உன்னை நனைத்த மழை

உன்னை
நனைத்த மழை
உண்மையில்
தன்னைத்தான்
நனைத்துகொண்டது !
=========================
நீ
அணிந்து வந்ததில்
அழகு சாதனப்பொருளானது
கண் கண்ணாடி !
=========================
இனித் தேவையில்லையென்று
இனிக்கும் வேலையை
ராஜினாமாச் செய்தது
உன் எச்சில்பட்ட
ஒரு மிட்டாய் !
=========================
குரு பார்க்க
கோடி நன்மை !
நீ பார்க்க
கோடி இம்சை !
=========================
அபாய வளைவு
ஜாக்கிரதை என்று
போர்டு வைத்திருக்கிறது
சாலை !
தயவுசெய்து
அபார வளைவு
ஜாக்கிரதை என்று
நீயும் ஒரு
போர்டு மாட்டிக்கொள் !
=========================
சிறு பிள்ளைகளோடு
நீ
விளையாடிக்கொண்டிருந்தாய் !
உடனே
டவுசர் போட்டுக்கொண்டு
உன்னிடம் ஓடிவந்தது
என் மனது !
=========================
ஒரு விருந்தில்
என்னெதிரே நீ !
ஆகவே,
கண்களாலும் நான்
சாப்பிட்டேன் !
=========================
தொட்டால் சுருங்கும்
செடி தெரியும் !
பார்த்தால் புன்னகைக்கும்
ஓவியத்தை
இப்போதுதான்
தெரியும் !
=========================
தீப்பட்ட எதுவும்
தீயாகவே
ஆகிவிடுவது போல
நீ பட்ட எதுவும்
நீயாகவே
ஆகிவிடுகிறதெனக்கு !
=========================
கன்னத்தில் கைவைத்து
ஒருசாய்த்து
நீ பார்த்தாய் !
உன்னைமட்டும் காட்டி
மற்றதைக் காட்டாமல்
ஊழல் செய்தது
சூழல் !
=========================
ஒரு குழந்தைக்கு
சோறு ஊட்டும்
அம்மாவைப்போல
நீயுன்
அலைபேசிக்கு
பேச்சு ஊட்டுகிறாய் !
=========================
உன்னால்
குடிக்கப்பட்டதில்
அடங்கியது
நீரின் தாகம் !
உன்னால்
உண்ணப்பட்டதில்
அடங்கியது
உணவின் பசி !
=========================
உன்னை சுமார் என்று
நீயே சொன்னதில்
என் அகராதியில்
சுமாரும்
பேரழகும்
அர்த்தங்களை
இடம்மாற்றிக் கொண்டன !
=========================
மின்சாரத்தை விட
பயங்கர மின்சாரம்
உன் கண்கள் !
சும்மா பார்த்தாலே
தூக்கியடிக்கிறதே !
=========================
பொன்னிறமாக வறுக்கவும்
என்றிருந்தது
சமையல் குறிப்பில் !
நன்
பொன்னிறமாக என்பதை
அடித்து விட்டு
உன்னிறமாக என்று
திருத்தி எழுதினேன் !
=========================
உன்
தோற்றமெனும்
நதியில் இறங்கிய
என் கண்கள்
கரையேற மறுக்கின்றன !
=========================
சரி ,,,,,
சொல் !
எப்போது மாறும்
நம்
நட்புக்காய்
காதல் பழமாக !
=========================
ஒத்த துருவங்கள்
ஒன்றையொன்று
விலக்கிக்கொள்ளும்
என்ற
காந்த விதியை
உடைத்துப் போடட்டும்
நம்
காதல் விதி !
=========================
- கிருஷ்ண தேவன்