அவள் அப்படித்தான் - சிறுகதைப்போட்டி
உலகின் நான்காவது பெரிய விமானப்படையை கொண்டது இந்திய விமானப்படை. இப்படையில் இணைந்து இந்திய தேசத்திற்காக கடமையாற்றுகிறாள் லாவண்யா..!
லாவண்யா பயிற்சி மேற்கொண்டிருக்கும் பெண் விமானி..!
வீர இளமங்கை,மாநிறமான தேகம், அழகான வேல்விழி, இனிமையான் குரல்காரி. துடிப்பான சிந்தனைமிக்கவள்.
ஆணாதிக்க சமுதாயத்தை வென்று உச்சி வானில் பறந்துக்கொண்டிருக்கும் , கோயம்புத்தூரை சேர்ந்த இருபத்தியேழு வயதுடைய தமிழச்சி..!
டெல்லி விமானப்படை மைதானத்தில் ””எச்ஏஎல் எச்ஜெடி-16 கிரண் ””என்ற பயிற்சிக்கான போர் வானூர்தியை ஒரு சோதனைக்காக வானில் இயக்கிவிட்டு தரையில் இறங்கிய லாவண்யாவை. கட்டி அணைத்து வாழ்த்தினான் தீபக்.
“ஹே லா.. என்னய்யா நீ சூப்பரா பறந்து பறந்து அசத்துறீயே.. நீதான் அடுத்த ஏர் போர்ஸ் டீம் தலைவி டி..” தீபக்கின் இந்த பாராட்டை தன் மைவிழியால் ஏற்கும் பாவனையில் ஒரு பார்வை வீசி லாவண்யா அவனோடு கைக்கோர்த்து ஓய்வு அறைக்கு சென்றாள்.
லாவண்யாவை அவளுடன் பணியாற்றும் தீபக் போன்ற சக நண்பர்கள் “ லா “ என்று செல்லமாக அழைப்பது வழக்கம்..!
லாவண்யாவை ஒருதலையாக காதலிக்கும் பல இளம் வாலிபர்களில் தீபக்கும் ஒருத்தன். அவனின் பாராட்டுக்கள் அனைத்தும் தனக்கு கொடுக்கும் காதல் லஞ்சம் என்று நன்றாகவே அறிந்த லாவண்யா , அதை வெளிக்காட்டாமலே அவனுடன் நெருங்கியே பழகினாள். ஆம்..! லாவண்யா அனைவரிடமும் அப்படித்தான் பழகுவாள். அவள் எப்போதும் யாரிடமும் ஆண்-பெண் பேதம் பார்ப்பதில்லை.
மறுநாள்...பெண் விமானிகள் குடியிருப்புக்கள் நிறைந்த ஒரு பூங்காவில் லாவண்யா அலைப்பேசியில்
“ஹாய் டார்லிங்... என்னங்க சார் பண்றீங்க?”
---------
“எனக்கு என்ன சந்துரு.. தினமும் ராஜவிருந்துதான்.. சரி..என் வாழ்க்கையில ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் வந்திடுச்சி சந்துரு..ஜூலை 15ம் தேதி நான் கோயம்புத்தூர் வரேன்.என்னோடு தீபக்கும் வருவான். “
-------------
“இல்ல அவன் பொள்ளாச்சி. சரி டா எங்களை கோவை ஏர்போர்ட் வந்து அழைச்சிட்டு போ. சரியா.? எனக்காக காத்துக்கொண்டிருடா என் செல்ல டார்லிங்..”
------
“ம்ம் மீ டூ டா..”
அலைப்பேசியில் சந்துருவுடன் பேசி முடிக்க, அங்கு லாவண்யாவை தேடி வந்த தீபக்..
“ ஹாய் லா “
“ ஹாய் தீபக்.. என்ன சார்.. இன்னிக்கு செம அழகா இருக்கீங்க...?”
“லாவண்யா.. யாரு போன்ல?”
“ ம்ம்ம் என்னோடு நெருங்கிய நண்பன்“
” நெருங்கிய.. அப்படீன்னா.. ரொம்ப நெருக்கமா “ தீபக் மனதில் ஒரு பொறாமை உணர்வு மேலோங்குகிறது.
“ அப்படீன்னு வச்சிருக்கலாம் தீபக் “ லாவண்யா விடுகதையாக சொல்ல விடை தெரியாமல் தவித்துத்தான் போனான்.
“ஹே லா...அவர் உனக்கு எப்படி? அவர் எப்படி இருப்பார் ?. என்னைவிட அழகா..? என்ன பண்ணுகிறார்..?”
“ உன் இந்த எல்லா கேள்விக்குறிக்கும் ஆச்சரியக்குறியாக பதில்களாக ஜுலை 15 தேதி கோவை ஏர்போர்ட்ல தெரியும். காத்திருடா என் செல்ல நண்பனே..”
“ஒகே அட்லீஸ்ட் ..அவர் உனக்கு எப்படி தெரியும்? இதையாவது சொல்லு லா ? “
“ ஏன் டா ஏன் இப்படி இருக்க..? சரி நீயும் என் நெருங்கிய நண்பன். அதுனால சொல்றேன். அவர் எனக்கு பேஸ்புக் நண்பர்.. மற்றவை கோவையில்...” என்று தன் கயவிழி இமையை சிமிட்டிக்கொண்டே லாவண்யா பதிலுரைக்க தீபக்கின் இருதயத்தில் ஒரு அனல் எரிச்சல் பற்றி படர்ந்து அவனை இம்சிக்க ஆரம்பிக்கிறது.
அப்போது ....
“ஹாய் தீபக் , ஹாய் லாவண்யா “ என்ற சிரித்தவாறு வந்த லாவண்யா பயிற்சி குழுவின் தலைவர் ரோஷனை
“ ஹாய் மாஸ்டர் “ என சொல்லிக்கொண்டே ஆரத்தழவி லாவண்யா கட்டியணைக்க, இதைக்கண்ட தீபக்
“என்னடா இது .. யாரை பார்த்தாலும் பக்கு பக்குன்னு கட்டிப்பிடிச்சுக்கிறா.. என்னா பொண்ணுடா இவ “ தீபக்கின் மனதிற்குள் எரிச்சல் புகை கிளம்பியது.
சற்று நேரம் பூங்காவில் தீபக் மற்றும் லாவண்யாவுடன் உரையாடிவிட்டு ரோஷன் விடைப்பெற..
“லா.. என்னப்பா நீ.. யாரை பார்த்தாலும் கட்டிப்பிடிச்சுக்கிற.. நீ ஒரு பொண்ணுன்னு மறந்துட்டீயா..?” தீபக்கின் குரலில் ஓர் ஆத்திரம் இருப்பதை உணர்ந்தவளாக லாவண்யா...
“ தீபு..நாம ஒரு உயர்பதவியில இருக்கிறோம். நம்ம வேலையில ஆண்-பெண் வித்தியாசம் இல்ல. நமக்கு இதெல்லாம் சகஜம்ன்னு உனக்கும் தெரியும். ஆனா நீ என் மேல இருக்கிற அன்புல பொறாமையா கேட்கிறேன்னும் எனக்கும் புரியுது. தயவுசெஞ்சு இப்படி இருக்காதே தீபு. இந்த குணம் உன் வாழ்க்கை , எதிர்கால இலட்சியத்தில ஒரு விரிசல் விழ வச்சிடும். உன் தோழியா என்னால இதத்தான் சொல்லமுடியும்.”
“லா இதெல்லாம் மேல்நாட்டுக்காரன் கலாச்சாரம். அத நாம ஏன் பண்ணனும்...” தீபக்கின் இந்த பேச்சை வெறுத்தவளாக லாவண்யா கோபமாக..
“ டேய் தீபு.. நேத்து நான் ப்ராக்டீஸ் முடிச்சு இறங்கினப்பா எதுக்கு கட்டிப்பிடிச்ச, அன்னிக்கு மேனகா மேடம நல்லா பேசினீங்கன்னு சொல்லி அவங்களை ஏன் நீ கட்டிப்பிடிச்ச.. இதெல்லாம் ஒரு பாராட்டும் யுக்திதானே..மேல்நாட்டுக்காரன் கலாச்சாரம்ன்னா நீ ஏன் டா கோர்ட் சூட் டை போடுறா.. அவத்துப்போட்டு இந்திய கலாச்சாரப்படி வேட்டி சட்டை, பைஜாமான்னு இருக்க வேண்டியதுதானே..? “
“லா நான் ஆம்பிளை என்னை யாரும் தப்பா பேசமாட்டாங்க ஆனா நீ எந்த பதவியில இருந்தாலும் நீ ஒரு பொண்ணு. நீ பண்ணுகிற எல்லா விஷயத்திலும் கலாச்சாரம் கெடாம பார்த்துக்கோ.. என்னால விளக்கமா சொல்ல தெரியல...” தீபக் இப்படி சொல்லியதும் லாவண்யா என்கிற வீர தமிழச்சிக்கு சிரிப்புதான் வந்தது..
“ அடடா.. ஆம்பிளை..ஆம்பிளை... ஆண்பிள்ளைங்கிற திமிரா. உனக்குலாம் கர்ப்பப்பை இல்லை. அதுனால உனக்கு கற்பு இல்ல. அதுனால நீ எது பண்ணினாலும் கலாச்சார பாதிப்பு இல்ல.எப்படியடா இப்படியெல்லாம் கலாச்சாரம் மண்ணாங்கட்டின்னு காலம் காலமா பொண்ணுங்கள அடக்கிட்டு வர்றீங்க. உன்னை சொல்லி குற்றமில்ல தீபு.. நம் முன்னோர்கள் செஞ்ச சரித்திர பிழை இது.அதுக்குதான் ==கற்பு என்பதை பொதுவில் வைப்போம்.== அப்படீன்னு எழுதின பாரதி == அச்சம் மடம் நாணம் நாய்களுக்கு வேணுமாம் == இப்படியும் எழுதி காறித்துப்பிட்டுதான் போயிருக்கிறான். அப்பவும் ஆணாதிக்க நாய்களுக்கு புத்தி வரல. காரணம் எச்சிலை துப்பியது பாரதியார் என்கிற ஆண், ஒரு பொம்பள பாரதி அப்படி சொல்லியிருந்தா கூட புத்தி வந்திருக்கலாம். “ இதைக்கேட்ட தீபுவின் முகம் நாணத்தில் கவிழ்ந்தது.
லாவண்யா மொத்த ஆத்திரத்தையும் கொட்டாமல் விடுவதில்லை என்று முடிவில் தொடர்கிறாள்.
“ ஏன் ஒரு பொண்ணு ஒரு ஆணை கட்டிப்பிடிக்க கூடாது. ? பொண்ணுக்கு மார்பகம் இருக்கு. அதுல கற்பு இருக்குன்னு பார்க்கிறீயோ? கட்டிப்பிடிச்சா கற்பு கசங்கிவிடும்ன்னு உனக்கு தோணுதோ. ஆனா நீயா வந்து கட்டிப்பிடிச்சா அன்பு. நானா வந்து கட்டிப்பிடிச்சா தப்பு.. என்னை விடுடா.. ஒவ்வொரு நாளும் டவுன் பஸ்ல, இரயில் வண்டில, கடைவீதி கூட்டத்துல எத்தனை எத்தனை ரவுடிப்பசங்க எத்தனை எத்தனை பொண்ணுங்கள உரசிட்டும் தட்டிவிட்டும் போறானுங்க.அப்படி பார்த்தா ஒரு நாளைக்கு இந்தியாவுல 40 கோடி பொண்ணுங்க கற்பு போகுது. 40 கோடி தடவை அந்த பொம்பளபொறுக்கிகளால இந்திய கலாச்சாரம் பாதிக்கப்படுதுன்னு சொல்லுவீயோ? தீபு..! நீ இந்திய என்கிற பெண்மையான தாய்நாட்டை காக்கும் மகத்துவமான பணியில இருக்கடா.. உன்கிட்ட கீழ்தரமான எண்ணம் இருக்கலாமா? கலாச்சாரம் அப்போ அப்போ மாறக்கூடியது டா. காலத்திற்கு ஏற்ப மாறவேண்டியது. கலாச்சாரம் கலாச்சாரமுன்னு நீயும் ஒரு சராசரி மனுசனா பெண்ணடிமை வாதத்தை பேசாதே டா.. “ என்று பேசிக்கொண்டே தீபக்கை கட்டியணைக்கிறாள் லாவண்யா , கட்டியணைத்துக்கொண்டே “தீபு இது நீயா பேசினது இல்லன்னு எனக்கு தெரியும். நம் நாட்டுல ஊறிப்போன ஒரு பழமைவாதம். நாமதான் மாத்தனும் டா..”
“என்னை மன்னிச்சுடு லாவண்யா” என்று தன்னை திருத்தியவனாக தீபக் உணர்ந்துக்கொண்டான் லாவாண்யாவின் அந்த அன்பான தோழமையான அரவணைப்பில்..!
------------
ஜூலை 15, கோயம்புத்தூர் விமான நிலையம்.
வழக்கமான சோதனைகளை முடித்து வரவேற்பறைக்கு தீபக்குடன் வந்த லாவண்யா. அங்கு தனக்காக நின்றுக்கொண்டிருந்த சந்துருவை கண்டவுடன் ஓடிப்போய் கட்டியணைத்துக்கொண்டாள். ஆனால் வழக்கமாக அல்ல .. மிக நெருக்கமாக லாவண்யா சந்துருவை கட்டியணைத்திருக்கும் அந்த காட்சியை கண்ட தீபக்கின் வயிற்றில் ஒரு எரிமலை குழம்பு பொங்கியது என்றே சொல்லலாம். கட்டியணைத்தது மட்டுமல்லாமல் சந்துருவின் முகத்தில் தன் செவ்விதழால் முத்தமழை பொழிந்தாள்.
சற்று நொடிகளுக்கு பிறகு..
“தீபு.. இவர் தான் சந்துரு. என் வருங்கால கணவர். பேஸ்புக் மூலமா பழக்கமானவர். ஆனா என்னை நல்லா புரிஞ்சுகிட்ட ஒரே ஒரு ஜீவன் இவர்தான்..இங்க கோவையில ஐடி கம்பெனி வச்சிருக்கிறார்”
தீபக்கின் முகத்தில் கடுப்பேறிய உணர்வு தாண்டவமாடியது.
“ . சந்துரு சார். மன்னிக்கவும்.. கொஞ்சம் லாவாண்யாகிட்ட பேசிட்டு வரேன்.
லா.. ஒரு நிமிசம் தனியா உன்கிட்ட பேசணும்.”
“ம்ம் சரி “ என்றவாறே தனியாக ஒரிடத்தில் தீபக்குடன் லாவண்யா.
“ லா..உனக்கு பைத்தியம் எதாவது பிடிச்சு போச்சா. உன் அழகு திறமைக்கு அவர் ஒரு 10 சதவீதம் கூட ஒத்து வரமாட்டார். அவருக்கு உனைவிட வயசும் அதிகமா இருக்கும் போலிருக்கு.. நீ என்னை கல்யாணம் பண்ணாட்டியும் பரவா இல்ல.. போயும் போயும் உன் தகுதிக்கு சம்மந்தமே இல்லாம....ஒரு அரைகிழவனையா நீ.....” என்று படபடவென சொல்லிய தீபக்கை இடைமறித்த லாவண்யா
“போதும் நிறுத்து தீபு...அவர் என்னைவிட 12 வயசு பெரியவர்தான்.கிழவன் இல்ல. சரியா? நீங்க எல்லாம் என் திறமையை காதலிச்சீங்க. என் உடம்பை காதலிச்சீங்க. அவர் மட்டும்தான் என்னை காதலிச்சார். இதுவரைக்கும் என்னை ஒரு தடவைகூட சந்தேகப்பட்டதே இல்ல.கற்புன்னா என்னான்னு அவருக்கு தெரியும். காதலுக்கு கண்ணு மட்டுமில்லை தீபு.. வயசும் கிடையாது. வயசு பார்த்து வந்தா அது காமம் மட்டும்தான். மனசு பார்த்து வருவதுதான் உண்மையான காதல்ன்னு நான் நினைக்கிறேன். அவர் ஒன்னும் சாதாரணமான ஆள் இல்ல. 20, 25 பேருக்கு வேலை கொடுக்கிற அளவிற்கு திறமையானவர்தான். தீபு நீ இன்னும் என்னை புரிஞ்சுக்க நிறையா இருக்கு. மத்த பொண்ணுங்களை விட நான் வித்தியாசமானவன்னு நீ நினைப்ப. இல்ல எல்லா பொண்ணுங்களும் என்னைப்போல எதாவது ஒரு வித்தியாசமானவங்களா இருப்பாங்க. அத புரிஞ்சுக்கிற அளவிற்கு ஆண்கள் உங்களுக்கு பக்குவமில்லை. நீ வளரணும் தம்பி.... ஹா..ஹா.. சரி வா... என் வீட்டுக்கு போகலாம். அவர் கூட.. “
“ இல்ல லாவண்யா.. நீ போ.. எனக்கு இங்க ஒரு நண்பன் வீடு இருக்கு.என்னை பார்க்க இப்போ வருவான். நான் நாளைக்கு வரேன்.”
“ஒகே டா. சீ யூ..”
சந்துரு-லாவண்யா இருவரும் கைப்பிடித்துக்கொண்டே காருக்குள் ஏறுவதை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த தீபக் தன் மனதிற்குள்
”என்னா பொண்ணுடா இவ...? இவ எப்போதும் இப்படித்தானோ .. ம்ம்ம் இவ இப்படித்தான்.. ... “
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
**குறிப்பு :எழுத்து தள தோழர்கள் அறக்கட்டளையின் சிறுகதை போட்டியில் 3 வது பரிசு பெற்ற கதை . (ஆண்கள் பிரிவு )