற்ப புரிந்து கொள்ளட்டும் என்று விட்டு விடுதலையாகி வெளிவருபவையும், தர்க்கிக்க தேவையின்றியும் வெளிப்படுத்தப் படுகின்றன.

உண்மையில், ஒரு கவிதை எழுத மெய் அனுபவம் தேவையில்லாதபோது கற்பனைத் தூரிகை கொண்டு புனைவு நம்பிக்கை ஓங்கி ஒலிக்கும் சூழலில் படைப்பாளி ஒரு சமூகப் பிரஜையாக, தன் தனிமனித இருப்பினையும் சக மனிதர்பால் உள்ள பொறுப்பினையும் உணர்ந்தவனாய் ஆவனப் படுத்த முயலும் விழைவே கவிதையென உருவாகி வெளி வருகிறது. இத்தகைய கவிதை கலாச்சாரக் கண்ணாடியாக ஒளி விலகியும், ஒளிச் சிதறல் இன்றி அப்படியே பிரதிபலிக்கும் ஊடகமாகவும் ஒளி வீசலாம்.

நவீன கவிதைகள் சிறந்த திறந்தனிலை வடிவம் கொண்டவை.. பெரும்பாலும் மனிதரின் மன உணர்வுகளையும், மன சஞ்சலங்களையும் கொண்டவையாகி மொழிச் செறிவுக்கோ, மரபு பயன்பாட்டுக்கோ முக்கியத்துவம் அளிக்காமல், மரபை மீறிய வெளியில், வாழ்வனுபவத்தை நம்பிப் படைக்கப் படுபவை என்பதால் இவற்றில் எதார்த்தம் அதிகம். இப்படிப்பட்ட கவிதைகள் ‘தன்னையறிதலை’ திறம்பட்ட தேடலாக்கி, தாம் காணுகின்ற இயற்கைக்கு கண் காது மூக்கு என செயற்கையாக எதனையும் சேர்க்காமல் பாடி, தனக்கு உலகினில் உறவு கொள்வதற்கு இருந்த இருக்கிற சொந்தங்களின் உறவு நிலையை பரவலாக்கிப் பேசும் தன்மை உடையவை..

சென்ற நூற்றாண்டில் வால்ட் விட்மனின் கவிதைகள் தந்த தாக்கத்தில், மரபை மீறிப் படைக்கப் பட்ட புதுக்கவிதை என்ற பெயர் முதன்முதலில் ந.பிச்சமூர்த்தி எழுதிய கவிதைகட்கே வழங்கப்பட்டது. பாரதிக்குப்பின் பேசப்பட்ட முதல் புதுக்கவிதை படைப்பாளி ஆன அவரைத் தொடர்ந்து, பிரமீள், நகுலன்,சி.மணி, சுந்தரம் ராமசாமி போன்றோரின் படைப்புக்கள் புதுக்கவிதை உலகினை ஆட்டிப் படைக்கும் ஒரு இயக்கமாகவே செயல்பட்டன…

புதுக்கவிதைக்கு, அதிலும் திறந்த நிலைக் கவிதைக்கு எளிய சொற்கள், தெளிவான வடிவம், உரைநடைச் சாயல் போன்றவை எழுதப்படாத இலக்கணமாக படைக்கப்பட்ட நிலையில் ‘கசடதபற’ இதழில் ‘தீர்வு என்ற பெயரில் வெளியான கவிஞர் சி. மணியின் கவிதைகளில் ஒன்றினை இங்கு பதிவு செய்கின்றேன்.

என்ன செய்வ
திந்தக் கையை
என்றேன். என்ன செய்வதென்றால்
என்றான் சாமி. கைக்கு வேலை
என்றிருந்தால் பிரச்சினை இல்லை
மற்ற நேரம், நடக்கும் போதும்
நிற்கும் போதும் இந்தக் கைகள்
வெறும் தோள்முனைத் தொங்கல், தாங்காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன். கையைக் காலாக்கென்றான்.

இந்த எளிய உரையாடல் பாணிக் கவிதை கைக்கு வேலை இன்றேல் என்ன செய்வது என நம்மை, அதைப்பற்றிய ப்ரக்ஞை இல்லாத நம்மை யோசிக்க வைக்கிறது. நாம் என்ன செய்கிறோம்,என நம்மை சிந்திக்க வைக்கிறது.


சென்ற நூற்றாண்டைத் தொடர்ந்து நவீன கவிதை என்ற பெயரில் எழுதுபவர்கள் எதைப் பற்றி எல்லாமோ எழுதுகிறார்கள். அண்மையில் சாதாரணமாக எழுதப்பட்ட ஒரு கவிதையை இந்தப் படிமக் கவிதகள் எல்லாம் எமக்குப் புரிவதில்லை. சற்று விளக்குங்கள் என ஒரு நல்ல கவிஞர் ஒருவர் என்னைக் கேட்டார். படிமம் என்றால் என்ன என்பதே தெரியாத நிலையில் பல பேர் படிமக் கவிதைகள் எழுத முயல்வதையும் காண்கிறோம். முதலில் படிமக் கவிதைகள் என்றாலே தமிழில் நமக்கு நினைவுக்கு வருபவர் பிரமிள் ஒருவர் மட்டுமே.

மின்னல் எனத் தலைப்பிட்டு அவர் எழுதிய கவிதை ஒன்றினை இங்கு மீள்பதிவுசெய்கிறேன்.


ககனப் பறவை
நீட்டும் அலகு
கதிரோன் நிலத்தில்
எரியும் பார்வை
கடலுள் வழியும்
அமிர்தத் தாரை
கடவுள் ஊன்றும்
செங்கோல்.

சாதாரணமாய் நம் கண்களில் மின்னல் தோன்றும்போது கண்களை மூடிக் கொள்கிறோம், அல்லது முகத்தை திருப்பிக் கொள்கிறோம். இடியுடன் மின்னல் வரும்போது காதுகளை பொத்திக் கொண்டு வேறெங்காவது போய் விடுகிறோம். படிமக் கவிஞர் பிரமிளின் பார்வையில் அது நான்கு காட்சிகளை நினைவில் கொண்டு வருகிறது. ஒரு பொருள் பற்றிய பன்மைக் காட்சிகளை பல படிமங்களில் தொகுத்து எழுதுவதே படிமம் என்றால் இந்தக் கவிதை அதற்கு ஒரு நல்ல உதரரணமாய் அமைந்துள்ளது.. வானத்துப் பறவையின் அலகாய், சூரியனின் எரி பார்வையாய், கடலில் வழியும் அமிர்தத் தாரையாய் கடவுளின் செங்கோலாய் அது அவர்க்குப் பட்டது போல் பிற எவர்க்கும் இதுவரை படவில்லை என்பதே அவரை தனிமைப் படுத்தி படிமக் கவிஞர் என உயர்த்திக் காட்டுகிறது.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (18-Jun-14, 3:22 pm)
பார்வை : 330

சிறந்த கட்டுரைகள்

மேலே