காதலாகி கசிந்துருகி…

காதலாகி கசிந்துருகி…
-----------------------------------
கதையாசிரியர்: விசாலம் முரளிதரன்

---------------------------
இன்னும் படபடப்பு அடங்கவில்லை எனக்கு.

கையில் இருக்கும் செல்போனை உற்றுப் பார்த்துக்கொண்டு எத்தனை நேரம் இருந்தேன்??

தெரியவில்லை.

கொஞ்சம் கிள்ளிப் பார்த்து கொண்டேன். இது நிஜமா ??

போனில் ரிசீவ்டு கால்ஸ் ஸ்க்ரால் பண்ணி பார்த்தேன் ..

அந்த நம்பர் இருந்தது..

‘அசோக்’

‘இன்னிக்கி ஈவினிங் வெங்கட்நாராயண ரோட்ல இருக்கிற திருப்பதி தேவஸ்தானம் கோவில் கிட்ட ஒரு 6 மணிக்கு வெயிட் பண்ண முடியுமா?? உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்…’

கொஞ்ச நேரம் பிரமை பிடித்த மாதிரி இருந்தது.

அசோகிடம் இருந்து இந்த அழைப்பு வந்த பிறகு ஒன்றும் ஓடவில்லை. ஒரு 7 வருடம் ஆகியிருக்குமா .. அவனை கடைசியாகப் பார்த்து??

வீட்டுக்கு போன் செய்தேன். வர நேரம் ஆகும் ஆபீசில் கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்லி விட்டு பட்டென்று வைத்து விட்டேன்..வேறு கேள்விகள் கேட்க யாருக்கும் நேரம் கொடுக்கவில்லை..

முதல் பொய்.

வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிக் கூட்டம் கும்மாளம் இட்டுக் கொண்டிருந்தது.
கடிகார முள் நகருவேனா என்று சண்டித்தனம் பண்ணிக் கொண்டிருந்தது.
5 மணிக்கு மேல் எனக்கு ப் பொறுமை இல்லை.

மனேஜெரிடம் போய் தலைவலி என்று சொல்லி பெர்மிசன் வாங்கி கொண்டு கிளம்பினேன்.

ரெண்டாம் பொய்.

போனை எடுத்து ஒரே ஒரு கால் மட்டும் செய்தேன்.கொஞ்சம் நிம்மதி.
என்ன பேச வேண்டி இருக்கும் என்னிடம் அவனுக்கு.

அவன் கல்லூரியில் என்னுடன் படித்தவன்.

கல்லூரியில் அடியெடுத்து வைத்த முதல் நாள். டிபார்ட்மெண்ட் ஆபீஸ் எங்கே இருக்கு என்று தேடி கொண்டிருந்த என்னை. ‘மேடம் உங்க கர்சீப் கீழ கிடக்கு’ குரல் கேட்டு நிமிர்ந்தேன்.

அடர்த்தியான முடி ..கொஞ்சம் அழகான ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடன் கூடிய மீசை ஆண்கள் லிப்ஸ்டிக் போடுவார்களோ என்று சந்தேகப்பட வைக்கும் உதடு…

‘ஹலோ!!!” அவன் குரல் திரும்பி கேட்டதும் முகம் சிவந்தேன்.. ‘சே என்ன நினைப்பான் என்னை பற்றி இப்படியா ஒருத்தரை வெறித்து பார்ப்பது?? முட்டாள் முட்டாள் ..மனதிற்குள் திட்டியபடி..’ தான்க் யூ ‘ என்றுச் சொல்லி அவன் கையில் இருந்த என் உடமையைப் பிடுங்கிக் கொண்டு ஓடினேன்.

அதில் இருந்து அவனை ப் பார்த்தால் எனக்கு வெக்கம் பிடுங்கித் தின்னும். என்னோடு ஒரே வகுப்பில் அவன் இருந்தது எனக்கு ரொம்ப தர்மசங்கடமாகி ப் போனது.எல்லோரிடமும் நான் அவனை வெறித்துப் பார்த்ததைச் சொல்லி இருப்பானோ என்று எனக்கு ஒரு சந்தேகம்.

ஒரு நாள் என் ப்ரெண்ட் மாலதி ‘ ஹே அந்த அசோக் பையனுக்கு உன் மேல ஒரு இதுன்னு நினைக்கிறேன்..” என்றவுடன் தூக்கி வாரி போட்டது எனக்கு. ‘உளறாத ..நீயே எதையாவது கற்பனை பண்ணிக்காத .’ என்றேன்.

‘இல்லடி நானும் கொஞ்ச நாளா பார்த்துக்கிட்டுத் தான் இருக்கேன்.. அவன் உன்னையத் தான் பாக்கிறான்.’ அடித்துச் சொன்னாள் அவள்.

எனக்கு அவன் எங்கே பாக்கிறான் என்பது தெரிய வாய்ப்பே இல்லை. அவன் தொலைவில் வருவதை பார்த்தால் நான் தலை நிமிரவே மாட்டேன்.

ஒரே நட்பு வட்டம். ஒரே வகுப்பு .இதெல்லாம் எங்களை கொஞ்சம் கொஞ்சம் இணைத்தது . ஆனாலும் ஒருவரை ஒருவர் முகத்திற்கு நேராக பார்த்து பேசி கொள்வதில் ஒரு தயக்கம் இருந்தது.

இவ்வளவு என்?? அவன் என் சம வயது தான் .ஆனால் என்னை ஒருமையில் கூட அவன் அழைத்ததில்லை.

கல்லூரி வாழ்க்கை முடிய ஒரு மாதக்காலம் இருந்த போது தான் எனக்கு அவனை இனிமேல் தினமும் பார்க்க முடியாது என்ற உணர்வு உறுத்தத் தொடங்கியது.

‘ மாலதி. திங்க் ஐ லைக் ஹிம்’. என்ற என்னை விநோதமாக பார்த்தாள் மாலதி.

‘ஐ திங்க் யு போத் ஆர் இடியட்ஸ்.’ உங்க ரெண்டு பேர் தவிர சுத்தி இருக்கிற எல்லோருக்கும் உங்க பீலிங்க்ஸ் தெரியும். எதுக்கோ மறைச்சு வச்சுக்கிட்டு சுத்தறீங்க..இன்னும் ஒரு மாசம் அதுக்குள்ள சொல்லி வழி தேடுங்க.’ ஈசியாக சொல்லி விட்டாள் அவள்.

கடைசி வரை அவனிடம் நான் எதையும் சொல்லவில்லை. அவனும் தான்.
இப்போது திடீர் போன்கால்.

பெருமாள் தரிசனம் முடித்து விட்டு வாசலில் வந்து நின்றேன். மணி 6.30.

மடத்தனம் பண்ணி விட்டேனோ… வந்திருக்கக் கூடாதோ. என்னோடு யாராவது விளையாடுகிறார்களா.?? போன் செய்தது அவன் தான் என்று எனக்கு எப்படி நிச்சயமாக தெரியும்??

கிளம்ப வேண்டியது தான். செருப்பைத் தேடி போடும் போது. ‘ஹலோ .. ஹவ் ஆர் யு ?’

பரிச்சயமான குரல். 7 வருடங்களாக மறைந்து இருந்து என்னை வருத்திய குரல்.
‘அப்பா . என்ன கூட்டம்பா இந்த ஊரு. வந்து சேரதுக்குள்ள நொந்துட்டேன். இங்க பக்கத்துல சரவண பவன் இருக்கு .. இப் யு டோன்ட் மைண்ட் .அங்க போய் உக்காந்து பேசுவோமா??’

கல்லூரியில் என் கூட இருக்கும் போது நாலு வருடத்தில் எண்ணி எண்ணி என்னோடு மொத்தம் 50 வார்த்தைகள் பேசியவன் இன்று மட மடவென்று பேசுவதை பார்த்து எனக்கு வியப்பு.

‘போகலாம்’ ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு அவனோடு நடக்கத் தொடங்கினேன்.

கண்கள் தானாக கூட்டத்தில் மேய்ந்தது. யாரவது தெரிஞ்சவங்க பார்கிறார்களா ??

என் நோட்டத்தை கவனித்தாலும் கவனிக்காதவன் போல உள்ளே சென்று ஒரு ஓரத்தில் ரெண்டு பேர் இருக்க கூடிய இடமாகத் தேடி உட்கார்ந்தான்.

எதிர் எதிரே உட்கார்ந்து இருந்தாலும் மெனு கார்டை எடுத்து முகத்தை மறைத்து கொண்டேன். என்ன சொல்ல போகிறான்? என்னை கவலைத் தின்றது.

‘ யூ ஆர் வெரி ப்ரெட்டி ‘ திக்கென்றது எனக்கு .என் கழுத்து பகுதியில் தொடங்கிய உஷ்ணம் காது மடல்களை தழுவி முகத்தில் படருவதை என்னால் உணர முடிந்தது.

‘ஒ மை காட் !! யூ ஆர் ப்ளஷிங் !!’ இது வரைக்கும் யாருமே இப்படி உன்கிட்ட சொன்னது இல்லையா??’

எனக்கு ரொம்பக் கூச்சமாக இருந்தது . ‘ ஹ்ம் அப்படியெல்லாம் இல்லை சொல்லிருக்காங்க பட் ஐ டிண்ட் எக்ஸ் பேக்ட் திஸ் நொவ்.என்ன விசயம் பேசணும்னு வர சொன்னீங்க??’

‘நீ வருவேன்னு நான் நினைக்கல. 7 வருஷம் ஆச்சு உன்னை பார்த்து. 11 வருஷம் முன்னாடி உன்னை முதல் முதல சந்திச்ச நாள் இன்னிக்கி.இந்த 11 வருஷத்ல உன்னை நினைக்காம நான் ஒரு நாள் கூட இருந்தது கிடையாது. நீ என்கிட்டே அன்னிக்கி பிடிங்கிகிட்டு போனது உன்னோட கெர்சீப் மட்டும் இல்ல என் மனசும் தான்.’

திகைத்து போய் இருந்தேன் . என்ன பேசுவது என்று தெரியவில்லை. இவ்வளவு வருஷம் இல்லாமல் இப்போது என்ன வந்தது இதை என்னிடம் சொல்ல.

மனசுக்குள் ஒரு நிம்மதி. நான் மட்டும் ஆசைப்படவில்லை அவனும் என்னை தான் நினைதிருக்கிறான்.

‘இதென்ன இப்போ திடீர்னு ?’ என் கேள்வி முடிக்க விடவில்லை அவன்.

‘எஸ்.நீ இது கேப்பேன்னு எனக்கு தெரியும். எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிருக்கு. எனக்கு உன் மேல ரொம்ப காதல் இருந்தது . அதோட ஒரு மரியாதையும். உன்கிட்ட எப்படியாவது சொல்லணும்னு நினைப்பேன். அனால் ஏதோ ஒரு தயக்கம். இன்ப்பாக்ட் என் பிரெண்ட்ஸ் யார் கிட்டேயும் உன்னை பத்தி நான் டிஸ்கஸ் கூட பண்ணினது கிடையாது.உன்னை யாரும் தப்பா பேசிடக் கூடாதுன்னு ஒரு நினைப்பும் எனக்கு இருந்தது.

என் மனசுல இருந்த காதல் உன் மனசுலேயும் கொஞ்சமாவது இருந்துதான்னு எனக்கு எப்போவும் ஒரு கேள்வி. இந்த சந்தேகத்தோட என்னால இன்னொரு வாழ்க்கை வாழ முடியாதுன்னு மட்டும் புரிஞ்சுது.’

‘ இதை நான் ஏன் உன்கிட்ட அப்போவே கேக்கலைன்னு உனக்கு தோணும். எனக்கு உன்னை பற்றியும் உன் குடும்பத்தை பற்றியும் நல்லா தெரியும்.உங்கப்பா ரொம்ப ஆச்சாரமானவர் . எப்படியும் உங்க ஜாதி இல்லாம வேற ஜாதில கல்யாணம் பண்ணி குடுக்க மாட்டார்.நீ ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கிற ஆள் கிடையாது. சும்மா பொழுபோக்கா காதல் பண்ணி உன் பேரயும் கெடுத்து வாழ்க்கையும் கெடுக்க எனக்கு விருப்பம் இல்லை.இவ்ளோ நாள் என் மனசில் உள்ளதை யார் கிட்டேயும் சொன்னது இல்லை.இனிமே நான் கொஞ்சமாவது நிம்மதியா இருக்கணும்னா உன்கிட்ட மட்டுமாவது இதை நான் சொல்லியே ஆகணும். யாராவது ஒருத்தருக்காவது என் காதல் தெரியணும்ல .’

என் கண்களில் இருந்து சுரந்த கண்ணீர் அவனுக்கு என் பதிலை உணர்த்தி இருக்க வேண்டும்.

‘அசோக் .யூ ஆர் எ ஜென்டில்மேன் ‘. வேறு வார்த்தை வரவில்லை எனக்கு.

ஹோட்டல் வாசலை நோக்கி என் பார்வை போனது.

ஹோட்டல் வாசல் வழியே கணேஷ் வந்து கொண்டிருந்தான்.

‘என்னம்மா பேசியாச்சா?’ பக்கத்தில் வந்த கணேஷ் குரல் கொடுத்தான்.

‘பேசிகிட்டே இருக்கோம் நீங்க வந்துடீங்க. அசோக்.!மீட் கணேஷ். மை ஹஸ்பண்ட். ‘

” வெரி க்ளாட் டு மீட் யு அசோக்.’ என்று கை குடுத்த கணேஷை ஆச்சர்யமாக பார்த்தான் அசோக்.

‘இங்க வரதுக்கு முன்னாலேயே கணேஷுக்கு போன் பண்ணி இங்கேர்ந்து என்னை பிக் பண்ண சொல்லி ட்டேன். அவருக்கு என்னை பத்தி எல்லா விஷயமும் தெரியும் . நான் காலேஜ்ல படிக்கும் போது உன் மேல ஆசைபட்டேனு தெரியும்.. நீயும் என் மேல பிரியபட்டேன்னு எனக்கே இன்னிக்கி தான் தெரியும் . சோ திஸ் இஸ் நியூஸ் டு ஹிம்.’

‘ஹவ் எ நைஸ் டே அசோக். சுவாதி நான் வெளில பார்கிங் லாட்ல வெயிட் பண்றேன் நீ வந்திடு.’ சொல்லி விட்டு செல்லும் கணேஷை பார்த்து ‘யூ ஆர் வெரி லக்கி ..ஐ மீன் போத் ஆப் யூ ‘என்றான் அசோக்.

‘யூ ஹவ் தி அன்செர் டு தி கொஸ்டியன் யு வாண்டட் டு ஆஸ்க் . இனிமே உனக்கு ஒரு நல்ல லைப் அமைய என்னோட விஷஸ். உன்னை கல்யணம் பண்ணிக்க போறவ ரொம்ப குடுத்து வச்சவ. கண்டிப்பா உன் கல்யாணத்துக்கு என்னை இன்வைட் பண்ணு. மே பி அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா நாம திரும்பி மீட் பண்ணுவோம். அப்போவது வாயை திறந்து எதாவது சொல்லு .என் வாழ்க்கையை நீ முடிவு பண்ணாதே.’

அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை.

‘சாரி ..சுவாதி.உன்னை இன்னிக்கு ரொம்ப நேரம் வெயிட் பண்ண வெச்சுட்டேன்.
I am a habitual latecomer…always…’

படித்த கதையில் பிடித்தகதைகள்
நன்றி ;சிறுகதை தளம்

எழுதியவர் : கதையாசிரியர்: விசாலம் முர (8-Aug-14, 11:29 am)
பார்வை : 201

மேலே