வனமுலைமேற் கோலஞ்செய் சாந்தந் திமிர்ந்து – நாலடியார் 397
நேரிசை வெண்பா
(இடையின எதுகை)
ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
மாலைப் பொழுதில் மணந்தார் - பிரிவுள்ளி
மாலை பரிந்திட் டழுதாள் வனமுலைமேற்
கோலஞ்செய் சாந்தந் திமிர்ந்து! 397
- காமநுதலியல், நாலடியார்
பொருளுரை:
ஏடுகளிற் கணக்கெழுதுங் கணக்கரது அலுவல் தொடர்பான ஆரவாரம் அடங்குகின்ற புல்லிய சிவந்த அந்திப்பொழுதில், தலைவி தன்னை மணந்த கணவரது பிரிவை நினைந்து தான் சூடியிருந்த மலர் மாலையை அறுத்தெறிந்து தன் அழகிய கொங்கையின்மேல் தொய்யிலெழுதி அழகு செய்திருந்த சந்தனத்தையும் கலைத்துதிர்த்து அழுவாளாயினள்.
கருத்து:
பிரிவுள்ளி இரங்கும் அன்பினால் உடலும் உயிருங் குழைந்து பயனுறுதலையுடைய செவ்வியைப் பெறும்.
விளக்கம்:
ஒலி, கணக்குத் தீர்த்தலும் அதுபற்றிப் பேசுதலுமான ஆரவாரம். ஒலியடங்குதல், வேலையோய்தல், இக்கருத்து முன்னும் வந்தது.1 செக்கரென்றது, அந்திவானத்தின் செவ்வொளியை நினைந்து, கோலஞ் செய்து மாலை சூடியிருந்தமையால் பிரிவு மேல் நிகழ இருப்பதெனக் கொள்க. திமிர்தல், ஈண்டுத் தேய்த்துதிர்த்தல், பிரிவாற்றாத தலைமகளின் நிலைமையைத் தோழி, தலைமகன் கேட்பத் தன்னுள் இரங்கிக் கூறியது.