நல்லாசிரியர் சொல்லிற் செவிகொடுத்துக் கேட்டு ஈக - ஆசாரக் கோவை 74

நின்றக்கால் நிற்க அடக்கத்தா லென்றும்
இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார்
சொல்லிற் செவிகொடுத்துக் கேட்டீக மீட்டும்
வினாவற்க சொல்லொழிந்தக் கால். 74 ஆசாரக் கோவை

பொருளுரை:

சிறந்த குணமுள்ள மாணவர் எப்பொழுதும் ஆசிரியர் முன்பு அடங்கியிருத்தல்
வேண்டுதலின், ஆசிரியர் பாடம் சொல்லாதிருந்தால் தாம் சும்மா இருக்க வேண்டும்.

அவர் தம் முன்பு இருந்தபோது அவர் கட்டளையிடாமலிருக்க தாம் எழுந்து
போகாதிருக்க வேண்டும்.

அவர் பாடம் முதலியவை சொல்லின் காது கொடுத்துக் கேட்டு ஒப்புவிக்க வேண்டும்.

அவர் ஒன்றுஞ் சொல்லாவிட்டால் தாம் மீளவும் அவரைக் கேளாதிருக்க வேண்டும்.

கருத்துரை:

நன்மாணவர் ஆசிரியர் இருவென இருந்து, சொல்லெனச் சொல்லிப் போவெனப் போய்,
செவி வாயாகக் கேட்டவை விடாது உள்ளத்தமைக்க முயல்வர்.

பெருந்தக்கார் - பெருமையாகிய தகுதியுடையார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jul-14, 8:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 125

சிறந்த கட்டுரைகள்

மேலே