இரவு

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை.

ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சூன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய்.

எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்லா நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது.

இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்து சொந்தங்களாய்... கண் சிமிட்டி அழைக்கும். பெரும்பாலும் சூரியன் தொலைத்த பூமி...உஷ்ணத்தை விழுங்கி விட்டு..சிலிர்ப்பாய் குளிர் சிரிப்பு சிரிக்கும். ஏதேதோ மெல்லிய சப்தங்களையும் துல்லியமாய் கொண்டு வந்து காது சேர்க்கும்.

ஆமாம் இரவு தன்னிடம் தேக்கி வைத்திருப்பது....பிரபஞ்சத்தின் மூலத்தை. உறக்கம் கலைத்து அல்லது கலைந்து வெறுமையாய் இருக்கும் ஒரு கணம்...அந்த கணம் எப்போது நிகழும் என்று என்னால் வரையறுத்துக் கொடுக்க இயலாது...ஆனால் எதிர்பார்ப்புகள் தொலைத்த ஒரு அற்புத கணத்தில் ஆச்சர்யமாய் தனது இருப்பினை நம்மீது போர்த்தி கண் சிமிட்டி....நலமா என்று நலம் விசாரிக்கும் அற்புத இரவு.

பெரும்பாலும் இரவுகள் இங்கே அலைக்கழிக்கப்படுகின்றன...அல்லது அயற்சியில் உறங்கி விழுங்கப்படுகின்றன. காமத்துக்கும், கனவுக்குமே பயன் பட்டு பயன் பட்டு மழுங்கிப் போய் கிடக்கிறது இரவு எல்லோரின் மனதிலும். வாரத்தில் ஒரு நாள்... வேண்டாம்....மாதத்தில் ஒரு நாள் தனியாய் எதிர் கொள்ளுங்கள் இரவை....காதலோடு...

துணை வேண்டாம்; இசை வேண்டாம்; வாசிக்க புத்தகமும் வேண்டாம்....சுற்றியுள்ள சூழலும் நீங்களும்.அவ்வளவே.....! அன்றைய தினத்தின் அயற்சிகள் எல்லாம் அழுக்குகளாய் நகர்ந்து போக உலகத்தின் மிகைகள் உறங்கி கொண்டிருக்க நீங்கள் விழித்திருங்கள்.....இரவை நீங்கள் நடத்துங்கள்...அப்படி நடத்த இரவோடு இரவாக கலந்து போங்கள்....

சப்தங்கள் கழிந்து
ஒரு மோன நிலையில்
எப்போதும் ஆழ்த்தும் இரவு....
மனச்சிறகுகள் விரிய விரிய
தடைகளின்றி நீள்கிறது
என் வானம்..!

ஆமாம்.. இரவு எப்போதும் கவனங்களைச் சிதறவிடுவதே இல்லை...முன்பே சொன்னது போல தாயின் கருவறைக்குள் அசைவுளற்று விழித்திருக்கும் குழந்தையாய்..காத்திருக்கும் பொழுது சட்டென்று மூளைக்குள் இறைத்துப் போடுகிறது இரவு..ஓராயிரம் கவிதைகளை...! யாருமே இல்லாமல் வெறுமனே காதல் உணர்வினை புட்டியில் வைத்து ஊட்டும் பால் போல புகட்டுகிறது அந்த ஆழ்ந்த கருமை....

உன் உதடுகள்
உச்சரிக்கின்றனவா?
இல்லை என்னை...
காதல் செய் என்று
எச்சரிக்கின்றனவா?

பளீச்சென்று வந்து விழுந்த வார்த்தைகளுக்குப் பின்னால் எந்த உருவமும் இல்லை ஆனால் ஒரு மேலோங்கிய உணர்வை எனக்குள் ஊற்றியதின் பின்னணியில் இருந்தது...ஆழமான இரவு..... ! உருவமற்ற இறை என்ற ஆன்மீக உச்சத்தின் சாயலன்றி இது வேறு என்ன?

பல நேரங்களில்...
பார்வைகளிலேயே
சொல்லி விடுகிறாள்..
தீர்வுகளை...!
வாசிக்க முடியாமல்
அவள் விழிகளுக்குள்ளேயே
மீண்டும் மீண்டும்
வழுக்கி விழுகிறேன்...!

நிசப்தத்திலிருந்து நீண்டு வந்த வார்த்தைகளில் பொருளில்லை ஆனால் உணர்விலிருந்தது...! அந்தக்கணத்தில் லயித்துக் கிடக்க எண்ணங்கள் அலைமோதும் மனிதர்கள் இல்லை.. என் எண்ணங்கள் எல்லாம்...அழிந்து ஒழிந்தும் போயிருந்தது..!

ஒரு ஓவியம்..தன்னைத்தானே
சரி செய்து கொள்ளுமா...
ஆமாம் நீ கூந்தல்
ஒதுக்கினாயே... சற்று முன்னால்...

எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்த போது சட்டென்று வந்து விழுந்து என்னை மிரட்டிவிட்டு ஓரமாய் ஒளிந்து நின்று என்னைப்பார்த்து புன்னகை செய்த வரிகளை அனுபவிக்க ஆனந்த இரவு அட்டகாசமாய் உதவியது.

உன் வார்த்தைள் எல்லாம்
என் கவனத்தில்
சேர்வதற்கு பதிலாக
என் நினைவுகளை
அல்லவா அழிக்கிறது!

வார்த்தைகளாய் ஏதோ ஒன்று சொல்கிறாள் காதலி...அல்ல அல்ல வார்த்தையை மாற்றுங்கள் இங்கே.. ஏதோ ஒன்று சொன்னது காதல் அந்த வார்த்தைகள் நினைவுக்குள் போய் சேர்ந்து ஏதோ புரிய வைப்பதற்கு பதிலாக.. ஏற்கனவே இருந்த நினைவுப்பகுதிகளை...எல்லாம் அடித்து துவம்சம் செய்து..ஒன்றுமில்லாமல் செய்கிறது...........

நான் மெல்ல சிரித்து..என்ன என்பதுபோல இரவினைப் பார்க்க..அது ஏதேதோ சொல்லும் என்று நினைத்த எனக்கு மீண்டும் அடர்த்தியான மெளனம் கிடைத்தது....! ஆமாம் மனிதர்கள் உறக்கத்தில் நல்ல கனவுகளுக்காக போராடிக் கொண்டிருப்பார்கள். எனக்கு விழிப்பு நிலையில் கனவுகளை எல்லாம் அற்புதமாய் கொட்டியிறைத்துக் கொண்டிருந்தது இரவு...

உறக்கமற்ற
கடந்து போன இரவின்
நீட்சியில் நகர்ந்தது
இன்றைய பகல் முழுதும்...

தொடர்ந்த திருப்தியான..
நிமிடங்கள் கொடுத்த
திருப்தியில் மறந்தே
போனது உலகமும்; உறக்கமும்;

மிச்சமிருந்த
வார்த்தைகள் எல்லாம்
பிடிவாதம் பிடித்துக்
கொண்டிருக்கின்றன...
மீண்டும் இரவிடம் போய்
எங்களையும் கொட்டிவிடு...என்று...!

வாழ்வின் பக்கங்களுக்கு ஒளி எவ்வளவு முக்கியமோ அத்தனை சமமாக இருளும் முக்கியம்...இருளை விலக்காதீர்கள்...இரவை நொறுக்காதீர்கள்...அருமையான இரவுகளை அற்புதமாய் பருகுங்கள். பிரபஞ்சத்தின் நியதிகள் எல்லாம் அருமையானவை...அதை சிக்கலாக்கி கொள்வது மனிதன்...!

அற்புதமான உங்களின் ஆனந்த இரவு அனுபவத்திற்கு எனது வாழ்த்துக்கள்....!


-தேவா சுப்பையா

எழுதியவர் : Dheva .S (10-Aug-14, 10:31 pm)
சேர்த்தது : Dheva.S
Tanglish : iravu
பார்வை : 1782

மேலே