சித்திரத் தையல்
சித்திரத் தையல்
----------------------------------
வயதாக வயதாகத்தான் ஞாபகங்கள் அதிகமாகின்றன.
இடைவயதில் யாரையோ காதலித்திருந்தேன்
அந்த நிமிடங்கள் அழகாகத்தான் இருந்தன. என்னைவிட இவ்வுலகத்தில்
அழகானவன் யாருமில்லை என்ற
உணர்வை அந்தக் காதல் தந்தது.
அதுவரை சரித்திர ஏடுகளிலேயே
முயங்கிக் கிடந்த எனக்கு அதெல்லாமே
மனப்பாடமாகி இருந்தன . அந்தக் காதல்
நான் வாசித்த ஏடுகளை மறக்கடிக்கச் செய்தது. அவை பரண்களின் மேல் தூசிப் படர்ந்தன .
அதன் பிரிதலின் போது அன்று அதுதான் உலகத்திலேயே
யாருக்குமில்லாத பெருஞ் சோகமென
திரண்டேன். சோமாலியா பட்டினிக் கொடுமையோ, ஆப்பிரிக்காவின் இனப்போராட்டமோ, ஈழத்தின் அழுகுரலோ ஏன் எங்கள் ஊரில் அருகிருக்கும் கெத்தையின்
நில நடுக்கமோக் கூட அத்தனை முக்கியமாகத் தெரியவில்லை
அடுத்தடுத்த இடைவேளைகளில்
நூல்(புத்தகம்) வடிவில் என் சரித்திர நண்பர்கள் அதிகமானார்கள்.
அடுத்தடுத்தக் காதல்களில்,
அவர்களும் மறக்கடிக்கப் பட்டார்கள்.
அப்பாவிடம்
என் எல்லாத் தேவைகளையும் மூர்க்கமாகத்தான் கேட்டிருந்தேன். ஒருக்கட்டத்தில் என் தேவைதான் என்ன என்பதை கேட்கத் தெரியாமல் அவர் முன்னால் சென்று மண்டியிட்டு மூர்க்கமாய் அழுதிருந்தேன்.
அந்த அழுகை எல்லா பாரங்களையும் விட என்னை அடுத்தவர்கள் முன் பரிதாபமாய்க் காண்பித்தது
அதைவிட பாரமாய்த் தெரிந்துவிட
ஒளிய இடம் பார்க்கிறேன் .
எல்லாத்திற்கும் ஓடி ஒளிய இடம் தேட முடியாது. நாளை என் ஓட்டத்தின் பின்னாலோ இல்லை எனக்கு முன்னால் ஓடியவர்களின் பின்னாலோ
நானோ என்னைத் தொடரும் யாரோ
அதை பழக்கப் படுத்தும் ஆற்றாமை
வேண்டாம்.
எல்லாம் எனக்குத்தான் நேருகிறது
என்பதை எப்படி ஒழிக்கமுடியும்
சிலரது வாழ்க்கை ஆரம்பப் பொழுதில்
உண்மையாக கடினத்தில் தொடங்கினாலும், அது பழக்கப் பட்டுவிட்டால் அவர்கள் அதைவிட்டு
மருவி வரமாட்டார்கள் அதுவே
காலப்போக்கில் சோம்பலாகவும்
அந்த சோம்பலை மறைக்க அவர்களால்
சொல்லப்படும் காரணங்களாகவும்
அவர்களுடனேயேத் தங்கிவிடும்.
அப்பாவைப் பார் அம்மாவின் முகத்தைப் பார் அவங்களுக்காகவேனும் மாறக்கூடாதா என்னும் பட்சாதாபத்திலிருந்து வெளியேறு.
நடிப்பதை விடு, யாருக்கும் உன்னைக் காண்பிக்க வாழாதே, உனக்காக வாழு.
வாழத் தொடங்கினேன். வாழ்வின் முதல் நிஜமகிழ்ச்சித் தருவாய் அதுதான்.
உடைகளில், மனங்களில், வார்த்தைகளில், பார்வையில்
ஜாலம் களைந்தேன்.
கண்ணாடி முன் நின்று
என்னை நான் சரிபார்க்கிறேன்.
பள்ளி கல்லூரி ஆசிரியர்களின்
உதாரணத்துடன் கூடிய
ஏட்டுப்பாடங்கள் எத்தனை வாழ்வியல் உண்மை.
அன்றுபோல் எப்போதும்
என் கண்ணிமைகள் இமைக்காமல்
இருந்ததே இல்லை.
இதெல்லாம் குடித்து உறக்கமிழந்த
அவற்றின் கரையோரம்
கருவளைக் கண்டதாலோ என்னவோ ? . இப்போது நான் சராசரி.
பிராயத்தில் கல்யாணமும் முடிந்தது.
சொந்தங்கள் சூழ மகிழ்வாக கழிந்திருந்தன சில காலங்கள்.
ஊராரும் உற்றாரும் நல்லது கெட்டதுகளில் கலந்திருந்தார்கள் .
கடந்துசென்றதை எல்லாம் மறந்துவிட்டேன்.
பிள்ளைகள் பெரியவர்களானார்கள் .
எனக்கு வயதாகிக் கொண்டிருப்பதையே
அவள் சிரிப்பால் மறைத்திருந்தாள்.
சாவிக்கொத்து அவளிடமும்
சம்பளப் படி என்னிடமும் தான்
இருந்தது. எல்லோரும் எங்களைச் சுற்றியேதான் இருந்தார்கள்.
இதற்கிடையில் அப்பா தவரிவிட்டார்.
ஆங்காங்கே நட்புகள் சொந்தங்கள் என எல்லோரும் ஒவ்வொருவராக இறந்துகொண்டிருந்தார்கள்.
ஆனால், கடவுளிடமோ தெய்வத்திடமோ
அதிகம் புழங்காத எனக்கு
வீடே கோயிலானது. அவளே தேவியும் ஆனாள்.
இந்தப் பிறவியிலேயே பல ஜென்மங்கள் இறந்து பிறந்ததைப் போல இளவயது வாழ்க்கையை லெகுவாக மறந்துவிட்டேன்.
ஆம் பொறுப்பான காத்திருப்பு அத்தனைப் பிடித்திருந்தது.
தோட்டத்தில் சைபர் மரக்கிளைகள் உலை உதிர்த்து டீச்செடிகளின் மேல்
விழுகிறதாக குன்னன் சொன்னான்,
வேலையாட்களுடன் சென்று நானும்
ஒரு கையருவாளை எடுத்து கிளை
முறித்துக் கொண்டிருதேன். அற்ப நேரத்தில் வலதுத் தோள்பட்டையில்
அயற்சி மனதிலும் ஏதோ அசெளகரியம்.
இருப்பினும் யாரும் பார்க்காதிருக்க
கைத்துண்டினால் என் உடல் கசிந்த
வியர்வைத் துளிகளைத் துடைத்துக் கொண்டு தொடர்ந்தேன்.
காப்பி நேரத்தில் தேவு வந்திருந்தாள்
பதட்டமாக இருக்கிறாள். அவள் முகத்தைப் பார்க்கும் எனக்கு
கண்கள் இறுகி பார்வை மருகுகிறது.
என்ன சொல்லப் போகிறாளோ என
அடுத்து வெட்ட இருந்த கிளையை
கெட்டியாகப் பற்றிக் கொண்டேன்.
குன்னன் ஒரு சில்வர் டம்ளரில்
அரையளவு காப்பியோடு வந்தான்.
அனுசயாவிற்கு பக்கவாதம்
வந்திருப்பதாக தேவு காதருகில்
சொன்னாள். சர்வ பஞ்சேந்திரியங்களையும் அடக்கிக் கொண்டு, அவளுக்கு ஏதும் ஆகாது
என்று விருட்டென புறப்பட்டேன்.
வீட்டை அடைந்தபோது ஊராரின்
அரசல் புரசல்களில் அவள் வயது அடிப்பட்டிருந்ததை என் காதில் கேட்கிறேன் .
அவளை மீட்டெடுப்பதில் அதற்கும் சற்று முன்னால் வாழ்ந்துகொண்டிருந்த
"என்னைப் போல் இவ்வுலகில் யாரிருக்கார்" என்ற வாழ்க்கையை
மறந்துவிட்டேன். மீட்டெடுத்துவிட்டேன்.
பிள்ளைகள் வளர்ந்த காலம் சென்று
அவரவர்களுக்கான வாழ்க்கையின்
பாதையில் அவர்களுடைய ப்ரைவஸிகளுக்குள் நடக்கத் தொடங்கி
இருக்கிறார்கள். கூட்டுக் குடும்பம் என்னும் சந்தோஷக் கூத்துப் பட்டரை
நாங்கள் இருவர்மட்டும் விழித்திருக்கும் கண்காட்சி மாடம் ஆனது .
சிலநாட்கள், அவள் மடிகளில் தலைவைத்து, ஆல்பம்களைப் புரட்டிப் பார்த்து, அன்று முதல் இன்றுவரை
இறந்தவர்களை விரல்விட்டு எண்ணிக் கொண்டிருந்தோம். அவர்கள் ஒவ்வொருத்தருடனான
குடும்ப நட்புநாட்களை என்று தொடங்கினோம், எத்தனைநாள் பழகினோம், என்றிலிருந்து மறந்தோம்,
இப்போது இருக்கிறார்களா இல்லையா,
உயிரோடு இருந்தால் எங்கு இருப்பார்கள், தொலைப்பேசி இலக்கம்
ஆறிலிருந்து ஏழாக கூடிவிட்ட நாட்களிலிருந்து எல்லாம் மாறியிருந்தது. எல்லோரையும்
மறக்கடித்திருந்தது, நம் தாம்பத்திய வாழ்வின் சந்தோஷங்களிலும்,
பிள்ளை வளர்ப்புகளின் மேலிருந்த
செல்லங்களிலும் அலச மறந்துபோனவைகளை,
அலசும் நொடியாக அவளுடனான
என் ஏகாந்ததையில் சித்திரத் தையல் செய்துக் கொண்டிருதோம்.
""கொஞ்சநாளில், அவள் விடைப் பெற்றிருந்தாள், அவள் மடியற்ற
இதங்களை தலையணைகள்
தரவில்லை. வெற்றுத் தரையில்
தலைவைத்து யோசிக்கிறேன்.
அவள் விட்டுப்போன மிச்சவாழ்வின் ஆதாரம் நான்.
இந்தப் பிறவியின் ஜென்மாந்திரங்களுக்குள் நுழைய
இன்னொருமுறை
முண்டியடிக்கிறது மனம். ""
உடன் இருந்த போது அவள் சொன்னதுதான், நீங்கள்தான்
சரித்திர ஏடுகளின் நண்பராச்சே
என்று.
அவள் அதை சொல்லும்பொழுதெல்லாம்
அவ்வப்போது "ஆமாமா"
என்று இருமுறைச் சொல்லிவிட்டுச்
சிரித்திருப்பேன்.
மனம் ஓடுகிறது
முதுமையில்
என் தேகம் வேகம் மறுக்கிறது.
""கூதிர்க்காற்றில்
என் கைக்கால்கள் காய்ந்த
பொடி நடைகளோடு
என்றென்றைக்குமாய் என்று கருதி
அடைப்பிட்டிருந்த என் கிராமத்து வீட்டின் அறைக்கதவுகளை திறக்கிறேன்
தடவறையிலிருந்த காளிதாசனும்
ஷெல்லியும் ஷேக்ஸ்பியரும்
கீட்ஸும் நீண்ட உறக்கத்திலிருந்து
ஒளியும் காற்றும் தொட்டுணர்ந்தார்கள்.
அந்தப் பதிவறையின் புத்தக அலமாரி,
தூசுப் படர்ந்து நிறம் மங்கிய
பழைய பரண்கள் என எல்லாவற்றிலும்,
உப பக்தனை காத்திருந்த வாசவதத்தைக்கு
ஜென்மம் கொடுத்த குமாரன் ஆசான்.
ஒரு முத்தம் கொண்டு
தன்னை அனுசரணம் செய்ய
ஹெலனோடு அபேட்சைவைத்த
டாக்டர் ஃபோஸஸ் பே மாண்டோ.
இதயத்தில்
தெய்வத்தினுடைய கைய்யொப்பமுள்ள
ஃபைதோ டெஸ்தோவஸ்கி.
பாடித்தீராத
எத்தனையோ இராகங்களை
பாக்கிவைத்து
பறந்துபோன ஜான் கிட்ஸ்.
என, இன்னும் நிறைய நிறைய சொல்லிலடங்காதவர்கள்
யாரெல்லாமோ
அங்கே காத்திருந்திருந்தார்கள் "
வயதாக வயதாகத்தான் ஞாபகங்கள் அதிகமாகின்றன.
பைராகி