ஒரு ஊர்ல ஒரு ராஜா ராணி சிறுவர் கதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

ஒரு ஊர்ல ... ஒரு ராஜா! ராணி!
சிறுவர் கதைகள்
நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11. அலைபேசி : 94446 40986
*****
மின்மினி இதழ் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் ஹைக்கூ தளத்தில் ஓய்வின்றி உழைத்து வரும் கடின உழைப்பாளி. தற்போது குழந்தைகள் இலக்கியத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது சிறுகதை தி இந்து தமிழ் நாளிதழில் படித்து மகிழ்ந்தேன். பல்வேறு இதழ்களில் பிரசுரமான சிறுகதைகளை தொகுத்து ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா! ராணி!’ என்ற தலைப்பில் நூலாக வழங்கி உள்ளார். இந்நூலை சென்னை மாநகரில் துடிப்புடன் இயங்கி வரும் இலக்கியவாதி திருமிகு இலக்கியவீதி இனியவன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார். இருமுறை சாகித்ய அகாதெமி விருது பெற்ற திரு. ம. இலெ. தங்கப்பா அவர்களின் அணிந்துரை மிக நன்று.
தொலைக்காட்சி ஊடகங்கள் வந்ததன் காரணமாக வாசிக்கும் பழக்கம் வழக்கொழிந்து வருகின்றது. குறிப்பாக குழந்தைகள் பாடப்புத்தகம் தவிர வேறு எதையும் வாசிப்பதில்லை. தொலைக்காட்சி பார்ப்பது, கணினியில் விளையாடுவது என்று நேரத்தை விரயம் செய்து வருகின்றனர். குழந்தைகள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல். ஒவ்வொரு கதையிலும் பல தகவல்கள் உள்ளன. பொது அறிவை வளர்த்துக்கொள்ள உதவிடும் உன்னத நூல்.
சிலர் சிறுகதை என்ற பெயரில் நகைச்சுவை துணுக்குகளை சற்று விரிவாக எழுதி வருகின்றனர். இன்னும் சிலர் பொழுதுபோக்குவதற்காக பயனற்ற நிகழ்வுகளை சிறுகதையாக எழுதி பக்கத்தையும் வாசகர் நேரத்தையும் வீணடித்து வருகின்றனர். ஆனால் இந்த நூலில் 16 சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையிலும் ஏதாவது செய்தி, நீதி நெறி உள்ளன. இலக்கியம் என்பது வாசகர்களை பண்படுத்தும் விதமாகவே இருக்க வேண்டும்.
யாழினியும் அப்பாவும் என்ற சிறுகதையில் இயற்கை நமக்கு நிறையக் கற்றுத் தருகின்றன என்பதை உணர்த்தி உள்ளார். சூரியன் குறித்த நேரத்தில் வந்து குறித்த நேரத்தில் சென்று கடமையை உணர்த்துகின்றது. மரங்களின் பயன்களை கதையில் உணர்த்தி உள்ளார். குழந்தைகளுக்கு இயற்கை பற்றிய அறிவை வளர்க்க உதவிடும் சிறுகதை!.
மனந்திருந்திய கழுகுகள்! கதையில் பச்சைக்கிளி கழுகுகள் பேசுவது போல கதை எழுதி கடைசியில் பிறருக்கு தீங்கு நினைத்தால், நினைத்தவருக்கு தீங்கு வரும் என்ற நீதியை உணர்த்தி உள்ளார்.
‘எல்லாம் அவன் பார்த்துப்பான்’ சிறுகதையில் குரங்கு, முயல் எல்லாம் பள்ளி செல்கின்றன. நல்ல கற்பனை. படிக்காமல் அவன் பார்த்துப்பான் என்று இருப்பது தவறு என்பதை உணர்த்தி உள்ளார்.
‘அமைச்சர் மீனின் அற்புத யோசனை’ சிறுகதையில் மீன் அமைச்சராக உள்ளது. மீன் இனத்தை தின்று அழிக்கும் கரடியை விரட்ட திட்டமிட்டு, கரடியை மனிதர்கள் பிடிக்க திட்டமிட்டுள்ளனர் என்று சொல்ல, கரடி மீன்களை விட்டுவிட்டு நடு காட்டிற்கு சென்று விடுகிறது. குழந்தைகளுக்கு அறிவு நுட்பம் போதிக்கும் விதமாக கதைகள் உள்ளன.
‘மகனிடம் கற்ற பாடம்’ சிறுகதையில் மனைவி அரசாங்க உதவிப்பணத்தை வாங்கு என்று நச்சரிக்க மகன் எனக்கு புத்தாடை வாங்கும் பணத்தில் புயலால் பாதிக்கப்பட்ட புதுவையில் மரக்கன்றுகள் நடும் பசுமை பூமி அமைப்பிற்கு வழங்குவோம் என்று சொல்ல குடும்பமே நெகிழ்ந்து போகின்றது. படிக்கும் நமக்கும் இயற்கை நேசம் வருகின்றது.
‘கலாம் தாத்தாவின் நூலகப் புதையல்’ சிறுகதையில், சுற்றுலா செல்வதை விட, ஆலயம் செல்வதை விட, புத்தகத்திருவிழா செல்வது மேல் என்பதையும், புத்தகத்திருவிழாவில் மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் உரை கேட்ட்தையும் வீட்டுக்கு ஒரு நூலகம் வேண்டும் என்பதையும் உணர்த்தி உள்ளார்.
‘காட்டைக் காப்பாற்றிய குரங்கு’ சிறுகதையில் மரம் வெட்ட வரும் மனிதர்களை தடுக்க ஆலோசனை தந்து நிறைவேற்றுவது மதிநுட்பம். விலங்குகளுக்கும் அறிவு உண்டு, திட்டமிடல் உண்டு என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
‘விஞ்ஞானிகளுக்கு அழைப்பு’ சிறுகதையில் எரிபொருள் மாற்றாக சூரியசக்தியை நாம் விண்வெளியில் இருந்து பெறணும்னா லேசர் மற்றும் நானோ தொழில்நுட்பம் மூலமாக பூமிக்கு கொண்டுவந்து பயன்படுத்த முடியும். இதற்கான ஆராய்ச்சிகள்ல தான் ஈடுபடணும் என விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுக்கிறார் நம்ம அப்துல் கலாம் அய்யா” என்ற அறிவியல் கருத்தையும் மிக எளிமையாக, கதையில் வைத்துள்ளார்.
‘பலூன் வியாபாரி கரடி’ என்ற சிறுகதையில் உழைத்து சேர்த்த பணத்தை வழிப்பறி செய்தால் தண்டனை உறுது என்ற நீதியை உணர்த்தி உள்ளார். கதையில் கரடி பலூன் வியாபாரியாக வருவது நல்ல யுக்தி. சிறுவர்களுக்கு கருத்து மிக எளிமையாக சென்று அடையும். பிறரை ஏமாற்றி பிழைப்பது, வஞ்சித்து பிழைப்பது அவலம் என்பதை விலங்கு பாத்திரங்கள் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார்.
‘பசுமைக் குடில்’ சிறுகதையில் புவி வெப்பமயமாதலை தடுக்க மாணவர்கள் ‘பசுமைக் குடில்’ தொடங்கி விழிப்புணர்வு விதைப்பது மிக நன்று.
‘ரோபோவின் ராஜ்யத்தில்’ சிறுகதையில் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டே இருந்தால் எதிர்காலத்தில் சுவாச காற்றான ஆக்ஸிஜனையும், குடிக்கும் தண்ணீரையும் விலை கொடுத்து எல்லோரும் வாங்க வேண்டிய அவல நிலை வரும் என்பதை தொலைநோக்கு சிந்தனையுடன் கதையில் வடித்துள்ளார்.
‘பழிக்குப்பழி’ என்ற சிறுகதையில் ‘இன்னா செய்தாரை’ திருக்குறளை வலியுறுத்தும் வண்ணம் தேனீக்களின் கூட்டை அழித்த கரடிக்கும் அதன் குட்டியை வேடர்களிடம் இருந்து காப்பாற்ற தேனீக்கள் வேடனை கொட்டி கரடியை காப்பாற்றிய கதை மிகவும் நன்று. இந்த கதை படிக்கும் குழந்தைகள் மனதில் தீங்கு செய்த பகைவரும் வெட்கும் வண்ணம் நன்மை செய்ய வேண்டும் என்ற நீதியை உணர்த்தி உள்ளார். பாராட்டுக்கள்.
‘பிள்ளை மனசு’ சிறுகதையில் சிறுவன் அப்பாவை இழந்த நண்பனுக்கு ஆடை தந்து உதவும் இரக்க உள்ளம், மனிதநேயம் கற்பிக்கும் கதை மிக நன்று.
‘புத்திசாலி எலிகள்’ லாவகமாக பூனையை பந்தால் தாக்கி விட்டு தப்பித்த கதை நன்று.
‘வேடம் போட்ட நரி’ சிறுகதையில் திறமைகள் இன்றி திறமை இருப்பதாக வேடம் தரித்தால் மாட்டிக் கொண்டு அவமானப்பட நேரிடும் என்பதை உணர்த்தி உள்ளார்.
‘பகுத்தறிவு எங்கே’ சிறுகதையில் அபசகுனம் பார்க்கும் மூட நம்பிக்கையால் தோல்வி கிடைக்கும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு தகவல் உள்ளது. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் படிக்க வேண்டிய நூல். மனிதனை மனிதனாக வாழ வைக்கும் நெறி உணர்த்தும் கதைகளின் தொகுப்பு மிக நன்று. நூலாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜாவிற்கு பாராட்டுக்கள்.
மிக நேர்த்தியாக அச்சிட்டு பதிப்பித்துள்ள அன்னை இராஜேஸ்வரி பதிப்பகத்தாருக்கு பாராட்டுக்கள் .
*****