மகளிரை இழிவு செய்யும் கொடுமை

(பெண்களைத் திரைப்படத்தில் எப்படி இழிவு செய்கிறார்கள் என்பதைக் காட்டவே இந்தப் படத்தை கூகுலில் தேடி எடுத்துப் போட்டேன். தவறாக நினைக்கவேண்டாம்)
மகளிரை இழிவு செய்யும் கொடுமை
**********************************************************************************இந்தக் கட்டுரையின் மையக்கருத்து இன்றும் பொருந்தும் என்பதால் எழுத்தில் பதிவு செய்யப்படுகிறது.
நன்றி: தினமணி 28-07-1998 (பக்கம் 6) எழுதியவர்: இரா.இரத்தினகிரி
**********************************************************************************
தமிழ் நாட்டின் அண்மைய அவலங்களில் ஒன்று – சென்னையில் ஈவ் டீசிங் (கேலி) செய்யப்பட்டபோது காயமடைந்த கல்லூரி மாணவி ‘சரிகா ஷா’ மருத்துவமனையில் இறந்தார் என்பது. சக மாணவியர் சேர்ந்து குரல் கொடுத்திருந்தாலே இச்சாவு தவிர்க்கப்பட்டிருக்கும்! ஒவ்வொருவரும் அவரவரைக் காப்பற்றிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணமே சமுதாயத்தில் குற்றவாளிகளை வளர்த்து வருகிறது.
கடந்த நிகழ்வுகளில் ஒன்றாக ‘நாவரசு’வைப் பலிகொண்டபோது, அதற்கொரு சட்டம் இயற்றப்பட்டது. ஒவ்வொரு கொடுமையும் நடந்த பின்னர் அதற்கொரு சட்டம் கொண்டு வந்து அச்சடித்து அலமாரியில் வைத்துக் கொள்ளப் பயன்படுகிறதே தவிர, ஏன் இந்த அவலம்? எப்படி இவை நேரா வண்ணம் காப்பது? நோய் நாடி நோய் முதல்நாடி’ என்பது போல என்ன நடவடிக்கையை யார் தொடங்குவது?
’மன்கையராகப் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா!’ என்று பாடத்தில் எழுதிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம். மாதர் தம்மை இழிவு செய்யும் கொடுமையைக் கொளுத்துவோம் என்ற உணர்வு எத்தனை பேருடைய எண்ணத்தில் நிலைக்கிறது? சொல்லிக் கொடுப்பது ஒரு சடங்கு! அதைக் கற்றுக் கொல்வதும் ஒரு சடங்கு போல் ஆகிவிட்டது.
பெண்ணென்றாலே அவரும் ஆணைப் போன்ற மனித ஜீவன். எந்தவித வேறுபாடுமின்றி எல்லா உரிமைகளும் கொடுக்கப்படல் வேண்டுமென்று எத்தனையோ சீர்திருத்தங்கள் தோன்றின. சிசுக்கொலை, பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், பலதார மணங்கள் முதலான மூடவழக்கங்கள் எல்லாம் ஒழித்து பெண்களுக்குக் கல்வி தந்து, வேலை தந்து, சமவாய்ப்பு உருவாக்கிக் கொண்டிருக்கும் காலம். இப்போது கூட காவல் துறையில் எத்தனை பெண் அதிகாரிகள்? ஆட்சித் தலைவர்கள்! இராணுவ அதிகாரிகள்! என எத்தனை பேர் பணியாற்றி வருகிறார்கள்?
பெண் நீதிபதி ஒருவர் ஆளுநராக இருக்கும் இடத்திலேயே ஒரு மாணவியை விரட்டி விரட்டியடித்து வெட்டிக் கொல்வதும், அப்பெண்ணைப் பெற்றோர் கொடுந்துயருக்கு ஆட்படுத்துவதும் தமிழ் நாட்டுக்கு அவலம் அல்லவா? எப்படி இதைத் தடுப்பது? யாரைத் திருத்துவது?
இப்போது மகளிர் கல்லூரிகள் வாசல்களிலே போலீசை நிறுத்தியிருக்கிறார்கள். பேருந்துகளில் பெண்களைக் கேலி செய்பவர்களை மாற்று உடையில் வந்து போலீசார் கைது செய்கிறார்கள்; தண்டிக்கிறார்கள். இவை ஒரு நாளோடு சரி அல்லது ஒரு வாரத்தோடு சரி. பிறகு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பெண்காவலர் என்றா வைக்க முடியும்?
மாணவர்களிடையே சமூகப் பொறுப்புணர்ச்சியை உருவாக்கிடல் வேண்டும். சமுதாயம் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? தான் வாழ்ந்தால் போதும்! என்று எண்ணுகிற மனப்பாங்கு ஒழிந்தாக வேண்டும். சமுதாயத்தின் இழிவைத் துடைப்பதற்கு ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. குறிப்பாக இளைஞர்களின் பங்கு மிக அதிகம். அதைக் கல்விக் கூடங்களில் கற்றுக் கொடுப்பதில்லை. பல அரசியல் இயக்கங்கள் [இவற்றை] எடுத்துச் சொவதில்லை. தொழிற் சங்கங்கள், சமுதாய இயக்கங்கள் முயன்றும் சமூகப் பொறுப்புணர்ச்சி என்பது இன்னும் வேர்விடவில்லை.
பெண்ணைக் கேலி செய்யும் பையனும் வீட்டில் ஒரு பெண்ணுக்குத் தான் மகனாகப் பிறந்திருக்கிறான். ஒரு தமக்கைக்குத் தம்பியாக வளர்ந்திருக்கிறான். ஒரு தங்கைக்கு அண்ணனாக ஆளாகியிருக்கிறான். வீட்டில் அவர்களோடு, அந்தப் பெண்களோடு இருக்கையில் கேலி பேசவும், இடிக்கவும், பிடிக்கவும், அடிக்கவும் அதிகம் வாய்ப்புகள் உள்ள போது அங்கே அதைச் செய்வதில்லை. மற்ற பெண்களிடம் இப்படி நடந்து மரணத்தை வரவழைக்கிறார்களே ஏன்?
இன்று கல்விக் கூடங்கள் எல்லாம் மாணவர்களைப் பட்டதாரிகள் ஆக்கிடப் பாடுபடுகின்றன. அதிகாரிகளாக்க அலுவலாற்றுகின்றன. மருத்துவர்களாக்கவும் பொறியாளர்களாக்கவும் உழைக்கின்றன. வழக்கறிஞர்களாக்கவும் பேராசிரியர்களாக்கவும் பங்களிக்கின்றன. ஆனால் மாணவர்களை முதலில் மனிதர்களாக்கிடப் பாடுபடல் வேண்டும். மனிதாபிமான உணர்வுகள் நாளுக்கு நாள் சமூகத்தில் மங்கி மறைந்து கொண்டு வருகின்றன.
கல்வி நிலையங்கள் மாணவர்களை மனிதர்களாக்கியிருந்தால் மனித சமுதயத்தின் சரி பகுதியான மகளிர் நலம் மரணத்துக்குப் போராடியிருக்குமா? மகளிர் மாண்பு இவ்வளவு புறக்கணிக்கப் பட்டிருப்பதையும் கேவலப்படுத்தப் பட்டிருப்பதையும் காண முடியாது.
அன்றாடம் நம் நாட்டில் தயாரிக்கப்பட்டுத் திரையிடப்படும் திரைப்படங்கள் எல்லாம் மக்களுக்கு என்ன சொல்கின்றன? பெண்மையின் தியாகத்தை, மேன்மையைச் சொல்வதில்லை. பெண்களின் உழைப்பையும் பங்களிப்பையும் மறைப்பதோடு, பெண்களை அலங்காரப் பதுமைகளாகச் சித்திரித்து, சிங்காரித்து ஆண்கள் மனம் மகிழ ஆடவும் பாடவும் வைக்கின்றன. காமச் சுவை சொட்டப் பாடல்கள் எழுதி அங்கங்கள் தெரியக் கூட்டங் கூட்டமாக விலங்கினங்களைப் போல ஓடச் செய்வதும், ஆடச் செய்வதும் அவர்களுக்கு வருமானம் தரத்தக்கதாகவே அமைந்துவிட்டது. உண்மையான மனிதப் பண்பாடு அழிவதைப் பற்றிய கவலையே இல்லை.
திரைப்படங்களில் வரும் எந்தக் கதையாக இருந்தாலும் அதன் காதல் காட்சிகளில் ஆண் பெண்ணைத் துரத்த வேண்டும் அல்லது பெண் ஆணைத் துரத்த வேண்டும். அவர்களுக்கு சமுதாயக் கவலையோ, அக்கறையோ, சிந்தனையோ எள்ளளவும் இருக்கக் கூடாது என்ற எச்சரிக்கையோடுதான் படங்களைத் தயாரிக்கிறார்கள்.
தமிழ் நாட்டில் வெளிவரும் 62-க்கும் மேற்பட்ட கிழமை இதழ்கள், இருவார இதழ்கள், திங்கள் இதழ்கள், அவற்றில் வெளிவரும் பெரும்பாலான் கதைகள், இதழ்களில் எடுப்பாக வடிவமைக்கப்படும் நடுப்பக்கப் படங்கள் எல்லாம் என்ன சொல்கின்றன? ஒவ்வொன்றிலும் பெண்மையை இழிவுபடுத்தும் செய்திகள்தானே அதிகம்!
ஜப்பான் நாட்டில் வேளாண்மைப் பொருள்கள் உற்பத்திக்கும் தொழில் அபிவிருத்திக்கும் மக்கள் எந்த இடத்திலும் காலந்தவறாமைக்கும் இல்லத் தூய்மைக்கும் வெளித்தூய்மைக்கும் அந்த நாட்டுத் திரைப்படங்களும் தொலைக்காட்சிப் படங்களுந்தான் காரணம் என்பார்கள். அதற்கேற்ற வண்ணமே நிகழ்ச்சிகள் அமைக்கப்படுகின்றன.
ஆனால் நம் நாட்டில் பெரும்பாலான படங்கள் மனிதர்களை விலங்குகளாக மாற்றவே, அதாவது புலன்நுகர்ச்சி கொண்டு மற்றவர்களைத் துன்புறுத்தவே தூண்டுகின்றன.
தமிழ்நாட்டுத் திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் வரும் காட்சிகளில் கல்லூரி மாணவ மாணவியரைப் பற்றிக் காட்டுகிறபோது அவர்களைப் பொறுப்புள்ளவர்களாகவே காட்டுவதில்லை. வெளிப்படையாகச் சொன்னால் திரைப்படங்களில் கல்லூரி மாணவர்கள் காலிகளைப் போல சித்திரித்துக் காட்டுகிறார்கள். இதை ஒரு கேவலமாக எந்த மாணவ மாணவியரும் கருதுவதில்லை.
உயிர் இனங்களின் உருவாக்கத்திற்கும் உற்பத்திக்கும் ஆண், பெண் சேர்க்கை என்பது இயற்கை. பசியெடுத்ததும் தீனி தின்பதும் அசை போடுவதும் உறங்குவதும் தினவு தோன்றும் போதும் தீர்த்துக் கொள்ளுவதும் விலங்கினங்கள் வாழ்வு. விலங்கு நிலையிலிருந்து மனிதன் இயற்கையான உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வாழ்வதுதானே மனித வாழ்வு. மனிதன் விலங்கினத்திலிருந்து வேறுபட்டவன் தானே.
மனிதன், ஆடை அணிகலன்களில், வாகன வசதிகளில், குடியிருப்புகளில், அறிவியல் வளர்ச்சியில் முன்னேற்றிக் கொண்டு மற்ற மனிதர்களுக்குத் தொல்லை கொடுக்காமல், அவர்களுக்கு உதவிகரமாக வாழ்வது தான் மனித வாழ்வு.
திரைப்படத் தணிக்கைக்குழு என்ற ஒன்று இருப்பதாகவும் அக்குழுவினர் ஒவ்வொரு திரைப்படத்தையும் பார்த்து எல்லா வசனங்களையும் வார்த்தைகளையும் கேட்டுக் கேட்டுச் சரிபார்த்துத் தான் வெளிவருகின்றன என்று சொல்லப்படுகின்றன. ஆனால் அண்மையில் வெளிவந்த பெரும்பாலான படங்களில் பெண்கள் போகப் பொருளாகவே சித்திரிக்கப்படுகின்றனர். இதை ஒரு சமூக அவமானமாக யாரும் கருதுவது இல்லை. அரசாங்கமும் வரி வந்தால் சரி என்பதோடு நின்று விடுகிறது.
“எதிர்கால இந்தியாவில் நகைகள் நிறைய அணிந்த பெண், எவர் பாதுகாப்புமின்றி நள்ளிரவு நேரத்தில்கூட தன்னந்தனியாக நடமாடவேண்டும். அது தான் நாகரிக சமுதாயத்துக்கு, நாட்டின் மேன்மைக்கு அடையாளம்” என்று அண்ணல் காந்தி சொன்னார்.
தமது திரைப்படத்தில் இக்கருத்தை ஒரு காட்சியாகவே அமைத்து வெளியிட்டு அப்படிப்பட்ட சமுதாயம் அமைத்திட எண்ணினார் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்.
இவையாவும் ‘மனப்பால்’ குடிப்பதாகவே போய்விட்டதே தவிர, மக்கள் வாழ்வில் இடம்பெறவில்லை. ஒரு நாட்டின் அவலங்களை ஒழித்து மேன்மையை உருவாக்கிட வேண்டிய இளைஞர்கள், இல்லாமையைப் போக்க, கல்லாமையை ஒழிக்க, சமூக அநீதிகளை அழித்து நீதியை நிலைபெறச் செய்யப் பங்களிக்க வேண்டிய மாணவர்கள், மகளிரைக் கேலி பேசி மரணத்தில் தள்ளும் கொடுமையைத் தடுப்பது எப்படி?
மனிதர்களை விலங்குகளாக்கும், புலன் உணர்வுகளை தூண்டும் திரைப்படங்களால், சின்னத் திரைகளால், பத்திரிக்கைகளால் இளைஞர்களின் வாழ்வு, சிந்தனை, செயல்கள் சீரழிக்கப்படுகின்றன. இந்நிலையை மாற்றிட, இதே மக்கள் தொடர்புச் சாதனங்கள் மூலம் மனித மாண்பை வளர்த்திடல் வேண்டும்; மகளிர் மாண்பைக் காத்திடல் வேண்டும். இயலாவிடில் மாணவி சரிகாவின் மரணம் போல் எந்த வீட்டிலும் நேரலாம். (தினமணி: கட்டுரையாளர் தஞ்சை பகுத்தறிவாளர் கழகத் தலைவர்)