தெய்வாதீனம் 3 எதிர்பாரா சந்திப்பா இறைவன் திட்டமா

எப்படி நம் வாழ்வில் சில எதிர்பாரா விதங்களில் எதிர்பாரா மனிதர்கள் மூலம் இறைவன் வழிநடத்துகிறானோ அவ்வாறே நம்மையும் இறைவன் நகர்த்திச் சென்று இன்னொருவர் வாழ்க்கையில் நன்மை செய்யக் கருவியாக்குவதும் உண்டு. அத்தகைய ஓரிரு நிகழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நானும் என் மனைவியும் உடற்பயிற்சியை முன்னிட்டு, மாலை வேளைகளில் உலவி வருவோம். நகரத்தில் உள்ள பூங்காக்கள், நதிக்கரையோரப் பாதை போன்ற இடங்களில் பலரும் அவ்வாறு நடந்து கொண்டிருப்பார்கள்.

அப்படி 2010-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு மாலை உலாவி வந்துகொண்டிருக்கும் சமயம் சற்று உட்கார்ந்து விட்டுப் பிறகு மேலும் நடக்கலாம் என்று தோன்றியது. அங்கிருந்த பல நீள் இருக்கைகளில் (benches) ஒன்றில் மட்டும் உட்கார இடமிருந்தது. அதிலும் ஒரு மூத்த பெண்மணி இருந்தார். அவர் புடவை அணிந்திருந்ததால், நம் பக்கத்தைச் சேர்ந்தவர் என்று தோன்றவே, சற்றும் தயக்கமின்றி அங்கு போய் அமர்ந்தோம். என் மனைவி தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு பேச்சுக் கொடுத்தார், அவர்கள் வங்காளத்தச் சேர்ந்தவர்கள். கணவனும் புதிதாக மணம் புரிந்த மகன், மருமகளும் உலவச் சென்றிருப்பதாகவும், தனக்கு உடல் நலம் சரியில்லாததால் செல்ல முடியவில்லை என்றும் கூறினார். மகனுக்கு இங்கு (யூ. எஸ். ஏ யில்) வேலை. புதிதாக மணமானதால், பெற்றொர் வந்திருந்தனர்; சில மாதங்களில் அவர்கள் கொல்கத்தா சென்றுவிடுவார்கள். அவர் மிகவும் பீணிக்கப்பட்டும் உடல் வலுக்குறைந்தும் காணப்பட்டார். சிறிது நேரத்தில் மற்றவர்களும் அங்கு வந்தனர். தொலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டு பிரிந்தோம்.

டிசம்பர் மாதம் மகரிஷி வேதாத்திரி அவர்களின் சீடர் ஒருவர் அட்லாண்டா (நாங்கள் இருக்கும் இடம்) வரும் செய்தி கிடைத்தது. அவர் ஒரு வாரம் இங்கு இருந்து, விருப்பமுள்ளவர்களுக்கு மகரிஷியின் எளிய குண்டலினி யோகம் பயிற்றுவிக்கத் தயார் என்று தெரிந்தது. அந்த வாய்ப்பைப் பயன் படுத்திக்கொள்ள நினைத்து, எங்கள் இல்லத்தில் ஏற்பாடு செய்தோம். அந்தப் பயிற்சிக்கு மேலே குறிப்பிட்ட புதிய வங்காள நண்பர்களையும் அழைத்தோம். பெரியவரும், மருமகளும் வர விருப்பம் தெரிவித்தனர். தாயால் வர உடல் நிலை அனுமதிக்கவில்லை. மகனுக்கு அலுவல் நேரம் முடிந்து வர முடியாது. எனவே நான் அவர்கள் வீட்டுக்குச் சென்று பெரியவரையும், மருமகளையும் கூட்டிவர, மகன் அலுவல் முடிந்து எங்கள் வீட்டுக்கு வந்து அவர்களைத் திரும்ப அழைத்துச் செல்வார்.

பிறகு, ஜனவரியில் அவர்கள் இந்தியா திரும்பு முன் ஒரு மாலை அவர்கள் வீட்டிற்கு எங்களை விருந்துக்கு அழைத்தனர். நாங்கள் சென்று விருந்துண்டு, சில மணி நேரம் அளவளாவி மகிழ்ந்து வீடு திரும்பினோம்.

அந்த மூதாட்டி மிகவும் சோர்ந்திருந்தார். இருந்தும் அவர்கள் எல்லோரும் சிறப்பாகவே விருந்தோம்பல் செய்தனர். எல்லொரும் (புதிய மணப்பெண் உட்பட) மகிழ்ச்சியாகவும், சகஜமாகவும் இருப்பதாகத் தெரிந்தது.

சிறிது நாட்களுக்குப் பின் என் மனைவி அந்தப் புதிய மணப் பெண்ணை தொலைபேசிஎயில் அழைத்துப் பேச எண்ணினார். அவள் மிகவும் இள வயதினராகவும், புதிய, பழக்கமில்லாத ஊருக்கு, மணமானவுடனே வந்திருப்பதனாலும் பெரியவர்கள் இந்தியா திரும்பி விட்டதனாலும் அந்தப் பெண்ணுக்கு ஏதும் உதவி வேண்டுமா என்று கேட்க எண்ணினார்.

ஆனால், விழுந்ததே இடி!

தொலை பேசி இந்தியாவில் பெரியவருக்குச் சென்றது. அவர் அழமாட்டாக்குறையாகச் சொன்னது: அவர்களை விமான நிலையத்தில் வழியனுப்பிவிட்டு வீட்டுக்குத் திரும்பிய மகனுக்கு ஒரு பேரிடி காத்திருந்தது. அவரை போலீசார் கைது செய்து விட்டனர்! அவர் மனைவி, மற்றொரு வங்காளி குடும்பத்தி்ன் உதவியுடன் போலீஸுக்குப் புகார் கொடுத்து, கணவனை வீட்டிற்குள் வர முடியாதவாறு செய்துவிட்டாள். அவர்கள் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும் அவரிடமிருந்து பாதுகாப்பு வேண்டுமெனவும் புகார்கள்!

இதைக்கேட்ட அதிர்ச்சியில், தாயாம் மூதாட்டி இறந்து விட்டார்.

அந்தப் பெண்னை வீட்டிலிருந்து எங்கும் வெளியேசெல்ல விடவில்லை;, அழைத்துச் செல்லவும் இல்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டு!

குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் 2012 ஜூலை மாதம் தொலைபேசியில் கூப்பிட்டார். அவர் இங்கு வேலை இழந்து, ஃப்ளாரிடா சென்றிருந்தார். அவர் மீது மனைவியைக் கொடுமைப்படுத்தியதாக சுமத்தப்பட்ட 19 குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் நாங்கள் சாட்சி சொல்ல முடியுமா என்றார். இருவரும் சென்றோம். இந்த இடைக்காலத்தில் அவர் தந்தையாரும் இறந்துவிட்டிருந்தார்; மிகப் பண நஷ்டத்துடன், தாய் தந்தை இறந்தபோதும் வழக்கில் மாட்டிக் கொண்டிருந்ததால் இந்தியா சென்று வர முடியாமல் மனக்கஷ்டத்திற்கும் ஆளாகி மிகத் துன்பத்திற்குள்ளாகியிருந்தார்.

வழக்கு மன்றத்தில் என்னைக்கேட்டது வாதி, பிரதிவாதிகளை எனக்குத் தெரியுமா, எப்படி எவ்வளவு காலமாகத் தெரியும் என்பதே. நான் அவர்கள் எல்லொரையும் பூங்காவில் முதலில் பார்த்தது, யோகப் பயிற்சிக்கு சில நாட்கள் பெரியவரும், வாதியும் வந்தது, பிறகு அவர்கள் வீட்டில் விருந்துக்குச் சென்றபோது எல்லோரையும் பார்த்துப் பேசியிருந்தது எல்லாவற்றையும் சொன்னேன்.

பிறகு சில நாட்கள் கழித்து அந்த இளைஞர் தொலை பேசியில் தான் முற்றிலும் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டதாகவும் நான் கூறிய வாக்குமூலம் அந்தப் பெண் வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதியின்றி கொடுமைப்படுத்தப்பட்டது பொய் என்பதைத் திட்டவட்டமாக்கியதுதான் முக்கிய காரணம் என்றும் கூறி நன்றி தெரிவித்தார். இதனால், அவருக்கு மேலும் பண நஷ்டம் இல்லாமல் போனது என்றும் கூறினார்.

பின்னோக்கிப் பார்க்கும்போது, நாங்கள் அவர்களை “அகஸ்மாத்”தாகச்

சந்தித்தது, எங்கள் வீட்டில் யோகப் பயிற்சிக்கு அந்தப் பெண்ணும் வந்தது, எல்லாமே அந்த இளைஞரை மிகப் பெரிய இக்கட்டிலிருந்து விடுவிக்கவென்றே இறைவன் திட்டமிட்டுச் செய்ததாகத் தோன்றுகிறது.

..................................................

வல்லான் விதியே ஆடுமகன்;
வலியில் மனிதர் கருவிகளாம்;
சொல்லா தெங்கும் இழுத்திடுவான்,
ஜோடி சேர்ப்பான், வெட்டுவான்,

..........................................

-- ஒமர் கய்யாமின் ருபையத்/

கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை மொழிபெயர்ப்பு

எழுதியவர் : இன்னமுதம் (21-Jul-14, 7:36 am)
பார்வை : 106

மேலே