கிளி பறந்த வெளியும் சூட்டுக் களவட்டியும் 01
கிளி பறந்த வெளியும் சூட்டுக் களவட்டியும் 01
**************************************************************************
ரோஷான் ஏ.ஜிப்ரி. (திரும்பிப் பார்க்கையில் தென்படும் என் திசைகள்,)
வாப்பாவோடு வாங்காமம் வலதுகை கண்ட வயலுக்க புதினம் பார்க்க போவதில் இருக்கும் உச்சாப்பு சொல்லி மாளாதது.வேளாண்மை கருது பறிஞ்ச காலத்தில் வயலுக்க போவதில்தான் அலாதி இன்பம். கொக்கு,நாரை,கிளி, வயல்கோழி,பாட்டம் பாட்டமாய் குருவிகள் என பறவைகள் பட்டாளத்தையே காணலாம். மற்ற நாட்களிலும் வயலுக்க போக விருப்பம் தான் அது ஒரு பச்சை சொர்க்கம் யார்தான் அதை பார்க்க விரும்பாதவர்? வாப்பாவுக்கு பின்னால் வால்பிடித்து திரிந்தாலும் ஓம்,ஆம் எண்டு போட்டு வாப்பா வெட்டிக்கு போயிருவாங்க உம்மாவுக்கு பயந்து.
பிள்ளைகள் வளர்ப்பு விசயத்தில் வாப்பா கொஞ்சம் நொகஞ்சான்.உம்மா அப்படி இல்லை கறார் பேர்வழி ஓதல்,படிப்பு என்றால் இறப்பில் ஒரு பிரம்பு எப்பவும் செருகி இருக்கும் தங்கச்சிக்கு பீப் பயம் உம்மா பிரம்ப எடுத்தா காணும் நிண்ட எடத்தில ஒண்டுக்கு போயிருவாள் ஆனா நான் கொஞ்சம் உஷார் மூத்த பிள்ளை என்பதால் உம்மாக்கு இரக்கம் ஏசுவாங்க ஆனா அடிக்கிற குறைய.
“ஓதப்பள்ளி இல்லாத வெள்ளிக்கிழமைகளில் போகட்டா உம்மா”என்று நாடியை பிடித்து உம்மாவ கொஞ்சித்தான் அனுமதி பெறவேண்டும்.அந்த அனுமதியுடன் ஆயிரத்திஎட்டு கன்டீஷன் வேறு வரம்புல பாத்து நடக்கணும்,சேறு,சுரி உடுப்புல படப்போடா,வெள்ளாமைய துவைக்காம போகணும் எல்லாவற்றுக்கும் பேய் ஓணான் தலையாட்டுவதுபோல் ஆட்டுவன் வாப்பா கொடுப்புக்குள் சிரிப்பாங்க ஆனா நான் செய்யும் அழிச்சாட்டியம் எதையும் வீட்டவந்ததும் உம்மாக்கிட்ட வாய திறக்க மாட்டாங்க அந்த வகையில் வாப்பா தங்கம்.
புரைப்புட்டியில் வாப்பா நட்ட பயற்றை,வெண்டி,கத்தரி சிறுதானியங்கள் பூவும்,பிஞ்சும்,காயும் நெத்தும் என செடி நிறைந்து சிரித்துக் கொண்டு நிற்கும் காட்சி எனக்குள் சகடை கிலிக்கி விடும்.
வெள்ளிக் கிழைமை பின்னேரம் அசறு தொழுத கையோடு வாப்பா வட்டைக்க போக வெளிக்கிடுவாங்க நான் உம்மாக்கிட்ட உத்தரவு வாங்கிகிட்டு தங்கச்சிக்கு தெரியாம தெருமுனைக்கு போய் நிற்பன் வாப்பா பைசிக்கிளை தள்ளிக்கொண்டு வரும் வரைக்கும்.
இது எப்பவும் இல்லா விட்டாலும் வெள்ளிக் கிழமைகளில் அவ்வப்போது நிகழும்.அது பழைய றழி பைசிக்கிள் மாப்பிள்ளை மாதிரித்தான் வாப்பா வச்சிக்கு இருக்காங்க பூவும்,காயுமா சோடிச்சி இருக்கும் அழகே தனி,அதில இருந்து போற எண்டா எனக்கு ஒரு கசனா சந்தோஷம்.
வாப்பாவுடன் கதச்சி சிரிக்கவும்,வாப்பா அழகாக சோடிச்சிருக்கும் அந்த பைசிக்கிளில் ஏறிப் பாக்கவும் விரும்பாத ஆக்கள் எங்கட ஒழுங்கையில ஒத்தரும் இல்ல. அவ்வளவு சுவையாக வாப்பா கதைப்பாங்க கவியும் படிப்பாங்க என்ன ராகமா இருக்கும்.
உம்மா ஊட்டு வேல எதயாச்சும் செய்யக்க கணகாட்டுப் படுத்துற இளைய தங்கச்ச தோள்ள போட்டு முதுகுல தட்டிக்கு ஒராட்டுவாங்க அதை கேட்டுக்கு இருக்கிற பக்கத்து ஊட்டு புள்ளயளுக்கும் ராகத்தா நித்திர போகும்.
மாலை இருள் கவியும் வரையுள்ள மூன்று மணி நேரம் பச்சை வயல் வெளியில் மனதாலும்,உடலாலும் மகிழ்ந்து காற்றோடு நானும் கைகோர்த்து வெள்ளாமைகளின் நலன் விசாரித்து அங்கு உலவும் புள்ளிகளுடன் புள்ளியாகி உலவப் போகிறேன்.அடடா அளவு கோலால் இடை அனுமானிக்க முடியாத ஆனந்தம்.
வாப்பாவோடு வயலுக்க போக நான் ஆர்வம்காட்ட இன்னொரு காரணமும் இருக்கு.குருவிக்கு கொழுத்த சீன வெடில் வாங்க வாப்பா மம்மாலியார் அப்பச்சிட கடைக்கு போற சம்பவம்.அங்க போனா
போய் ஒரு தேத்தண்ணியும்,சுடச்சுட ஒரு றோசுப்பானும் வாப்பா எனக்கி வாங்கித்தருவாங்க நான் அதில பாதிய முத்த தங்கச்சிக்கு கொடுக்க சுத்தி வைப்பன் ,தங்கச்சி எண்டா அம்பட்டு எரக்கமா எண்டு மம்மாலியார் அப்பச்சிட பொஞ்சாதி வல்கிஷ் உம்மா கேட்டுப்போட்டு கொஞ்சுவா.அவாக்கு நான் எண்டா சீவன்.
வல்கிஷ் உம்மா என்ன அள்ளி அணைச்சி மறுபடியும் கொஞ்சிப் போட்டு “சமிசி இவன எனக்கிற்ற உட்டுப்போட்டு போடாம்பி.”என்ற படி கலர்,கலரான சீனி முட்டாச ஒரு தாளுக்குள்ள சுத்தி எண்ட களிசன் பொக்கட்டுக்க பூத்துவா அந்த முட்டாசிர இனிப்பு அடுத்த கிழைமை வரைக்கும் இனிக்கும்.
வல்கிஷ் மூத்தம்மாட கடையில் வாங்கிய சீனாவெடில்களை வாப்பா ஈரம்,காத்து படாமல் இருக்க பத்திரமாய் சுத்தி ரோட் மாஸ்ட்டரின் முன்னால் இருக்கும் கூடைக்குள் வைப்பாங்க நானும் “இதையும் வையுங்க வாப்பா”எண்டு ரோசுப்பாணில் பாதியையும் மிச்ச முட்டாசுகளை கொடுப்பன் மறுக்காமல் வாப்பா வாங்கி வைப்பாங்க காரணம் “ஊட்ட போகக்க வேற வாங்கிக்கு போவம் இத தின்னுங்க” மகன் எண்டு வாப்பா அடிக்கடி செல்லி அலுத்துப் போச்சு “நீ கடும் புடிவாதக் காரன் ஒண்டையும் கேக்கிற இல்ல எங்கு வாப்பாக்கு வாப்பா வந்து பொறந்திருக்காய்” எண்டு ஒருசில நாள் சென்னாங்க அதுக்கு பொறகு ஒண்டும் செல்லுற இல்ல முட்டாசு சுத்தியிருக்கும் கொப்பித்தாளில் கசிந்து பிசுபிசுப்பது தங்கச்சி மேல் நான் வைத்திருக்கும் பாசம் எண்டு விளங்கியிருக்கும் போல.
மம்மாலியார் வல்கிஷ் உம்மாட மூத்தப்பா அந்த ஆள்ள கூத்து வேற உடமாட்டார் மனிசன்.வழைக்குலையிர அடிச்சீப்பில் ஒட்டினாப் போல ரெட்டப் பழம் வரும் அதுல பிச்சி அவரு ஒண்ட திண்டு போட்டு எனக்கு ஒண்டு ஒவ்வொரு கிழமையும் வச்சிருப்பார் மனிசன். எங்கிருந்துதான் வாழைக்குலை கிடைக்குதோ அந்த “அல்லாஹ்” வுகுத்தான் வெளிச்சம்.
அதை கொண்டுபோய் மூணாவெட்டி நான்,உம்மா,தங்கச்சி எத்தின நாள் சாப்பிட்டிருக்கம், வாப்பாவும் சில நாளையல்ல வாழைப்பழம் சீப்பாக வாங்கிக்கு வருவாங்க.
பெரிய கோழிச்சூடன் வாழைக்குலை ஒண்டு அரைவாசி பழுத்தாப் போல என்னேரமும் கடட விட்டத்துல தொங்கிக்குத்தான் இருக்கும். நான் முன்னயெல்லாம் நெனைக்கிற கிழமை கணக்கா தொங்குது இந்த வாழைப் பழம்கள் விக்கிது இல்லையாக்கும் எண்டு பொறகுதான் தெரியும் அவர்ர கடைக்குள்ள வாழைக்குலை இல்லாட்டி அந்த மனிசனுக்கு நித்திரை வாறல்லயாம்.
அவரு என்ன கொறஞ்ச ஆளா இதுகள் எல்லாம் லஞ்சமா தாறஅவியரெண்டு பே ரையும் மாறி,மாறி கொஞ்சுறத்துக்கு கூலி. மறக்கமுடியாத மனிஷப் பழங்கள்.
பொறகு வாப்பா என்ன சூதானமா தூக்கி பைசிக்கிள் பாறில் சுத்தியிருக்கும் துவாய்க்கு மேல் இருத்தாட்டுவாங்க எங்கள் பயணம் மீண்டும் தொடரும் வயல் வெளி நோக்கி.ஆனா அதுக்குள்ள ஒரு ஆனை குறுக்கறுக்கும்.
எப்பவும் இந்த மாதரி நேரத்தில சாக்காண்டியர் வட்டானையார் கடைக்கு வாறது வழக்கமோ என்னமோ தெரியாது,ஆனா நான் வாற நாளையில் எல்லாம் வந்துக்குத்தான் இருக்கார்.அவரைக் கண்டால் வாப்பா என்னை பைசிக்கிலில் இரி மகன் எண்டு “இஸ்ட்டாண்ட்” போட்டு நிப்பாட்டிட்டு கிட்டப் போவாங்க.
தூரத்து உறவு மாமாவாம் அதோட அந்த ஆள் வட்டானை வேற மரியாதை கொடுக்கத்தானே வேணும்? கதைக்கக்க,கதைக்கக்க என்னப்பாத்து ஒருசாதியா கண்ண பெரட்டிக்கு கனைப்பார் எனக்கு பயம் வாற.முன்ன ரெண்டு மூணுதரம் சத்தமா கத்தியும் இருக்கன்.
இவ்வளவும் செஞ்சி போட்டு சும்மா போக மாட்டார் வாப்பாவுடன் கதைச்சிக்கு நிண்டு போட்டு போகக்க கிட்ட வந்து என்னடா பேரா பயன்திட்டையா எண்டு கேட்டுப் போட்டு ரெட்டப் பக்கட்டு பச்ச வார தொறந்து ரெண்டு ரூபா குத்தியொண்ட எடுத்துத்தந்து கொஞ்சுவார் எனக்கெண்டு ரெண்டு ரூபா காச மாத்தி வச்சிக்கு திரியிற என்ன எழவோ தெரியா வாயில வேத்திலாக்கு நாறுது எண்டு எத்தின தரம் செல்லி இருக்கன் கிழட்டு வட்டான கேக்க மாட்டார்.
நாங்க கடையடிய இருந்து வெளிக்கிடவும் அந்த மனிஷன் உள்ள போகவும் வாப்பா பொழுத பாக்காங்க அந்தப் பார்வையில் கிளிகள் வயலுக்க கதிர் ஆய்வது மின்னி மறைந்திருக்க வேண்டும்.வாப்பா பொழுதப் பாத்து நேரம் கணிப்பாங்க மணிக்கூடுகள் பிச்சை வாங்கணும்.
வாப்பா ரோட்டு மாஸ்ட்டரில் ஏறி வேகமாக பெடிலை மிதிக்க காற்றை கிழித்தபடி வாங்கமம் சந்தி நோக்கி அது விரையும்,வளைந்து வரும் வலது கை வாய்க்கால் நீரில் மிதந்து என் மனம் கரையும்.
வாப்பாவும்,நானும் வாங்காமம் சந்திப் பாலத்தை குறுக்கறுத்து கீச்சார்ர குள வலதுகை கண்ட வயலுக்க போகும் ஒத்தையடி பாதைக்குள் இறங்குகிறோம்.அது மாட்டு அரவம் போல பாதை வழிநெடுக ஆனை படுத்தாலும் வெளங்காத பள்ளம் குன்றும்,குழியுமாக.மிகவும் அவதானத்துடன் மெதுவாக வாப்பா சைக்கிளை செலுத்துகிராங்க.
வாய்க்கால் ஓரமாக இருக்கும் சுபைதீன் மாமாட நெல்லுக் குத்தும் மிஷின் சத்தம் காதை பிளக்கிறது.கோழிக்கு தவிடு வாங்க வாப்பாவுடன் போகக்க பாத்திருக்கன் சுபைதீன் மாமா அந்த டீசல் இயந்திரத்தை இயக்க அவர் படுற பாடு எண்டஅல்லாஹ் செல்ல ஏலா.சுபைதீன் மாமா இயந்திர இயக்கத்திருகியை செலுத்தி சுத்துர வேகத்த பாத்து பல தடவை எனக்கு தலை சுத்தியிருக்கு.கணகாட்டுப் புடிச்சது ஒரு தரத்துல இயங்கவும் மாட்டா அப்படி ரெண்டு,மூணு தரம் விட்டு,விட்டு சுத்தணும்.வந்தாலும் தலையழிஞ்சது இடி உளுகுற மாதரி போடுற சத்தம் பெரிய ஆக்களையும் திணுக்கிட்டு ஏறிய வைக்கும். சத்தத்தில் விரண்ட குரங்குக் கூட்டம் ஒன்று கேப்டன்ர வளவுக்குள் பூவும்,காயுமாய் இருந்த மா மரத்தை குரங்குகளுக்கு உரிய பாசையில் பதம் பார்க்கின்றன.
தாய் குரங்கின் வயிற்றை கெட்டியாக பிடித்திருக்கும் வரைதான் குட்டிக்குரங்கும்,தாய் குரங்குக்கும் பந்த பாசமாம் வாப்பா கன்னாள் ஒரு சமயம் கேட்ட போதுசொன்னாங்க.
நான் சில சமயம் நினைக்கிற உம்மும்மாவையும்,சாச்சையும் பத்தி கேப்பம் எண்டு “அறப்படிச்ச கதையெல்லாம் பழகப் போடா” எண்டு ஒருநாள் உம்மா அதட்டினதுதான் ஞாபகம் வாற அதனால ஒண்ணும் கேக்குறல்ல.
அசலூர் மாப்புள ஒண்டு வரையும் சாச்சிக்கு கலியாணம் முடிச்சிக் கொடுத்ததாம் கொஞ்ச நாள் தங்கமான மனிசனா இருந்ததாம் பொறகு ஊரே காரித்துப்பும் அளவுக்கு பெயித்தாம் அவர்ர வேலைகள்.
மாப்புளை குடிச்சி,குடிச்சி சாச்சிட தாலிக்கொடியையும் வித்துப் போட்டு போனதாம் போன மாப்புளை போனவர்தானாம். “எண்ட புள்ளைக்கு புள்ள,குட்டி பொறக்காம அல்லாஹ் காப்பாத்திப் போட்டான் இல்லாட்டி சீரழிஞ்சிருக்கும்”எண்டு உம்மும்மா சொல்ல கேட்டிருக்கன் கனக்க வெளக்கம் இதை பத்தி செல்ல எனக்கி தெரியா கண்ணாளய கதை.ஆனா சாச்சி உம்மும்மாவை கெட்டியாக பிடித்திருக்கிறார் என்பது மட்டும் விளங்குது.
சங்கு தப்பினா கணவதி எண்டு சொல்லுறாப் போல அந்த ஒத்தையடிப் பாதை.கொஞ்சம் பிசகினா தலை குப்புற விழவரும்.வாப்பாவால் தொடர்ந்து பைசிக்கிளை மிதிச்சி செலுத்துவது சிரமமாக இருந்ததால் என்னை இருக்க வைத்து தள்ளிக் கொண்டு போறாங்க வாப்பாவின் கவனம் முழுக்க பாதையில் விழுந்து விடாமல் வயலுக்க போய் சேர வேண்டும் என்பதாய் இருக்கலாம்.ஆனால்; எனக்கு எங்கோ தொலைவிலிருந்து அகவும் மயில் மனதில் ஆடுகிறது......
தொடரும்...

