மழைக்குழந்தை

கதிரவனும்
கடற்பெண்ணும்
கலந்து பெற்ற
மேகமகள்

பருவங்கண்டு
காற்றழகன்
களிப்புறவில்
சூல்கொள்ள

காலத்தே
பிறப்பது
மழையென்னும்
மகவு.

மேகத்தாய்
மடியிறங்கி
துளித்துளியாய்
பூமிவரும்

மழைக்குழந்தை
குணமறிய
கூறுகிறேன்
இக்கவிதை.

சிணுங்கல்
சிறுதூறல்.
சிரிப்பே
கொடிமின்னல்.

சிறுமொழிவே
இடியோசை.
அழுகை
தொடர்மழையாம்.

பிடிவாதம்
பெருமழையாம்.
ஆங்கார வெளிப்பாடோ
பேய்மழை பெருவெள்ளம்.

அவள்
ஒளிந்து விளையாடுதலை
இடமாறிப் பெய்தலென்போம்.
உறக்கங்கொள்ளுவதை
மழைபொய்த்துப் போனதென்போம்.

இயற்கையொடு
இயைந்திருக்கும்
இடமெலாம்
இவள் வருகை

இயல்பாய்
நிகழ்வது
இன்றளவும்
சத்தியம்.

இயற்கை
இழியுமிடம்
இவள் செல்லாள்
நிச்சயம்.

காலத்தே
இவள் வந்தால்
களைகட்டும்
கழனியெங்கும்

அளவோடு
இவளாட
வளமாகும்
உலகமெங்கும்.

வாழ்க எவ்வுயிரும்
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
வாழ்க நலமுடன்.

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (8-Jul-14, 10:41 am)
பார்வை : 121

மேலே