ஸ்டிக்கர் பொட்டுகள்

அன்று சூரியனை ஏவி
என்னை எழுப்ப செய்திருந்தாள்
என் தாய்..
கட்டில் அருகே தேநீர் கோப்பையும்,
பத்து நிமிட அடுபங்கரை பிரசவத்தில்
பெற்றெடுக்கும் தன் தாய்
இல்லை என்று
அழுது ஆவியாய்
வான் ஏறி கொண்டிருந்தது..
"எதை கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு"
என்ற கன்னனின்
கீதாசாரத்தை என்னும்போது
அவன் மேல்
பரிதாபம் தான் தோன்றியது...
அவனுக்கு தாய் இருந்திருந்தால்
அப்படி சொல்லி இருக்க
மாட்டானோ என்னவோ..
கொல்லை சுவற்றிலும்,
கண்ணாடி பேழையிலும்
சிக்குண்டு
சிரிப்பை சிந்தும்
ஸ்டிக்கர் பொட்டுகளை
பார்க்கும் போது தான்
என் தாயும்
"கூடு விட்டு கூடு பாயும்" வித்தை கற்றவள்
என்பதை அறிந்தேன்...
வாசலிலே கீரை கிழவி
"அப்பு! கீர வாங்கிக்கோயா...ஏழு ரூபா தான்"
என்ற போது
என் தாயின் குரல் தான்
காதேறி நின்றது..
நாவு குழற
குமுறிய கண்ணீர் துளிகள்
கன்ன வயல்களை
காவு வாங்கிக் கொண்டிருக்க
வாசல் நோக்கி
நடக்க எத்தனித்தேன்..
பளிங்குசுவரிலே
படமாய் புகுந்த தாயை
வாசலிலே காண போகும்
வாஞ்சையில்...

எழுதியவர் : (25-Jul-14, 8:29 am)
சேர்த்தது : JK
பார்வை : 100

மேலே