காதல் சொல்ல வந்தேன்
என்
விழி பார்க்கும்
அழகான
கண்ணாடி
நீ .
***********************
“நான்
எனக்குள் மட்டுமே
பேசிக்கொண்டிருக்கிறேன்,
உன்னுடன் பேச
உன்னை
எப்பொழுது தருவாய் ?”
************************
“மதில்மேல் பூனையானது”
உன்னிடத்தில் சொல்லவும் முடியாமல்
உள்ளே வைத்துக்கொள்ளவும் முடியாமல்
புலம்பிக்கொண்டு
என் காதல்…
************************
நான்
எப்பொழுதுமே உன்னோடு
கைக்கோர்த்துக்கொண்டுதான் நடக்கிறேன்.
நீ மட்டும் ஏன்
என்னைவிட்டு
விலகியே நடக்கிறாய்……
************************
நீ
கோபப்பட்டு
உன் விழிகளால்
திட்டும்பொழுதுதான்
வெறும் சத்தமாகிறது
எல்லா மொழிகளும் !!
************************
உனக்காக காத்திருக்கும் பொழுதெல்லாம்
தார் சாலை
பாலைவனச் சோலையாவது
எப்படி ?
************************
கதவு, ஐன்னலையெல்லாம் அடைத்து
தனிமையில் அமர்ந்து
பரிட்சைக்கு
படிக்கும்பொழுதும்
உன் நினைவே வரும்பொழுது
என்ன செய்வது ?
************************
என்னதான்
தவம் செய்ததோ
உன்னை எப்பொழுதும்
துக்கிக்கொண்டு வளம்வரும்
அந்த மிதிவண்டி.
************************
அழகான கவிதைகளையெல்லாம்
உன்னிடம் பேசிவிட்டு
ஏதேதோ கிறுக்குகிறேன்
கவிதையென்று சொல்லி. . .
************************
உன்னை
நிலவென்று
சொன்னதற்காகதான்
இன்னும்
விலகியே நடக்கிறாயா. . . . . .
************************
உன் நெற்றியில்
ஒட்டவைத்திருக்கும்
ஸ்டிக்கர் பொட்டைப்போலத்தான்
உன்னையும் ஒட்டிவைத்திருக்கிறேன்
என் இதயத்தின்
எல்லா பக்கங்களிலும்.
************************
உனக்காக
காத்திருக்கும்பொழுது
கடிகாரம் கூட
கேட்பதில்லை
என் பேச்சை.
************************
ஒரு காதலர் தினத்தில்
என் காதலைச் சொன்னபோது
வெட்கக் கவிதைகளால்
என்னை கிறுக்கிச்சென்றாய்
கதறி அழுகிறது – என்
கவிதைக் குழந்தைகள். . . .
************************
திடீர் மழையில்
நானைந்ததைப் போல்
நம்முடைய
முதல் தனிமை.
************************
அழுகின்ற குழந்தைக்கு
ஆறுதல் சொல்லுவது மாதிரித்தான்
ஆறுதல் சொல்லுகிறேன்
உன்னைப் பிரிந்து வீடு செல்லும்போது
என் காதலுக்கு.
************************
"உயிரின் அடிப்படை அலகு செல்"
என்பதை அடித்துவிட்டு
"காதல்" என்று
நீ எழுதியிருந்த போதுதான்
புரிந்தது,
உன்னையும் காதல் பிடித்திருப்பது.
************************

