அப்பாவின் ஞாபகமாய்
அப்பாவின் ஞாபகமாய்
பிறந்து வளர்ந்து பதினைந்து வயதில் ஊரை விட்டு சென்னைக்கு சென்றவன் அவன், கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கழித்து மீண்டும் இந்த மண்ணை மிதிக்கிறான்.
பேருந்து நிலையம் பெரியதாகி இருந்தது. கடைகள் நெருக்கமாகவும் சிமெண்ட் கட்டிடங்களாகவும் ஆகியிருந்தன. அது போல ஒவ்வொரு கடையும் தங்களை அலங்காரங்களால் அழகுபடுத்திக்கொண்டு இருந்தன.
பேருந்தை விட்டு இறங்கியவன், அடுத்து என்ன செய்வது? என்று திகைத்து நின்றான். அவனை பொருத்தவரை ஊரை பார்க்கவேண்டும் என்று ஒரு நோக்கம் மட்டுமே இருந்தது. அங்கு போய் யாரை பார்ப்பது? என்பதை பற்றி எந்த எண்ணமுமில்லாமல் இருந்தது.
இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் இருக்குமா? தாங்கள் வசித்து வந்த குடிசை இருக்குமா? கிட்டத்தட்ட நூறு குடிசை வீடுகளாக இருந்த அந்த இடம் இப்பொழுது எப்படி இருக்கும்? அன்று ஏக தேசம் எல்லாமே மண்ணால் கட்டப்பட்டிருந்த மேலே கூரை போட்டிருந்த குடிசைகள் தான். அப்பா உட்பட எல்லோருமே கூலி வேலைக்கும், காட்டு வேலைக்கும் சென்று கொண்டிருந்தவர்கள் தான்.
இடுப்பில் நிற்காமல், எப்பொழுது வேண்டுமானாலும் கழண்டு விழ தயாராக இருக்கும் ‘ட்ரவுசரை’ ஒரு கையால் இழுத்து பிடித்தபடி, இன்னொரு கையால் தோளில் தொங்க விட்டு கொண்டு செல்லும் புத்தகப்பையும், ஞாபகத்திற்கு வந்தன. மூக்கில் இருந்து வெளியேறும் ‘சளியின்’ செயல்பாடு இவனை பயமுறுத்தி கொண்டே இருக்கும். அடிக்கடி ‘ட்ரவுசர்’ அவிழ்வதற்குள் நொடி பொழுதில் கையை மூக்கருகே கொண்டு சென்று லாவகமாய் மூக்கை துடைத்து அதே ‘டவுசரில்’ துடைத்து கொள்வதும், அதற்குள் இடுப்பில் இருந்து நழுவி விழப்போகும் டவுசரை சட்டென பிடித்து கொள்ளும் சுறுசுறுப்பும், காலையில் குடித்த நீச்ச தண்ணீர் வயிற்றில் ஆட்டம் போட்டு கொண்டிருக்க மதியம் ஸ்கூலில் போடும் மதிய உணவை நினைத்த படியே பள்ளிக்கு ஓடியது இன்னும் மறக்க முடியவில்லை.
இதே பேருந்து நிலையத்தின் அடுத்த சந்தில் தான் பள்ளிக்கூடம் இருந்த ஞாபகம், அப்பொழுது தொடக்கப்பள்ளியாக இருந்தது, முன்னால் ‘கேட்’ போடப்பட்டு உள்புறமாய் இரு பக்கம் ஓலை குடிசைகளுடன் நீளவாக்கில் இருந்ததாய் ஞாபகம்.
கையில் வெறும் சூட்கேஸ் மட்டும்தான். தங்கி செல்ல விரும்பாமல் தான் வெறும் இரண்டு செட் உடையை சூட்கேசில் திணித்து கொண்டு கிளம்பி விட்டான். ஊருக்கு போக வேண்டும், இந்த எண்ணம் உதிர்த்தவுடன் கிளம்பி விட்டான்.
மனைவி கணவனை அதிசயமாய் பார்த்தாள், பக்கத்து தெருவுக்கு போவதாய் இருந்தாலும் ‘காரில்’ போக நினைப்பவன் இப்படி சூட்கேசை எடுத்து கொண்டு பேருந்தில் போவதாக சொல்கிறானே? இவனுக்குமே தான் ஏன் இப்படி கிளம்புகிறோம் என்னும் சந்தேகம் இருந்து கொண்டுதான் இருந்தது.
இதுதானா நாம் படித்த பள்ளி? வாண்டி பாதை குறுகலாய் வாகனங்கள் வந்து சென்றும் கொண்டிருந்தன. ஆனாலும் பாதையை ஒட்டி உள்புறமாய் சற்று தள்ளி காம்பவுண்ட் கேட்டு மட்டும் தான் பழையதாய் இருந்தது. உள்ளே பெரிய கட்டிடங்களாக, மரங்கள் நிறைந்தும் இரைச்சலாகவும் இருந்தது. அது பறவைகளின் இரைச்சலா, அல்லது அங்கிருக்கும் மாணாக்கள்ர்களின் இரைச்சலா தெரியவில்லை
காம்பவுண்ட் ‘கேட்டின்’ மீது இருந்த பார்வையை திருப்பி கட்டிடத்தின் மேல் பார்த்தான். ‘அரசு மேல்நிலை பள்ளி’ என்றிருந்தது. ‘ஓ’ பள்ளிக்கூடம் வளர்ந்திருச்சு, மனதுக்குள் நினைத்து கொண்டவன் அடுத்து என்று யோசித்து நிற்பதுக்குள் கால்கள் அவனை அவனது வீட்டை நோக்கி செல்லும் பாதைக்கு இழுத்து சென்றன.
தான் ‘இலக்கில்லாமல்’ நடப்பதாக தெரிந்தது. எங்காவது ஒரு இடத்தில் ஓய்வாக உட்கார்ந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அறிமுகமான முகம் ஒன்று கூட கண்ணில் தென்படவில்லை. கிட்டதட்ட இரவு முழுக்க பஸ்ஸில் பயணம். சொகுசு பேருந்தாய் இருந்தாலும், இப்படி ஓய்வில்லாமல் நடந்து கொண்டே இருப்பதில் என்ன பயன்?
தங்குவதற்கு வசதி..? அவனுக்கு படித்த காலத்தில் வலது முக்கில் “லாட்ஜ்” என்று பழைய போர்டு ஒன்று தொங்கி கொண்டிருந்த பழைய கட்டிடம் இருந்தது ஞாபகத்துக்கு வந்தது. ஆனால் அந்த லாட்ஜ் இருக்குமா? அப்பொழுதே பழைய கட்டிடம்.
பள்ளி இருந்த சந்து பாதையை விட்டு ‘மெயின்’ ரோட்டுக்கு வந்தவன். ஆச்சர்யப்பட்டான். கிட்டத்தட்ட நாகரிகமான ஓட்டல்கள், வரிசையாக உயர்தரத்துடன் தங்கும் விடுதிகள். ஏராளமான கார்களும் பஸ்களும் பாதை முழுக்க நிறைந்து காணப்பட்டது.
அறை எடுத்து தங்கி கொள்ளலாமா? கொஞ்சம் நாகரிகமான விடுதிக்குள் நுழைந்தவன் ‘ரிசப்சன்’ முன்னால் உட்கார்ந்திருந்த இளைஞனிடம் “சிங்கிள் ரூம்” இருக்கா?
அவன் இவனை மேலும் கீழும் பார்த்து விட்டு, தன் முன்னால் இருந்த ரிஜிஸ்தரை இவனை நோக்கி திருப்பி வைத்தான். பேனா? அவன் கொடுக்க இவன் சென்னை முகவரியை எழுதியவன் இங்கு வந்த நோக்கம்? யோசித்தான், சட்டென சொந்த விசயம் என்று எழுதினான்.
வெளியில் இருந்த அளவுக்கு அறை ஒன்றும் பெரிய வசதியை கொண்டு விடவில்லை. சரி கொஞ்ச நேரம்தானே என்று குளியறைக்குள் நுழைந்தான்.ஒரு மணி நேரத்திற்குள் மீண்டும் உடைகளை மாற்றிக்கொண்டு, சூட்கேசை எடுத்து கொள்ளலாமா? என்று நினைத்தவன், இருக்கட்டும், சாவியை ‘ரிசப்சனில்’ கொடுத்து விட்டு ‘மள மளவென’ வெளியே வந்தான்.
இங்கிருந்த குடிசைகள் எல்லாம் எங்கே? கிட்டதட்ட நகரின் எல்லையில் இவன் வசித்து கொண்டிருந்த இடம் இருந்தது, இப்பொழுது அந்த இடம் முழுவதும் பெரிய பெரிய வீடுகளாய், அதுவும் தனித்தனி காம்பவுண்டுகளுடன் இரண்டு மூன்று மாடிகளுடன் இருந்தது.
எந்த இடத்தில் தனது குடிசை இருந்தது? என்று அவனாள் நிதானிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட நாற்பது அம்பது வீடுகளாக அல்லது பங்களாக்களாக வரிசை கிரமாம இருந்தது. சதுர வாக்கில் வரிசையாக மூன்று நான்கு சுற்றுக்களா கவும் இருந்தது. அந்த கட்டிடங்களை இரண்டு முறை சுற்றி வந்தான். முதல் சுற்றில் அவனை கண்டு கொள்ளாமல் வலதும், இடதும் சந்திக்கும் முச்சந்தின் மூலையில் “துணிகளை இஸ்திரி” போட்டு கொண்டு ஜன்னல் வழியாக இவன் கடந்து செல்வதை பார்த்து விட்டு சார் சார்.. அங்கிருந்தே அழைத்தபடியே இவனை பார்த்தான்.
அவனது பார்வை இவனை சங்கடப்படுத்தியது, என்றாலும் அவனிடம் என்ன சொல்வது?
இஸ்திரி பெட்டியை, அங்கேயே வைத்து விட்டு அவனே இவனருகில் வந்தான், சார் யாரை தேடறீங்க?
என்ன பதில் சொல்வது? இல்லை..இந்த இடத்துலதான் நாங்க ரொம்ப வருசத்துக்கு முன்னாடி இருந்தோம், அப்ப எல்லாம் இங்க குடிசைக தான் இருந்துச்சு. நாங்களும் இங்க ஒரு குடிசையிலதான் இருந்தோம். அதுதான் எங்க இருந்தோமுன்னு, தேடி பார்க்கறேன், இழுத்தான்.
இஸ்திரி போட்டு கொண்டிருந்தவனுக்கு வயது ஐம்பது மேல் இருக்கலாம். நீங்க கேட்கறதை பார்த்தா இருபது முப்பது வருசத்துக்கு முன்னாடி மாதிரி இருக்குது.
ஆமா அப்ப, இங்க குடிசைங்க நிறைய இருந்துச்சு, எங்க குடும்பமும் இதுக்குள்ள ஒரு குடிசையிலதான் இருந்துச்சு, இங்கிருந்துதான் நாங்க எல்லாரும் ஸ்கூலுக்கு” போயிட்டிருந்தோம். பஸ் ஸ்டாண்ட் பக்கம் இருக்கற ஸ்கூலு, அப்ப அஞ்சாம் கிளாஸ் வரைக்கும் இருந்துச்சு.
அடேயப்பா..எத்தனை வருசம் ஆயிடுச்சு, இஸ்திரி போட்டு கொண்டிருந்தவனின் முகத்தில் புன்னகை, சார் அதுக்கப்புறம் எத்தனை மாறி போச்சு, இந்த இடத்துல இருந்த குடிசைங்களை எல்லாம் பிரிச்சு போட்டு பெரிய கலவரம் கூட நடந்துச்சு. இந்த இடம் வேறொருத்தருக்கு சேர்ந்ததுன்னு, அவரு கேசு போட்டு, நாலஞ்சு வருசம் கழிச்சு அந்த கேசுல ஜெயிச்சுட்டு, இங்கிருக்கற எல்லா குடிசைகளையும் எடுத்துட்டு வெத்து நிலமா போட்டு வச்சாரு, அப்புறமா “ரியல் எஸ்டேட்டு” காரனுக்கு கொடுத்துட்டு போயிட்டாரு. அவங்க நிறைய வீடாவும், சைட்டாவும் போட்டு இப்ப பாருங்க எத்தனை வீடுங்க ஆயிடுச்சு.
சரிதான் தலையாட்டியவன், பரவாயில்லை, நான் கிளம்பறேன், திரும்பினான்.
பரவாயில்லை வாங்க என் கூட, அவன் ‘இஸ்திரி’ போட்டு கொண்டிருந்த இடத்துக்கு கூட்டி சென்றான். இருபக்க சந்தும் இணைக்கும் வகையில், வாசலும் ஜன்னலும், ஒட்டி இருக்க அவன் வீடு மட்டும் குடிசையாக இருந்தது. சுண்ணாம்பே காணாமல் பல வருடங்களாக ஆகியிருக்கலாம். ஜன்னல் அகலமாக இருந்தது. அங்கிருந்தான் துணிகளை மேசை போட்டு இஸ்திரி போட்டு கொண்டே தெருவில் போவோர் வருவோரை பார்த்து கொண்டிருப்பான் போல.
அவன் குடிசைக்குள் நுழைந்ததும் சட்டென ஒரு குளுமை உடம்பில் ஊறியது. உள்ளே மூலையில் வைத்திருந்த பானையில் இருந்து நீர் எடுத்து கொடுத்தான். வெயிலில் ‘அலைந்த களைப்பில்’ தம்ளரை வாங்கியவன் மள மளவென அண்ணாந்து குடித்தான். தொண்டையில் குளுமையான தண்ணீர் இறங்குவதை உணர முடிந்தது.
யதேச்சையாய் அவன் பார்வை உள்புறமய் பார்க்க வலது பக்கத்து சுவற்றில் உள்புறமாய் வளைந்த சுவற்றில் அதோ,… மறக்க முடியாத சுவற்றின் அந்த விரிசல்.. அதை சுற்றி கருப்பு கருப்பாய் தெரியும் கோடுகள்…
அப்படியானால்….தான் பெற்றோருடன் வசித்து வந்த குடிசை மட்டும் இன்னும் உயிருடன், இன்னும் பழமையாக இந்த கட்டிட நிலத்துக்குள்..!
ஞாபகம் வந்து விட்டது, இந்த கோடுகள்..அவன் சிறு வயதில் சுவரோரமாய் படுத்துக் கொண்டே, விரிசலை சுற்றி மன கணக்குகளை கோடுகளாக சுவற்றில் எழுதி எழுதி..
“இஸ்திரி” போடுபவர் சொல்லி கொண்டிருந்தார், எல்லா குடிசைகளையும் உடைச்சவங்க ஏனோ இந்த குடிசைய மட்டும் விட்டுட்டாங்க, ஓருவேளை செத்தவன் ஞாபகமா இதை இப்படியே விட்டுட்டாங்க போலிருக்கு. இந்த குடிசைகளை எல்லாம் எடுக்கோணும்னு கோர்ட்டுல கேசு போட்ட ஆளுங்க கிட்ட, ஆரம்பத்துல இந்த குடிசையில இருந்தவருதான் போராடி சண்டை போட்டாராம், கவர்ண்மெண்டுகிட்ட எல்லாம் போயி முறையிட்டு, பாவம் கடைசியிலே அவரை எப்படியோ முடிச்சுட்டாங்க, அவரோட குடும்பம் இராத்திரியோட இராத்திரியா எங்கேயோ போயிட்டாங்க.
அன்று மாலையே சென்னைக்கு பஸ் ஏறியிருந்தாலும் மனம் என்னவோ அப்பாவின் ஞாபகமாக ஏதோ ஒன்று இந்த உலகில் இருக்கிறது என்று ஒரு பரவசமான நிலையில் இருந்தான்.