புறநானூறு பாடல் 44 – சோழன் நெடுங்கிள்ளி

சோழன் கரிகால் பெருவளத்தானுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்தனர். கரிகாலன் இறந்த பிறகு, சோழநாட்டை இரண்டாகப் பிரித்து, மணக்கிள்ளி உறையூரிலும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி பூம்புகாரிலும் இருந்து சோழநாட்டின் இருபகுதிகளையும் ஆண்டனர்.

மணக்கிள்ளியின் மகன் நெடுங்கிள்ளிக்கும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியின் மகன் நலங்கிள்ளிக்கும் பகை மூண்டது.

சோழன் நெடுங்கிள்ளி, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி எனப்படுவான். திருந்திய அரசியல் பயிற்சி இல்லாதவன். ஒரு சமயம், நெடுங்கிள்ளி ஆவூர் சென்றிருக்கையில் ஆவூர் தனக்குரிய தாகையால், நலங்கிள்ளி தன் சார்பாக, அவன் தம்பி மாவளத்தானை அனுப்பி ஆவூரை முற்றுகை யிட்டான்.

இவன் அஞ்சிப் போர்க்கு எழாததால், ஆசிரியர் கோவூர் கிழார் தமது பாட்டால் நெடுங்கிள்ளிக்கு மறத்தீ எழுவித்துப் போர் செய்யத் தூண்டினார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த வொற்றி
நிலமிசைப் புரளுங் கைய வெய்துயிர்த்
தலமரல் யானை யுருமென முழங்கவும் 5

பாலில் குழவி யலறவு மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவு நீரில்
வினைபுனை நல்லி லினைகூஉக் கேட்பவும்
இன்னா தம்ம வீங்கினி திருத்தல்
துன்னருந் துப்பின் வயமான் றோன்றல் 10

அறவை யாயி னினதெனத் திறத்தல்
மறவை யாயிற் போரொடு திறத்தல்
அறவையு மறவையு மல்லை யாகத்
திறவா தடைத்த திண்ணிலைக் கதவின்
நீண்மதி லொருசிறை யொடுங்குதல் 15
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே.

பொருளுரை:

கரிய பெண்யானைகளின் கூட்டத்தோடு பெரும் நீர்நிலைகளில் படியாதனவாய், நெல்லையுடைய கவளத்துடன், நெய்யால் மிதித்துத் திரட்டப்பட்ட கவளமும் பெறாமல் செம்மையான வலிமையான மர அடிப்பாகத்தையுடைய கம்பத்தை ஒடித்துச் சாய்த்து நிலத்தில் புரளும் தும்பிக்கையை உடைய வெப்பமுடைய பெருமூச்சு விட்டு அங்குமிங்கும் சுற்றிச் சுற்றி வரும் யானை இடி இடிப்பதுபோல் பிளிறுகின்றது.

பாலில்லாத குழந்தைகள் அலறி அழுகின்றன. பெண்கள் பூக்கள் சூடாத காய்ந்த தலைமுடியை முடிக்கவும், நீரில்லாத, வேலைப்பாடுடன் அமைந்த நல்ல வீடுகளில் உள்ளவர்கள் வருந்திக் கூப்பிடும் கூவலைக் கேட்கவும் இங்கே நீ இங்கே இனிதாக இருப்பது கொடியது.

நெருங்குவதற்கரிய வலிமையும் திறமையும் கொண்ட குதிரைகளையுடைய அரசே!

நீ அறவழியில் செல்ல விரும்பினால், இந்த நாடு உன்னுடையது என்று சொல்லி உன் கோட்டைக் கதவுகளைத் திறந்து விடு. வீர வழியில் செல்ல விரும்பினால் போர் செய்வதற்கு உன் கோட்டைக் கதவுகளைத் திறந்து விடு.

அவ்வாறு அறவழியும் இன்றி, வீரவழியும் இல்லாமல் திறக்காது அடைக்கப்பட்ட கனமான நிலைகளையுடைய கோட்டைக் கதவினையுடைய நீண்ட கோட்டைச் சுவற்றின் ஒரு பக்கத்தில் மறைந்து பதுங்கியிருத்தல் வெட்கத்திற்குரிய செயல் ஆகும் என்கிறார் ஆசிரியர் கோவூர் கிழார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jun-14, 8:27 am)
பார்வை : 381

மேலே