உன் மகனுக்கு நீ பாரமா - குமரிபையன்
முதியோர் இல்லம் சற்று வாருங்கள்
முன் விதி குறித்து செல்லுங்கள்
முதியோர் இருப்பிடமல்ல இங்கு
முதுமையின் பிறப்பிடம் பாருங்கள்..!
தனக்கோர் பிள்ளை மடியில் தவழ
தவங்கள் செய்த கதை கேளு !
தன்பிள்ளை தன்நிலை கேளாதிறக்கிய
தாய்மை சொல்லும் கதை கேளு !
பிறவி கொடுத்து பிள்ளை ஈன்றும்
பிறந்ததை இழந்த கதை கேளு !
சொந்தம் பந்தம் எல்லாம் இருந்தும்
சோகம் கிடைத்த கதை கேளு !
சொத்துகள் சேர்த்த செல்வந்தர்கள்
சோத்துக்கு ஏங்கும் கதை கேளு..!
சொர்க்கம் போல மனைகள் கட்டியும்
சோரம் போன கதை கேளு..!
மகன்கள் பத்திரம் முடித்த கதை
மகள்கள் பாத்திரம் நடித்த கதை..!
மருமக்கள் சொத்தை தின்ற கதை
மனதை உருக்கும் கதை கேளு..!
முதியோர் இல்லம் சென்று வந்தேன்
முதுமை தாகம் கண்டு வந்தேன்..!
இளமை வேகம் குறைத்து நின்றேன்
இதயம் கேள்வி உதிக்க கண்டேன்..!
உன் பாரம் சுமந்த பெற்றோர்கள்
உன் தோளில் பாரம் ஆனது ஏன்..?
உனை ஈன்ற தாயே பாரம் என்றால் – நாளை
உன் மகனுக்கு நீயும் பாரம் தானோ..???
தொட்டில் ஆட்டிய கைகள் இங்கு
கட்டிலில் ஆடியே கிடக்கிறது..!
கண் துஞ்சாமல் காத்த விழிகள்
கண்ணீர் துளிகளை வடிக்கிறது..!
என் கண்ணில் துளிகள் நனைகிறது ..!