இடைவெளி

*************
ஈரெழுத்தாய் இணையும்
ஒரு சொல்லாய் ஒன்றும்
இருவரில் ஆரம்பமாகிறது
வாழ்தலின் தொடர்
*
அதிலே மூவெழுத்தாய் நான்கெழுத்தாய் மேலும்
இணையும் குழந்தைகளால் குடும்பம் என்ற காவியத்தில்
மகிழ்ச்சிப்பூ பூத்துவிடுகிறது
*
ஒரு சொல்லுக்கும் மறு சொல்லுக்குமான
இடைவெளி அழகுடன் இருக்கும்
ஒரு வாக்கியத்தைப்போல்
அமையும் உறவுகளால்
அழகாக விடுகிறது வாழ்தல்
*
பழங்கால புகையிரதமாய்
லொடலொடவென விடாமல்
பேசும் எவரோடும்
தண்டவாளத்தைப்போல்
சீரான இடைவெளி பேணுவதில் வாழ்தலெனும் பயணம்
சுகமாகிறது
*
இடைவெளிச் சமவெளிகளில்
புல்லாய் வளர்ந்திருக்கும்
நம்மை மேயும்
இடையர் கூட்டத்துடன்
இடைவெளியின் நீளம்
எல்லையற்றதானதாக
இருத்தல் அவசியம்
*
இடைவெளி கொண்டால்
இருந்த இடம் தெரியாதலாகும்
உறவுகளுக்கு அதையே
தடைவெளியாக்கவும் வேண்டும்
*
தேவைக்கேற்ப
இடைவெளிகளின் அவசியத்தைக்
கூட்டியும் கழித்தும்
பெருக்கியும் பிரித்தும் கொள்வதில்
வாழ்க்கைக் கணக்கு சரியாகிறது
பொழிதலைச் சுருக்கிக்கொளும்
கார்முகிலுக்கும்
வறட்சியில் நாக்குத் தொங்கும்
பூமியின் தாகத்துக்குமான இடைவெளியாய் அல்லாமல்
சில நிமிடங்களே தோன்றி மறைந்தாலும்
பசுமையாய் நின்றுவிடும்
வானவில்லின் இடைவெளிகளே அழகானவை
*
குறுகிய இடைவெளிகளைக் கொண்ட வலைகளாய்
உயிர்வதை கொடுக்காமல்
திறந்ததும் காற்றையும்
காட்சியையும் மட்டுமன்றிக்
காதலையும் வழங்கிவிடுகின்ற
சன்னல் கம்பிகளின்
இடைவெளிகளாய் கவிதையைக் கொடுப்பதிலேயே
வாழ்வில் மகிழ்ச்சிப் பூ பூக்கிறது
*
மரங்களுக்கு நடுவே
அளவுடன் இருக்கும்
இடைவெளிகளால் பயன்மிக்க
தோப்புகள் காண்பதுவாய்
மனங்களுக்கு நடுவே
அளவுடன் இருக்கும்
இடைவெளிகளால்
பயன்மிக்க வாழ்க்கையைக் காண்போம்
இடைவெளிகள் விரிசல் அல்ல
அவை வேர்கள்
பாறைகளின் சிறு இடைவெளிக்குள்ளும்
ஒரு விதைக்கு இடங்கொடுத்து
வேர்விட வைத்து
மரமாக்கிக் காய் கனிதரும்
தரும் அவை கருணையின் தாய்
*
நமக்குள்ளும்
தாயின் கருணையின் நிழலாய்
ஒரு இடைவெளி இருக்கட்டும்
உதடுகளில்
புன்னகையாகவேணும் மலர..
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ், (22-Oct-24, 1:23 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : idaiveli
பார்வை : 8

மேலே