யார் தந்தது, அனுமதி, மரணத்தை தழுவிடவே

யார் தந்தது, அனுமதி,
மரணத்தை தழுவிடவே....!

ஒரு காதலின் தோல்வியிலே
உயிரினை தொலைக்க எண்ணும்
இளம் உள்ளங்களே

நினைத்தீரோ, பெற்றவர் பட்ட
பாடுகளை, கருவில் உருவாக்கி
உலகத்தில் வெளியாக்கி

வாழ்க்கையை தெளிவாக்கி,
வசந்தங்கள் உமதாக்கி
வருத்தங்கள் தமதாக்கி
அன்பினை பெரிதாக்கி

கனவுகள் விரிவாக்கி
அதில் மிதந்தனர்
நாளும் உங்கள் நல்ல
எதிர்காலத்தை கண்ணோக்கி...!

அவருக்கு நீங்கள்
தருவது உயிரை பிசையும்
வேதனையை

காதல் புதிது, காதல் அரிது...!

ஆயின் காதலை விட வாழ்தல்
மிக, மிக பெரிது....!

இரு உள்ளங்கள் சம்பந்தப்பட்ட
உணர்வினை வெல்ல,

உற்ற உறவுகளை, உயிரோடு
வதைப்பது சுயநலமே....

உயர் காதலுக்கு
தரவில்லை அனுமதி, யாரும்
உற்றவரின் உணர்வுகளை
தீயில் போட்டு பொசுக்கிடவே

தோற்றும் ஜெயித்திடலாம் காதலிலே,
ஜெயித்தும் நின்றிடலாம்,
இனிய காதல் நினைவுகளை மனதினில்
நிறைத்து கொண்டே

அந்த நினைவுகளின் உற்சாகத்தில்
வாழ்வுகளின் உச்சத்தை நீர்
அடைந்திடலாம்

காதல் வாழ்வதற்கு, வீழ்வதற்கு
அல்ல

இளம் உள்ளங்களே
காதலில் ஜெயித்தால், இணைந்து
வாழ்ந்திடுங்கள்...

தோற்றால் பிரிந்தும், வாழ்வை
ஜெயித்திடுங்கள்

வாழ்வது முக்கியம், சாவது
மூர்க்கத்தனம்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (8-Jul-14, 8:23 am)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 88

மேலே