++++சால உறு தவ நனி கூர் கழி++++

சால உறு தவ நனி கூர் கழி

என்ன தலைப்பைப் பார்த்தால் ஒன்றும் புரியவில்லையே என்று நினைக்கிறீர்களா? சாலச் சிறந்தது என்று சிலர் சொல்வார்கள் கேட்டிருக்கிறீர்களா? அது மட்டுமே இந்தப் பட்டியலில் இந்தக் காலத்திலும் மிகுதியாகப் பயன்படுகிறது. ஆனால் தலைப்பிலுள்ள ஆறு சொற்களும் சில சொற்களின் முன்னால் நின்று 'மிகுதி', 'பெருக்கம்' போன்ற பொருட்களைத் தந்து நிற்கும்.

1. இலக்கண நூலான நன்னூல் சொல்வது:

சால உறு தவ நனி கூர் கழி மிகல்

இந்த ஆறு சொற்களும் 'மிகல்' என்ற பொருளைத் தரும்.

2. பாரதியாரின் சுயசரிதையில் வருவது:

வசிட்ட ருக்கும் இராமருக்கும் பின்னொரு
வள்ளு வர்க்கும் முன் வாய்த்திட்ட மாதர்போல்
பசித்து ஓர் ஆயிரம் ஆண்டு தவம் செய்து
பார்க்கினும் பெறல் சாலவரிது காண்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதைத் தான் இங்கே சொல்கிறார். மிக அரிது என்ற பொருளில் சாலவரிது என்கிறார்.

3. திருவாவடுதுறைப் பெருமானைப் பாடும் திருநாவுக்கரசப் பெருமான் சொல்வது:

உற்ற நோய் தீர்ப்பர் போலும்
உறுதுணை ஆவர் போலும்
செற்றவர் புரங்கள் மூன்றும்
தீயெழச் செறுவர் போலும்
கற்றவர் பரவி ஏத்தக்
கலந்து உலந்து அலந்து பாடும்
அற்றவர்க்கு அன்பர் போலும்
ஆவடு துறையினாரே.

இந்தப் பாடலில் 'நெருங்கிய துணை', 'மிகத் துணை' என்ற பொருளில்உறுதுணை வருகிறது.

4. தவப்பெரியோன் என்று மிகவும் பெரியவரைக் கூறுதல் மரபு.

5. நனி என்ற சொல்லை பல என்ற சொல்லிற்கு இணையாகப் புழங்க வேண்டும் என்று இராம.கி. ஐயா கருதுகிறார். அதற்கேற்ப நனி என்ற சொல் பல இடங்களிலும் நனிவகையில் (பலவகையில்) புழங்கியிருக்கிறது என்பதை கூகுளாண்டவர் சொல்கிறார். எல்லோரும் கேட்டிருக்கும் ஒரு எடுத்துக்காட்டு.

'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே' என்ற பாரதியாரின் அழகு வரி. இங்கே மிகச் சிறந்தவை என்ற பொருளில் நனி சிறந்தனவே என்கிறார்.

6. கூர் என்பது மிகுதி என்ற பொருளிலும் கூர்மை என்ற பொருளிலும் பல இடங்களில் சேர்ந்தே வருகிறது. கூர்மதி, கூரொலி, கூரொளி, கூர்கடல், கூர்குழல், கூர்குழலி, கூர்கூந்தல், கூர்சுடர், கூர்சோலை, கூர்பொறை என்று எடுத்துக்காட்டுகளைக் கூறிக் கொண்டே போகலாம்.

7. கழி என்ற சொல்லைத் தேடி எங்கேயும் அலையவேண்டாம்.கழிநெடிலடி என்று பல பாவகைகளைக் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். கழி நெடில் அடி என்றது மிக நீண்ட அடிகளைக் கொண்ட பாவகைகளை.

பழமொழி நானூறில் இருந்து ஒரு எடுத்துக்காட்டு:

கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார் முன்
சொல்லும் கால் சோர்வு படுததால் - நல்லாய்
'வினா முந்துறாத உரையில்லை; இல்லை
கனா முந்துறாத வினை'

நம் முதல் குடிமகனார் சொல்வதைத் தான் இந்தப் பழமொழி சொல்கிறது. கனவு காணுங்கள்; கனவே செயலில் இறக்கும் என்பதைச் சொல்கிறது. அப்போது கல்வி இல்லாதவனின் மிகுதியான அறிவு கற்றவர் முன் நில்லாது என்றும் சொல்கிறார். ஏனென்றால் கல்வியில்லாதவன் கழிநுட்பம் கேள்வியில்லாமல் பிறந்த பதிலையும், கனவின்றிப் பிறந்தச் செயலையும் ஒத்தது என்பதால்.

எழுதியவர் : குமரன், Minnesota, United States (6-Aug-14, 9:48 pm)
பார்வை : 317

மேலே