பூக்களோடு ஒரு கைக்குலுக்கல்

எண்ணப் பூக்கள் மலர்ந்திருக்கும் தாளினிலே
எழுதி வைத்தேன் கவிதையென்ற பேரினிலே !

வண்ணப் பூக்கள் மணந்திருக்கும் செடியினிலே
வண்டுகளை ஈர்த்திடும் மதுச் சுவையினிலே !

மழலைப் பூக்கள் மகிழ்ந்திருக்கும் பள்ளியிலே
சிங்காரமாய் பவனி வரும் சீருடையிலே !

வெள்ளிப் பூக்கள் முளைத்திருக்கும் வானத்திலே
விழிசிமிட்டி ஒளி கூட்டும் இரவினிலே !

கோலப் பூக்கள் படர்ந்திருக்கும் மார்கழியிலே
கோதையர் விரல் வண்ணத்தில் வீதியிலே !

நட்பு பூக்கள் நிறைந்திருக்கும் எழுத்துதளத்தினிலே
களித்திருக்கும் அழகிய தமிழ் சொர்க்கத்திலே !

காதல் பூக்கள் கவிபாடும் கடற்கரையிலே
கண்களாலே கதை பேசும் மணல்வெளியிலே !

நுரை பூக்கள் பொங்கிவரும் கரையிலே
பாதம் நனைத்து பையச்செல்லும் கடலுக்குள்ளே !

கன்னி பூக்கள் வரம்கேட்கும் கோயிலிலே
கல்யாண மாலை பூக்கும் இறையருளிலே !

பனிப் பூக்கள் குடியிருக்கும் இலைகளிலே
பரிதிமுகம் கண்டு மறையும் காற்றினிலே !

மேகப் பூக்கள் ஓய்வெடுக்கும் மலைமேனியிலே
மெல்லமெல்ல கலைந்து போகும் உயரத்திலே !

கண்ணீர் பூக்கள் பெருக்கெடுக்கும் விழிகளிலே
பரிசுபெற்ற சேதி கேட்ட நொடியினிலே !

பூக்களெல்லாம் சிரித்திட
பூரிப்புடன் கைக்குலுக்குவோம் .....!!! ( 100 சொற்கள் )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Jul-14, 11:01 pm)
பார்வை : 126

மேலே