வெறுங்கையோடு போவோம்
வெறுங்கையோடு போவோம்..!
11 / 10 / 2024
"I want to remember your face so that when I meet you in heaven, I can recognize you and thank you once again."
என்னை கவர்ந்த...என்னை பாதித்த..எனக்குப் பிடித்த ஒரு வாசகம். இது மறைந்த ரத்தன் டாடாவுக்கு பிடித்த.. அவரை மாற்றிய...அவர் வாழ்வை தடம் மாற்றிய ஒரு வாசகம் என்று அவரே சொல்லியிருக்கும் ஒரு வாசகம். மகிழ்ச்சியைத் தேடி, மன நிறைவைத் தேடி அவர் அலைந்த போது, பணமோ..புகழோ.. அதிகாரமோ கொடுக்க முடியாத மகிழ்வை மன நிம்மதியை கொடுத்த ஒரு நிகழ்வு. உடல் ஊனமுற்ற குழந்தைக்கு சக்கர நாற்காலி கொடுத்த விட்டு புறப்படும்போது அவரின் காலை பற்றி அவரின் முகத்தைப் பார்த்து ஒரு குழந்தை சொன்னதாக ஒரு பதிவு. அவருக்குள் அத்தருணம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக அவரே பதிவிட்ட ஒரு பதிவு. அவருக்கு நேரிடையான ஒரு அனுபவம். ஆனால் அதை படித்த போது எனக்குள்ளும் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. ஒரு தெய்வீக ஒளி ஒன்று என்னுள்ளே ஒளிர்ந்தது. அதை உங்களோடு பகிர்வதுதான் இந்த பதிவு.
ஆம். எதை செய்தாலும் அதை இங்கிருந்து..இங்கு இருப்பதை கொண்டுதான் செய்ய முடியும். எதை அனுபவித்தாலும் இங்கிருந்து இங்கு இருப்பதைத்தான் அனுபவிக்க முடியும். பிறக்கும்போது நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. போகும்போதும் நாம் எதையும் கொண்டு போகப் போவதுமில்லை. இங்கு இருப்பவை யாவும் எல்லோருக்கும் சொந்தம். எல்லோருக்கும் பங்கு இருக்கிறது. நாம் அனுபவித்ததை....நாம் கொண்டாடியதை... நாம் பட்டதை...நாம் படித்ததை...நாம் சம்பாதித்ததை.. நாமும் அனுபவித்து, சக மனிதருக்கும் பங்கிட்டு கொடுத்தால்..நம் வாழ்வில் நிம்மதியும் மகிழ்வும் கூடும். பங்கிட்டு கொடுப்பது என்பது நம் தலையாய கடமைகளில் ஒன்று. இதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்த்து, வாழ்வில் கடை பிடிப்போமானால் வீண் சண்டை சச்சரவுகள் ..தேவையில்லாத மன கசப்புகள், மன வேற்றுமைகள் குறைந்து.. ஏன் மூன்றாம் உலகப் போர் கூட வராமல் தடுக்க முடியுமே. இதை இம்மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் நினைக்க வேண்டும். வாழ்நாள் முழுதும் பின்பற்ற வேண்டும்.
உமக்கு ஒன்று தெரியுமா? உமக்குத் தெரியாததையா சொல்லிவிடப் போகிறேன்?. நானும் உங்களில் ஒருவன்தானே. ஏதோ எனக்குத் தோன்றியதை எழுதுகிறேன். பிடித்திருந்தால் பாராட்டுங்கள். நம் அனுபவத்தை பிறரிடம் பகிரும்போது, விட்டுப்போன சில விஷயங்கள், விட்டுப்போன சில தவறுகள், விட்டுப்போன சில யோசனைகள் நம்மால் எண்ணிப்பார்க்க முடியும். தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்ள முடியும். ஒரு வாய்ப்பாய் அமையும். தப்பை சரி செய்து நெறிப்படுத்த முடியும். பகிர்வதில் இத்தனை நன்மைகள். சில அந்தரங்க விஷயங்களை பகிர்வதில் கொஞ்சம் நிதானிக்க வேண்டும். இல்லை..ரகசியங்களை பகிராமல் இருப்பதே மேல்.
சரி நாம் ரத்தன் டாடாவின் பகிர்வுக்கு வருவோம். "உங்கள் முகத்தை காட்டுங்கள். சொர்க்கத்தில் உங்களைப் பார்க்கும்போது ஞாபகமாய் மீண்டும் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்" என்று அந்த குழந்தை சொல்லி இருக்கிறது. வார்த்தைகள் உதட்டில் இருந்து வந்தவை அல்ல. மனதின் ஆழத்திலிருந்து வந்து விழுந்த வார்த்தைகள். ஆம். நம் எதிராளியைக்கூட சொர்க்கத்தில் காண வேண்டும் என்கின்ற நல்ல உள்ளம்..நல்ல எண்ணம் நம் எல்லோருக்கும் வேண்டும். தானாய் வராது. நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒருநாள் செய்த உதவிக்கே இந்த வேண்டுதல் என்றால்...தினம்தினம் செய்தால்.. எப்படி இருக்கும்?. " வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்ற வள்ளுவன் வாக்குக்கிணங்க நாம் உயிரோடு இருக்கும் வரை, நம்மோடு பிறந்த பிற உயிர்களுக்கு நம்மால் ஆன சிறு உதவிகள் பணமாகவோ.. பொருளாகவோ இல்லை தார்மீக ஆதரவு கொடுத்தால் கூட போதுமே. செய்வதை ஆத்மார்த்தமாய் செய்ய முயற்சிப்போம். நமக்கு ஒருவர் உதவியோ இல்லை நன்மையோ செய்தால், நாம் உயிரோடு இருக்கும் போதே..அப்பொழுதே,,அந்த சனமே நன்றி கூறுவோம். கூறுவது மட்டுமல்ல வாழ்நாள் முழுதும் நன்றியோடும் இருப்போம்.
ஒரு சிறு உதவிதான் செய்தான் துரியோதனன். அதுவும் அவன் சொந்த லாபத்துக்காக. செஞ்சோற்று கடன் தீர கட்டுப்பட்டு கிடந்தான் கர்ணன். கர்ணனுக்கு கிடைத்ததோ கிருஷ்ண தரிசனம். துரியோதனனுக்கோ துர்மரணம். அப்படியென்றால் தீயவர் செய்யும் நன்மைக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டுமா? நன்றியோடு இருக்க வேண்டுமா? சிறு குழப்பம் ஏற்படுவது சகஜம்தானே. நீ நேர்மையாய் இருந்தால் உன் நோக்கம் நேர்மையாய் இருந்தால் நீ எதற்கும் பயப்பட வேண்டாம். உனக்கு உண்டானது உனக்கு கிடைக்கும். அவனுக்கு உண்டானது அவனுக்கு கிடைக்கும். வலக்கையில் நாம் ஏதாவது செய்தால், அது பல மடங்காய் பெருகி உனக்குத் திரும்பி வரும். அது எதுவாக இருந்தாலும். ஒவ்வொருவர் முகத்தையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுவோம்.வாழ்நாளில் முடியவில்லை என்றாலும் இறந்தபின் சொர்க்கத்திலாவது மறக்காமல் நாம் நன்றி சொல்ல முயலுவோம். உயிரோடு இருக்கும்வரை மனித நேயம் போற்றுவோம். சாதி, சமய, ஏற்றத்தாழ்வுகளை களைவோம். இங்கிருந்து எடுத்ததை..இங்கிருந்து அனுபவித்ததை இங்கேயே பகிர்ந்து கொடுப்போம். வெறுங்கையோடு வந்ததுபோல் வெறுங்கையோடு போவோம்