சிறகுகளின் குடைக்குள்

பழையன தொலைத்து
புதியன புகுத்தி
பழைய வண்ணையில்
புதிய வெண்ணெயாகயிருக்கிறது
இராமானுஜக் கூடம் தெரு.

கணக்கியலுடன் துணைப்பாடமாக
காதலை அறிமுகப்படுத்திய
ஆர்.ஜே.ஆர் பள்ளி
இருந்தவிடத்தில் இன்றோர்
அடுக்குமாடிக் குடியிருப்பு!

சற்று தள்ளி
உலக அதிசயமாய்
புருவங்கள் உயர்த்துகிறது
தன்னிலை தொலைக்காத
தாமரை இல்லம்!

எண்பதுகளின் இறுதியில்
கூந்தல் துவட்ட...
துணி காயவைக்க...
மேல்மாடத்தில் உலவிடும்
அந்த வெண்புறா...

அறிந்திருக்க வாய்ப்பில்லை;
அவ் வீதியில்
கால் முளைத்ததோர்
காதல் பெண்டுலம்
காலணியாய் தேய்கிறதென்பது.

தற்போது அப்புறா
பரத கண்டத்திலோ
இதுவரை நான்
பாராத கண்டத்திலோ - தன்
பெயரப் பிள்ளைகளைப்
பேணிக் கொண்டிருக்கும்.

எங்கிருப்பினும்
என் போலவே அதுவும்
கனமழை காலங்களில்
அரும்பு நினைவுகளை
அடைக்காக்கலாம் - தன்
சிறகுகளின் குடைக்குள்!

- ஜ. கோபிநாத்

எழுதியவர் : ஜ. கோபிநாத் (21-Oct-24, 9:22 pm)
பார்வை : 54

மேலே