எங்கெங்கும் அரசியல்

எங்கெங்கும் அரசியல்
இன்று நம் வாழ்க்கையில் நாம் விரும்புகிறோமோ இல்லையோ ‘அரசியல்’ நம்மை விரும்பி பிடித்து கொள்கிறது. நான் எந்த வம்புக்கும் செல்ல மாட்டேன், ‘நானுண்டு என் வேலையுண்டு’ என்று பதவிசாக சொல்லி கொள்பவர்கள் கூட ஏதோ ஒரு வகை ‘அரசியல்’ என்னும் சூறாவளியால் சிக்கி கொள்ளத்தான் வேண்டும்.
‘அரசியல்’ என்றவுடன் நீங்கள் தற்போதைய அரசியல்வாதிகள் செய்யும் கூத்தை மட்டும் நினைத்து கொள்ளாதீர்கள். அவர்கள் அத்தகைய ‘கூத்தை’ அடித்தால்தான் நம்மை ஆட்சி செய்யும் அதிகாரத்தை கைப்பற்ற முடியும். அதாவது நாமே அவர்களின் ‘கூத்தை’ பார்த்து மயங்கி (பல வித தந்திரங்கள்) அவர்களை “இந்தாப்பா நீதான் எங்களை ஆள சரியான ஆள்” என்று தேர்ந்தெடுத்து விடுவோம்” என்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.
நம்மை போன்ற ஆட்கள் அந்தளவுக்கு எல்லாம் அரசியல் செய்து ஆட்சியை பிடிக்க அல்லாட போவதில்லை, என்றாலும் நாம் அன்றாடம் சந்திக்கும் அரசியல் என்பது இதோடு ஒத்து போனாலும், அன்றாட வாழ்க்கையில் சமுதாய சிக்கலில் சிக்கி கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த அரசியலில் இருந்து தப்பி பிழைத்தால் போதும் என்னும் நம்பிக்கையில் வெளி வர போராடுகிறார்கள்.
ஒரு நிறுவனத்தில் உத்தியோகம் பார்க்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், அங்கு நிலவாத அரசியலா? ஜூனியர்,சீனியர், அடுத்து சொந்த சாதிக்காரன், அல்லது நண்பன், இப்படி எண்ணற்ற எண்ணங்கள் ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் தோன்றி மற்றவனை பணி செய்ய விடாமல், அல்லது முன்னேற விடாமல் அல்லோ களப்படுத்தி விடுகிறது. இது தனியார் துறை என்றாலும் அரசு துறை என்றாலும் எல்லாம் ஒன்றுதான், என்ன ஒரு விசயம்,தனியார் துறை என்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே கல்தா கொடுக்கப்படுகிறது, அரசு என்றால் பணியாளர் மாற்றப்படுகிறார்.
பணி செய்யும் இடம் உதாரணமாக சொல்லப்பட்டதே தவிர உண்மையில் “எங்கெங்கு நோக்கிடும் அரசியல்” இதுதான் உண்மை.
வீட்டில் ஒன்றாக வசிப்பவர்களிடம் கூட அவர்கள் அறியாமல் ஒவ்வொரு வருக்குள்ளும் அரசியல் மனப்பான்மை இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இங்கு சமுதாய அரசியல் என்பது குழுக்களாகவும் செயல்படும், தனியாக சிக்கி கொண்டாலும் அவர்களை உண்டு இல்லை என்று செய்தும் விடும்.
அப்படியானால் அரசியல் என்பதன் அர்த்தம் என்ன? பிறரை கவிழ்ப்பது, காட்டி கொடுப்பது, நம்ப வைத்து கை கழுவுவது, இப்படி பட்ட காரியங்களைத்தான் அரசியல் என்கிறோமா?
முழுவதுமாக சொல்வதானால் ‘அரசியல் என்பது தவறான போக்கு முறை’ என்று எடுத்து கொள்ளலாமா?
அப்படியானால் இன்றைய காலகட்டத்து விளம்பரங்களை எப்படி எடுத்து கொள்ளலாம்? அவைகளில் எத்தகைய உண்மைகள் இருக்கின்றன? அப்படி அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களின் உண்மை தன்மையை நுகர்வோரிடம் சொல்லி வாங்க சொன்னால் நுகர்வோர்தான் வாங்குவார்களா? அல்லது இதை நம்புவார்களா?
அதனால் ஒவ்வொரு தயாரிப்பும் அதிகபட்ச உபயோகப்படும் பொருளாக காட்டப்பட்டு விளம்பரம் செய்யப்படுகின்றன.ஒரு பொருளுக்கே இத்தகைய செயல்பாடுகள் தேவைப்படும்போது நம்மை அதிகாரம் செய்யும் பதவிக்கு வர நினைக்கும் அரசியல்வாதிகள் செய்யும் கூத்துக்கள் சில நேரங்களில் நியாயமாகத்தான் தோன்றுகிறது. அதே போல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வெளிப்படுத்தும் அரசியல் மனப்பான்மை அவர்களை எப்படியாவது முன் வரிசைக்கு கொண்டு வர வைக்க செய்யும் செயல்தானே..!
இத்தகைய போக்கினால் இன்று பெரும் பெரும் தலைவர்களாக செயல்பட்டு கொண்டிருக்கும் அரசியல்வாதிகளே உண்மைக்கு மாறான கருத்துக்களை சர்வ சாதாரணமாக பொது வெளியில் பேசுகிறார்கள்.
அக்கம் பக்கம் வசித்து கொண்டிருக்கும் மக்கள் கூட சில மனஸ்தாபங்களினால் இத்தகைய அரசியல் தந்திரங்களில் மாட்டி கொள்வதுண்டு. இந்த வீட்டுக்காரருக்கும் எதிர்புறத்து வீட்டுக்காரருக்கும் ஏதேனும் ஒரு வகை புகைச்சல் என்றால் இந்த இரு வீட்டுக்காரர்களின் அருகில் இருக்கும் வீட்டுக்காரர்களின் நிலைமை எப்படி இருக்கும்? இவர்கள் அவர்களிடம் பேசினால் குற்றம், இவர்களிடம் பேசினால் குற்றம். இப்படி ஒவ்வொரு தடவையும் சிக்கலில் மாட்டி கொள்கிறார்கள்.
இந்த விதமான போக்கு எல்லா இடங்களிலும், எல்லாரிடத்தும் தனிப்பட்ட ஆண், பெண் பேதமற்று நிறைந்திருக்கிறது. வாழ்க்கை என்பது இப்படித்தானோ..! ஒருவரை சரிகட்டி, மற்றவரை சரிகட்டி, இப்படியேதான் போய் கொண்டிருக்கிறது.
மாமியார் மருமகள் அல்லது மருமகன், மாமனார் அல்லது மருமகள், ஏன் தந்தை மகன் உறவு கூட ஏதோ ஒரு சமரசத்தின் அடிப்படையில்தான் சென்று கொண்டிருக்கிறது. கணவன் மனைவி உறவுகளுக்குள் கூட ஒரு வித சமாளிப்பு தன்மையுடன்தான் அவர்களுடனான உறவுகள் மேம்பட்டு கொண்டிருக்கின்றன.
சரி சமுதாய மக்களிடம்தான் இப்படி இருக்கிறது என நினைத்தால், ஊருக்கு ஊர் மாநிலங்களுக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு, எல்லாம் இப்படித்தான் இருக்கின்றன. இவை அனைத்தையும் தாண்டி வருவது என்றால் ஏதேனும் ஒரு சமரசம் ஏற்பட்டால்தான் அவர்களின் அல்லது அந்த நாடுகளின் சிக்கல் தீர்க்கப்படுகிறது. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்டிருந்த “சமரசம்” வேறொரு அரசியல் செய்கைக்கு வழி காட்டிவிடுகிறது. ஒன்று தீர்ந்தால் மற்றொன்று முளைக்கிறது. அப்படி முளைத்து கொண்டே இருப்பதால்தான் சமுதாயத்தில் நாம் எல்லோரும் வாழ்வதற்காக ஓடி கொண்டிருக்கும் தொடர் ஓட்டபந்தயம்.
இதனால்தான் “அரசியல்” என்பது கலை, மருத்துவம், சட்டம், அறிவியல் இவைகளை போல அரசியல் என்பது தனிப்பட்ட கல்வி திறனாகவே ஆகி விட்டது. அப்படியானால் என்ன அர்த்தம்?
அரசியலை கற்று கொண்டால் இந்த சமுதாயத்தில் எப்படி வாழ வேண்டுமென்று தெரிந்து விடும் என்பது உண்மைதானே.!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (4-Oct-24, 3:09 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : engengum arasiyal
பார்வை : 72

மேலே