சும்மாயிரு சொல்லற

வம்பு பேசி,
கழிக் கம்பாய் காலம் நகர்த்தி,
பழிச் சுமக்கும் பம்பரமாய் நாம் சுழலும் நரகமிதில்
எம்பிப் பறித்தால் எட்டுவதற்கிங்கிந்த
ஞானக் கம்பென்ன, தினை புனத்தில் விளைவதுவோ?!

வனமாய் இலங்கும் -உன்
உள் மனம் உடைத்து உள்நோக்கு!
குள்ள நரியும் -உடன்
குதித்தோடும் குதிரையும்
இன்னும், பலவும் காண்பாய்!

கூடலழித்த கண்ணகியாய் -உன்
தியானச் செந்தழலால் மன வனம் எரி!
வெறுஞ்சொல் களைந்ததை பக்குவமாக்கு!
பிறைமதியாய் அதில் மௌனம் பயிர் செய்!
பின், வளரும் மலர்ச்செடி மும்முரமாக!

தரும் ஓர் நிறைமதி நன்னாளில்
"ஞானத் தேன்"! - அதை
உணர்ந்து ஒலித்த தேவ மந்திரம்,
"சும்மாயிரு! சொல்லற!!"



***************************************************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (23-Jul-14, 4:50 pm)
பார்வை : 729

மேலே