கனவு

கனவு
கனவு என்பது ஒவ்வொருவருவரும் கட்டணம் தராமல் காணும் காட்சிகள் கொண்ட பட தொகுப்பு, இந்த காட்சிகளில் அந்த ஒவ்வொருவரும் விருப்பபட்ட காட்சிகள் தான் வரும் என்பது உத்தரவாதமில்லை என்றாலும் ஏதேனும் ஒரு முறை அல்லது ஒரு நாள் அவர்கள் உள் மனதில் எழுந்த ஆசைகள், எண்ணங்கள் இவைகள் கூட அந்த காட்சிகளில் வெளிப்படலாம்
இந்த கனவை கண்டு விழித்த பின் அவர்களுக்கு அந்த கனவில் கண்டவைகள் சம்பந்தமில்லாதவைகள் போல் சில நேரங்களில் தோன்றினாலும், உண்மையில் அவர்கள் அந்த காட்சியை அல்லது நிகழ்வை திரைப்படம்,அல்லது ஏதேனும் ஊடகங்கள் வாயிலாகவோ அல்லது நேரிலோ என்றோ பார்த்தது அல்லது பிறர் சொல்ல கேட்டதாகவோ, இருந்திருக்க வேண்டும். காரணம் “அவரவர்கள் காணும் கனவு” என்பது அவர்கள் சம்பந்தபட்ட நிகழ்ச்சிகளே பெருமளவில் ‘காட்சிகளாக’ அவர்களுக்கு தோன்றும்.
இதை ‘அறிவியல்’ பூர்வமாக விக்கி பீடியா என்ன சொல்கிறது என்றால் கனவு என்பது ‘ஒலிப்பு’ என தமிழில் விளக்குகிறது. ஒருவர் தூங்கும் பொழுது அவரது மன படிமங்கள், காட்சிகள், உணர்வுகள், ஓசைகள், நிகழ்வுகளை குறிக்கிறது.கனவு காணும் பொழுது அவர்களது கண் அசைவுகளை காணப்படுவதில் இருந்து இவை அவதானிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், கனவு என்றால் என்ன? என்பது தொடர்பான முழுமையான அறிவியல் புரிதல் இன்னும் இல்லை. மூளையில் உள்ள நினைவு குறிப்புகளை ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தும் செயல்பாட்டின் விளைவாக இருக்கலாம். இது அனைத்து வகையான பாலூட்டிகளிடமும் காணப்படும் என்று தெரிவிக்கிறது.
என்றாலும் கனவு என்பது ‘பாலூட்டி’ வகையை சேராதவைகளிடமும் இருக்கும் என்பது இந்த கட்டுரையாளனின் எண்ணம். காரணம் தூங்கும் எந்த உயிரினமும் கனவு காண வாய்ப்பு இருக்கும் என்பதுதான். காரணம் தூக்கம் என்பது “ஓய்வு” என்றுதானே இருக்கும். அப்படி தூங்கும் போது உடலில் எல்லா உறுப்புக்களும் சற்று ஓய்வு நிலையில் இருக்க, அப்பொழுது அவர்களின் மூளையில் பதித்து வைக்கப்பட்டிருந்த நிகழ்வுகள், ஒன்றை ஒன்று தொடர்புபடுத்தி காட்சி படுத்த வாய்ப்பு இருக்குமல்லவா..?
கனவு ஏன் வருகிறது? என்னும் கேள்விக்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் ஒன்று தரப்படுகிறது. பொதுவாக REM (rapit eye movement) தூக்கத்தின் போது கனவுகள் ஏற்படுகின்றன, உறக்கத்தின் ஆழமான நிலை,விரைவான மற்றும் ஒழுங்கற்ற கண்களின் இயக்கம், மற்றும் சுவாசம், இதயதுடிப்பு இவைகளில் ஏற்படும் மாற்றங்கள்.
ஏன் கனவு வருகிறது? என்னும் கேள்விக்கு “கனவு என்பது கற்பனை மட்டுமல்ல, நினைவகம், மற்றும் உணர்ச்சிகள், ஆக்கபூர்வமான சிந்தனைகள், இவற்றின் சிக்கலான கலவை. நமது ஆன்மாவின் ‘ஆழத்திற்கு’ ஒரு தனித்துவமான சாளரமாக இவை இருக்கின்றன. நமது ஆழ்ந்த அச்சங்கள், ஆசைகள், மற்றும் பதப்படாத உணர்ச்சிகள் பற்றிய நுண்ணுர்வுகளை வெளிப்படுத்துவதுதான் இத்தகைய ‘கனவு’.
கனவை மொழி அழகு தமிழ் என்ன சொல்கிறது என்பதை காண்போம்; இதற்கு ஒலிப்பு, சொப்பனம் என சொல்லலாம். இதன் பொருள் தூக்கத்தில் மன திரையில் எழும் காட்சி.
திருக்குறள்: காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாது செய் வேன்கொல் விருந்து
விளக்கம்” பிரிவால் வருந்திய நான் அயர்ந்து கண் உறங்கிய போது காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுற்கு யான் விருந்தாக என்ன கைமாறு செய்யப்போகிறேன்? –புலியூர் கேசிகன்
கயலுன்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்
யான் விரும்பும்போது என் கண்கள் தூங்குமானால் கனவில் வந்து தோன்றும் காதலர்க்கு யான் தப்பி பிழைத்திருக்கும் தன்மையை சொல்வேன்.- மு.வரதராசன்
கனவை பல்வேறு சொல் வளப்படுத்தினால், ஊமையன் கனவு, இன்ப கனவு லட்சிய கனவு, துன்ப கனவு,
உங்கள் கனவு “நனவு” ஆகட்டும்: நனவு- விழிப்பு,நினைவு (சிலப்பதிகாரம் நனவு போல் நள்ளிரவுயாமத்து கனவு கண்டேன் கடிதீங் குறுமென”)
பேச்சு வழக்கில் “கனா”
நம் மனித வாழ்க்கையில் கனவு தரும் நம்பிக்கைகள் என்ன சொல்கின்றன?
கனவில் வரும் நிகழ்வின் அடிப்படையில் நல்ல கனவு கெட்ட கனவு என பிரிக்கப்படுகிறது.
இதில் நேர்மறையான நம்பிக்கைகள் கூட மனிதரிடத்தில் வழங்கப்பட்டு வருகிறது அதாவது கெட்ட கனவாய் இருந்தால் வெளிப்படும் நிகழ்வு நன்மையையும், நல்ல கனவு ‘தீய நிகழ்வை’ நடத்தும் என்னும் நம்பிக்கையும் உண்டு.
உளவியல் அறிஞர் “சிக்மண்ட் பிராய்ட்” ஆய்வுகள் பெரும்பாலும் கனவுகளை பற்றிய அடிப்படை கொண்டவையே.
கனவு பற்றிய நம்பிக்கைகளை சிலது கொடுக்கப்பட்டுள்ளது, இவைகளை பற்றிய எந்த தனிப்பட்ட எண்ணமும் கட்டுரையாளருக்கு இல்லை என்றாலும் கட்டுரை தரும் தகவலாக இதை கருத்தில் கொள்ளலாம்.
ஏர் உழுவதாக கனவு கண்டால் எடுத்த காரியம் தாமதமாகும்
திருமணம் பற்றிய கனவு கண்டால் தீயது நடக்கும்
கனவில் தாமே இறந்து விட்டதாக கனவு கண்டால் ஆயுள் பெருகும்
மரணத்தை கனவில் கண்டால் சுகமாகும்
இறந்தோர் வந்து கனவில் அழைத்தால் மரணம் வரும்
நல்ல கனவு கண்டு விழித்தால் பின் தூங்க கூடாது.
இன்னும் நிறைய நம்பிக்கைகளை நாம் வழக்கத்தில் வைத்திருக்கிறோம்.
கனவுகள் சொல்லும் ரகசியங்கள்
ஒருவருடைய கனவுக்கு ஒரு ‘காரணி’ இருக்கலாம், அல்லது பல ‘காரணிகள்’ இருக்கலாம், கனவு காண்பவருடைய ‘அடிமனம்’ வரை தெரிந்தால்தான் கனவின் அர்த்தத்தை கூறமுடியும். கனவுகள் என்பது நாம் நடக்க வேண்டுமென்று நினைப்பது மட்டுமல்ல, செய்ய தவறிய, அல்லது அதை அறியாமல் கூட இருப்பது, இவற்றை கனவுகள் நமக்கு நினைவு படுத்தலாம். அல்லது ஒரு சம்பவத்தின் ஆசைகள், உணர்வுகளாக கூட இருக்கலாம்.
“கீற்று” இலக்கிய இதழில் ஒரு கட்டுரை “கனவை பற்றி இப்படி சொல்கிறது”
உடல், மனம், மற்றும் உயிர் ஆகியவை சங்கேதமாக தொடர்பு கொள்ளும் சூழலையே ‘கனவு’ என்கிறோம்.
கனவுகள் ஏன் நீண்ட காலம் நினைவில் இருப்பதில்லை என்பதற்கும் இந்த கட்டுரை ஒரு விளக்கம் கொடுக்கிறது, கனவு காணும் போது மூளையில் நார் அட்ரீனல், மற்றும் செரடோன்களின் அளவுகள் வீழ்ச்சி அடைகின்றன, இதனால் நினைவில் அதிகம் வைத்து கொள்ளமுடிவதில்லை என்கிறது.
எது எப்படி இருப்பினும் கனவை பற்றி அறிவியல் பூர்வமாகவோ அல்லது நம்பிக்கை சார்ந்தோ பலரும் பலவிதமாக குறிப்பிட்டாலும் நம்மை பொருத்தவரை மனித வாழ்க்கையில் நம்மை ஒரு சில நேரங்களில் தூண்டும் உணர்வுகளாகவும், சில நேரங்களில் துன்பபடுத்தும் உணர்வுகளாகவும் இருக்கிறது.
அப்படி இருந்தால் தான் “கனவு” என்பது நமக்கு சுவாரசியமானதாக இருக்கிறது என்பதில் என்ன சந்தேகம்?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (16-Oct-24, 8:43 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kanavu
பார்வை : 220

மேலே