உன் வாசம் தாக்கியே வாடிப் போகணும் - இராஜ்குமார்

பொய்க்காத பருவ மழையின்
மண் மீதான மயக்கத்தால்
யாரோ ஒரு மன்னவனின் மனம் குளிர
வரப்பு வழக்கம் போல் அமைய
பத்திரமாய் பயிரிடபட்டோம்
நீயொரு தோட்டத்தில்
நானொரு தோட்டத்தில் ..!!

உன் வேர் நனைத்து
விரைந்து வரும் நீரில்
நான் நனைந்தேன் ..!!

உன்னிதழ் குவி மொட்டினை
தூர பார்வையில் உற்று பார்த்தேன் ..!

இதழ் விரித்து
மலரான மறுகணமே
கிட்ட பார்வையால் தொட்டு பார்த்தேன் ..!!

நீ பூத்த போது - என்
புன்னகையில் புது ஏக்கம் - பின்
காற்றிலும் காதல் தேக்கம் .!!

இதோ வழுக்கும்
வாழைத் தண்டில்
தடுமாறாமல் நின்று
காற்றில் கவி தூவி
காதல் செய்த பாவி - நான் ..!!

தேன்
சொட்டும் உன்னிதழை
வண்டு வந்து வருடினால்
நின்று போகும் என்நெஞ்சம் ..!

உன்
தேகத்தை சேதம் செய்ய
நினைத்து வந்த அவ்வண்டை
வாழை பூவில் வழிமறித்து
கொன்று விட்டேன் குரல்வளையில் ..!

மயங்கும் மாலை பொழுதில்
மாநிற மங்கையின் மணிக்கட்டில்
மாட்டி கொண்டது உன் காம்பு ..!
உனை பறித்து போனதை
பார்த்த கணத்தில்
மறந்து போனேன் என் நினைவை...!!

பட்டுப் போன என்னுடம்பை
இதோ
உரித்து போகுது சிறு விரல்கள் ..!!

இமை திறந்து பார்கையில்
வாசம் இல்லா ஓர் தரைக்கு
வாசம் வாரி வாரி நீ வழங்க
அம்மங்கையின்
இதமான இடை அருகே நானிருக்க
அவள் உள்ளங்கையோடு
உறவாடினாய் நீ ..!!

மென் காற்றின்
வாசத்தில் வாழ்ந்த காதல்
கூந்தலுக்கு வாசம் சேர்க்கும்
குதூகல ஆசைக்கு அழைக்கப்பட்டதால்
அழிந்து போனது நம்மிருப்பிடம் ...!

என்னவளான மல்லிகை மலரே
நாரான என்னுடம்பு - உன்
காம்புகளில் நுழைந்து
உன்னிதழுடன் இணைய
என் இறுதி நாட்கள்
உன்னோடே உயிர் வாழனும் ..!!

இதோ அக்குமரியின்
விரல் வித்தையால்
விசித்திர வடிவில் அவள்
கூந்தலில் குடி கொண்டோம் ..!!

இனி அவள்
கூந்தலில் வாழும்
ஓர் நாளில் - நான்
உன் வாசம் தாக்கியே
வாடிப் போகணும் ..!!


-- இராஜ்குமார்

==============================================================================================
மல்லிகை மலரை என்னவளாகவும் என்னை வாழை நாராகவும் எண்ணிய நிலையில் என் காதல்
==============================================================================================

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (22-Jul-14, 1:27 am)
பார்வை : 392

சிறந்த கவிதைகள்

மேலே