நற்குணமுடையோர் செய்யலாகாதன - ஆசாரக் கோவை 81
புழைக்கடைப்பு காரரசன் கோட்டி உரிமை
இவற்றுக்கண் செவ்வியார் நோக்காரே அவ்வத்
தொழிற்குரியர் அல்லா தவர். 81 ஆசாரக் கோவை
பொருளுரை:
அந்த அந்தக் குறிப்பிட்ட தொழிலுக்கு உரிமையுடையவர்
அல்லாதவராகிய நற்குணமுடையோர் ஒருவர் வீட்டின்
புழைக்கடை வழியாக அவர் வீட்டில் நுழைய மாட்டார்.
அரசன் கூத்து முதலியவற்றால் இன்புற்றுக் கூடியிருக்கும்
அவையிலும், மனைவியரோடு இருக்குமிடத்திலும் போய்ப்
பார்க்க மாட்டார்..
கருத்துரை:
வேறொருவர் வீட்டில் புழைக்கடை வாயிலாற் போதலும்,
அரசன் களியாட்டிடத்தும் அந்தப்புரத்திடத்தும் செல்லுதலும்
ஆன்றோர் செய்யலாகாது.
புழைக்கடை - துவாரத்தின் கடை, கோட்டி - கூட்டம்.
உரிமை - மனைவி
வீடுகளை இடையீடாக ஏற இடம் விட்டுக் கட்டுவது தமிழ்நாட்டு வழக்கம். இவ்விடையிடம் வீட்டுக்குப் புழைபோன்றது. அதன் கடை, புழைக்கடை;
இது ஆகுபெயராய் வீட்டின் பின்புறத்துள்ள நிலத்தைக் குறிப்பதாயிற்று.

