பையெனப் பையெனவென்று அஞ்சிப்பின் வாங்கும் அடி – நாலடியார் 396

நேரிசை வெண்பா

அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோ
பரல்கானம் ஆற்றின கொல்லோ - அரக்கார்ந்த
பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்(று)
அஞ்சிப்பின் வாங்கும் அடி. 396

- காமநுதலியல், நாலடியார்

பொருளுரை:

’செந்நிறம் பொருந்திய ஆம்பல் மலரைப் போல நறுமணத்தோடு விளங்கும் வாயையும் அழகிய இடையையும் உடைய நம் புதல்விக்கு, ஆ! ஐயோ! அழகுக்காகச் செந்நிற மிக்க செம்பஞ்சிக் குழம்பைத் தடவினாலும் ‘மெதுவாக, மெதுவாக' வென்று அஞ்சிக் கூறிப் பின் இழுத்துக்கொள்ளும் அத்துணை மெல்லிய அவளுடைய பாதங்கள் தலைவனோடு உடன்போக்கிற் பிரிந்த இப்போது பரல் கற்களையுடைய கானத்தில் செல்லப் பொறுத்தனவோ?’ என்று செவிலித்தாய் தன் மகள் உடன்போக்கில் பிரிந்து சென்ற துயரத்தின் அருமை நினைந்து இரங்கியது சொல்லப்படுகிறது.

கருத்து:

எத்தகைய இன்னலையும் தலைவனுடன் தாங்குதலால் காதல் மேலும் மாட்சிமைப்படும்.

விளக்கம்:

அரக்காம்பல், செவ்வாம்பல் நாறும் என்றதனால் மணமும் கொள்க.
மருங்கு – ஆகுபெயர், ‘மருங்கிற்கு அடி கானம் ஆற்றினவோ' என்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Oct-24, 1:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

சிறந்த கட்டுரைகள்

மேலே