மனைவி மனம் மாறுபட வாய்ப்புண்டு - ஆசாரக் கோவை 82
வண்ண மகளிர் இடத்தொடு தம்மிடம்
ஒள்ளியம் என்பார் இடங்கொள்ளார் தெள்ளி
மிகக்கிழமை உண்டெனினும் வேண்டாவே பெண்டிர்க்
குவப்பன வேறாய் விடும். 82 ஆசாரக் கோவை
பொருளுரை:
நான் அறிவுடையவன் என்று சொல்பவர், தம்மை அழகு செய்துகொள்ளும்
விலைமகளிர் இல்லத்தை அடுத்துள்ள தம்மிடத்தில் தாம் வாழும் இல்லத்தை
அமைத்துக் கொள்ள மாட்டார்.
அவ்விடம் தமக்கு மிகுந்த உரிமையுடையதென்று தெளிவாக அறிந்தாலும்,
அந்த இடம் விரும்பப்படுவதில்லை. அந்த இடம் மனைவியர்க்கு வேறு பல
விருப்பத்தைத் தருவன ஆகிவிடும். எனவே, அந்த இடம் வேண்டாம்
எனப்படுகிறது.
கருத்துரை: பொது மகளிர் வீட்டினருகில் குடியிருப்புக் கொண்டால்,
மனைவியர் மனவிருப்பம் மாறுபடும்.
வண்ணம் - அழகு, ‘விலைமகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்'
ஆதலின், தம்மை யழகு செய்யு மகளிர் விலைமகளிர் எனப்பட்டனர்.