ஊருக்குப் போன மச்சான் - மணியன்

ஊருக்குப் போன மச்சான் - என்னை
உடைஞ்ச நிலவா ஆக்கி விட்டான் . . .
பாருக்குள்ள நல்ல நாடு உம்மப்
பாரம் தாங்கக் கூடலையோ !? . . .
தேக்கு மரத் தேகமச்சான் - எங்கோத்
தேடி என்னை இழுத்து வந்தான். . .
பாக்கு வெத்தல மாத்தி என்னை
பரிசம் போட்டுக் கவுத்துப் புட்டான் . . . .
எப்ப நீயும் வரப் போற
என்னைத் தேடி நீயும் மச்சான். . .
சேப்படித் திருடன் போல எந்தன்
செப்புத் தங்க உடலைத் தீண்ட. . . .
போயும் போயும் நானும் இங்க
பொம்பளையாப் பொறந்ததால
நாயும் பேயும் சண்ட போடும்
நடு ராவுலயும் முழிச்சிருக்கேன் . . . .
கட்டெறும்பா நான் பொறந்திருந்தா உன்னக்
கடிச்சுத் தினமும் ரசிச்சிருப்பேன். . .
கன்னிப் பெண் நானும் உன்னக்
கால் கொலுசுலல்லோ முடிஞ்சு வச்சேன். . . .
சீமைக்குப் போனவனே உன்
சிறகொடிஞ்சுப் போகலாச்சோ. . . .
பாயினிலே நானும் இங்கேப்
பாதரசமா அல்லோ உருளுறேனே. . . .
காதலுல நானும் இங்கே தினம்
கண்டபடி உளறுறேனே. . . .
காதவழி போனவனே என்
காதல் வலி புரியலையே. . . . .
கண்ணடிச்சு எனைக் கவுத்தக்
கதை எல்லாம் மறந்து போச்சோ. . .
கண்டாங்கிச் சீலைக்காரி நானும்
கம்பங் களியாகக் கருகுறேனே . . . .
தொட்டு விடும் தூரத்துல
பொட்ட புள்ள நான் இருந்தா
தொட்டாச் சிணுங்கி செடியாட்டம்
பட்டு மனம் மகிழ்ந்திருப்பேன் . . . .
காலம் கெட்டக் காலம் இது
கடல் கடந்து வாடா மச்சான். . . .
கோலம் போட்டு வாசலுல நானோக்
கோஹினூராக் காத்திருக்கேன் . . . . .
*-*-*-*-* *-*-*-*-* *-*-*-*