வீட்டுக்கு வந்தாள் லக்ஷ்மி சிறுகதை

வீட்டுக்கு வந்தாள் லக்ஷ்மி ..

அக்ரகாரத்தில் ஒரே பரபரப்பு.

ஒவ்வொருவரின் வீட்டு வாசலில் வண்ண வண்ணக் கோலங்கள். பார்ப்பவர்களை பிரம்மிக்க வைத்தன.

வெள்ளிக்கிழமை. அமிர்த யோகம். காலை நேரம்

வீட்டுத் திண்ணையில் கால்மேல் காலிட்டு அமர்ந்து, தினமலர் பக்கங்களை கண்களால் அலசிக்கொண்டிருத்த விஸ்வநாத ஐயர்,

ஏண்டீ .. மங்களம் .. நம்ம வைத்தியநாதர் ஆத்துக்கு இன்னிக்கித்தானே லக்ஷ்மிய கூட்டிண்டு வரதா சொன்னா என்று உரத்த குரலில் கேட்க, அவர் மனைவி மங்களம், சுடச்சுட ஆவி பறக்கும் ஃபில்டர் காஃபியை கொண்டுவந்து அவர்முன் வைத்தபடி,

ஆமாம் .. இன்னிக்கின்னுதான் நானும் கேள்விப்பட்டேன். லக்ஷ்மி பிரசவ வேதனை வந்து துடிச்சதை பார்த்து மனசு கலங்கிய வைத்தியநாதர் நேரம் கடத்தாமல் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார். ஆசுப்பத்திரியில் சேர்த்த இரண்டு மணி நேரத்திற்குள் லக்ஷ்மிக்கு சுகப்ப்ரசவம் ஆச்சுன்னு தெரிஞ்சதும் அக்ரகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி.

ஒவ்வொருவரின் வீட்டு வாசலில் லக்ஷ்மியும் குழந்தையும் வரும்பொழுது ஆரத்தி எடுப்பதற்காக தாம்பாளம் வைத்திருக்கப்பட்டிருந்தது.

மங்களம், உனக்குத்தான் அவாத்து சமாச்சாரமெல்லாம் ஒன்னு விடாமத் தெரியுமே. எப்போ வருவாளாம் லக்ஷ்மி என்று கேட்க, காலங்கார்த்தால ஆரம்பிச்சுட்டேளா ஒங்க குசும்ப என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள்.

டம்ப்ளரில் இருந்த ஃபில்டர் காஃபியை ஒருமுறை டவராவில் விட்டு மீண்டும் டம்ப்ளரில் விட்டுப் பருகிக்கொண்டே, மங்களம், நீ மொதமொதல்ல போட்ட அதே காஃபி போல இருக்கு. கொஞ்சம் கூட ருசி மாறல்ல என்று பாராட்டினார்.

அப்பொழுது அவரது மனைவி, லக்ஷ்மி வர்றதுக்குள்ள பிள்ளையார் கோயிலுக்குப் போய் பூசை செய்துட்டு வந்துடறேன் .. சரியானு சொல்லிவிட்டு, பூஜைக்குரிய பொருள்கள் அனைத்தும் இருந்த பையை எடுத்துக் கொண்டு பிள்ளையார் கோயிலுக்கு நடந்தாள்.

பிள்ளையார் கோயில் வாசல் சென்றடையவும், லக்ஷ்மியை அழைத்துக்கொண்டு வைத்தியநாதர் வந்துகொண்டிருந்தார். கூடவே லக்ஷ்மிக்குப் பிறந்த கன்றுக் குட்டியும் வந்தது.

அவர்களைக் கண்டதும் அருகில் சென்று லக்ஷ்மியையும் அவளுக்குப் பிறந்த கன்றுக்குட்டியையும் அவளிரு கரங்களால் தொட்டு, திருஷ்டி கழித்து தலையில் கைகளை வைத்த பொழுது படபடவென்று சுடக்குகள் சப்தம் கேட்டது.

கோமாதா எங்கள் குலமாதா !!

எழுதியவர் : (7-Jul-14, 10:11 am)
பார்வை : 155

மேலே