பிரிய விடை பிரியா விடை
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
வரவு வரும் வழியில் செலவும் வரும் .
அன்பிற்குரிய தோழர் / தோழியரே ,
பிரியத்துடன் இணைந்திருந்த இந்தத் தமிழ் தளத்தில் இருந்து நான் பிரிந்து போகும் நேரமும் வந்தது .
இணைந்திருந்த நேரம் இனிமையான கவிதைகள் படைத்த , படித்த,கருத்துக்கள் பரிமாறிய,பாராட்டி மகிழ்ந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .
இந்தத் தளத்தை அருமையான முறையில் வழி நடத்தி சிறந்த தமிழ்ப் பணி ஆற்றிடும் தோழர் அகன் அவர்களுக்கு என் பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும் . தளம் மேலும் மேலும் வளர்ந்தோங்க என் மனமுருகும் பிரார்த்தனைகள் .
நான் உறுப்பினராக இல்லாதபோதும் ஒரு வாசகனாக தளத்தை வலம் வருவேன் .
அனைவருக்கும் நன்றியும் வணக்கங்களும் .
மேலும்
பிரிவு வரும் நேரத்தில்
பிரியுமுடன் சில வார்த்தை
பேசிப் பிரிந்து செல்வேன்.
நான்,
புனை பெயரில் எழுதி வந்தேன்
பொய்ப் பெயரில் எழுதவில்லை
தாயின் பெயர் தழுவி
தரமுள்ள படைப்பளித்தேன்
காடு மலைகளிலே
காற்று தவழ்வது போல்
கவிதைத் தளத்தினிலே
கலந்து மகிழ்ந்திருந்தேன்
ஆனாலும் ஒரு குழப்பம்
இயல்பாக வந்ததுவே.
பொதுத் தளத்தில் வந்து விட்டு
தனிக் கொள்கை பேசுதற்கு
தயக்கம் வருகிறது,மனம்
சங்கடம் அடைகிறது .
இந்தக் குறைதீர
எந்த வழியுமில்லை .
எனவே தான் செல்லுகின்றேன்
மனம் திறந்து சொல்லுகின்றேன்.
தனி விடுகைக் கதவு
தானாக மூடியதால்
கவிதை வரும் கதவை
கடைசி முறை திறந்தேன் .
யார் மனமும் நோக வைக்கும்
நலிந்த மனம் எனக்கில்லை
இப்படியோர் நிலை குறித்து
என் மனமும் வாடி நிற்கும்
தளம் எனக்குத் தந்த சுகம்
தமிழ் கொடுத்த அன்பு வரம் .
நன்றியுடன் விடை பெறுவேன்
நலம் பெற்று நாம் வாழ்வோம் .
அன்புடன்
நாதமாரா .