கடைபோக வாழ்தும் என்பார் - ஆசாரக் கோவை 66
கடைவிலக்கிற் காயார் கழிகிழமை செய்யார்
கொடையளிக்கட் பொச்சாவார் கோலநேர் செய்யார்
இடையறுத்துப் போகிப் பிறனொருவற் சேரார்
கடைபோக வாழ்துமென் பார். 66 ஆசாரக் கோவை
பொருளுரை:
வாழ் நாளின் இறுதியளவும் இடையூறு இன்றி வாழ வேண்டும் என்று
கருதுபவர் அரசருடைய வாயிலில் தம்மைத் தடுத்தால் கோபப்பட மாட்டார்.
மிகுந்த உரிமையை அவ்வரசர் பொறுத்துக் கொள்ளாதபடி எடுத்துக் கொள்ள மாட்டார்.
அரசனுக்குக் கொடுக்க வேண்டிய இறைப் பொருளை மறந்தும்
கொடுக்காமல் இருக்க மாட்டார்.
அரசருக்கு ஒப்பாக தம்மை அணி செய்து கொள்ள மாட்டார்.
வேந்தவையில் ஊடறுத்துச் சென்று மற்றொருவனைச் சேரமாட்டார்.
கருத்துரை: அரசருடன் பழகுவோர் அவரிடம் எந்த அளவில் நடந்து கொள்வது நலம் தருமோ அவ்வளவில் நடப்பதே முறையாகும்.
கடை – கடைசியிடம், வீடு முதலியவற்றின் கடைசியிடம்,
வாயில். இது முன்வாயில், பின்வாயில் எனப்படும்.
முன் வாயில் தலைக்கடை, பின் வாயில் புறக்கடை எனப்படும்.
பொச்சாவார் - தம் நிலையை மறந்து இகழார்.
தலையளி - முக மலர்ந்தினிய கூறல்.