வாழ்க்கை
![](https://eluthu.com/images/loading.gif)
கதறிக் கிடந்தால் கிடைக்கும் கவனம்
கனிந்த முகமோ காதல் புவனம்
சிதறிக் கிடக்கும் சிரிப்பின் பவனம்
குழந்தை வாழ்க்கை ! ரசிப்பான் எவனும் !
படிக்கச் சொன்னால் மிகவும் கவலை
முகத்தில் விழுமே கண்ணீர்த் திவிலை
துடித்துத் தாவும் மனதோ தவளை
மாணவன் வாழ்க்கைப் ! பன்னீர் குவளை !
நிலவைக் கண்டால் காதல் வருமே
நித்திரை தொலைத்து கனவுகள் தருமே
உலவிட நெஞ்சில் இன்பம் உறுமே
இளைஞன் வாழ்க்கை ! சிலிர்ப்பைப் பெறுமே !
ஓட வேண்டுமே பணத்தை நோக்கி
ஒற்றை நாளும் சோர்வை நீக்கி
தேட வேண்டுமே வாழ்வின் பாக்கி
இயந்திர வாழ்க்கை ! கண்ணீர் தேக்கி !
ஓய்ந்து ஒடுங்கிய வாழ்க்கை முதுமை
ஒவ்வொரு நாளும் தனித்தனிப் புதுமை
மாய்ந்து இறைவனைச் சேருதல் பொதுமை
மானுடம் என்பதே உயிருடைப் பதுமை !
-விவேக்பாரதி