போக்குவரத்து விதி மீறல் தமிழகத்திலும், பிரிட்டனிலும் ஓர் ஒப்பீடு

சூழல் ஒன்று:

சென்ற வாரம் மதுரையில் ஒருநாள் மதியப் பொழுது. 28.07.2014.
மணி ஒன்று. நான் எனது கைனடிக் ஹோண்டாவில் சென்று
கொண்டிருந்தேன். அப்பொழுது சேதுபதி உயர்நிலைப் பள்ளி
தாண்டி கிருஷ்ணா ராவ் தெப்பக்குள தெருவிற்குத் திரும்பும்
திருப்பம். போக்குவரத்து சிக்னலில் கடும் நெரிசல். திருப்பத்தில்
ஹெச் டி எப் சி பேங்க் அருகில் 'நோ பார்க்கிங்'கை போர்டுக்கு
நேர் கீழேயே சுமார் 20 - 30 இரு சக்கர வாகனங்கள் போக்குவரத்தைப்
பற்றிய கவலையின்றி நிறுத்தப்பட்டிருந்தன.

போக்குவரத்துக் காவலர் ஒருவர் பெரிய சங்கிலி கொண்டு
அனைத்து வாகனங்களையும் இணைத்துக் கட்டி பூட்டிக்
கொண்டிருந்தார். நிச்சயமாக வாகன உரிமையாளர்கள்
அதிர்ச்சியடைவார்கள். எப்படி சமாளித்து அவர்கள்
வாகனங்களை பெறப் போகிறார்கள்? காவலர் எப்படி
அபராதம் வசூலிக்கப் போகிறார்? என்ன நடக்கும் எனக்
கூறுங்களேன்.

சூழல் 2: அடுத்த நாள். 29.07.2014. நான் கொழும்பு பண்டார நாயகா
விமான நிலையத்திலிருந்து ஸ்ரீ லங்கன் ஏர்லயன் விமானத்தில்
லண்டன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். 11.30 மணி நேரப்
பயணம். எனக்கு முன்னிருந்த திரையில் ஜெயம் ரவி - அமலா
பால் நடித்த 'நிமிர்ந்து நில்' திரைப்படம் பார்த்துக் கொண்டு
இருக்கிறேன்.

அதில் போக்குவரத்து நெரிசலில் சிலரின் வாகனங்களிலிருந்து
சாவிகளை காவலர் எடுத்து வைத்துக் கொள்வார். அமலா பாலும்
மற்றவர்களும் காவலரிடம் கையூட்டு கொடுத்து சாவியை
எடுத்துக் கொள்வார்கள். அரவிந்த் என்ற பெயரில் கதாநாயகனாக
நடிக்கும் ஜெயம் ரவி லஞ்சம் கொடுக்காததால் பல துன்பங்களுக்கு
ஆளாகிறார்.

சூழல் 3:

29.07.2014 இரவு 09.30 மணிக்கு லண்டன் ஹீத்ரூ விமான
நிலையத்தை நானும், என் மனைவியும் அடைகிறோம்.
என் மகன் விமான நிலையத்தில் எங்கள் மருமகளை இறக்கி
விட்டு, 11 வயது, 6 வயதுள்ள எங்கள் பேத்திகளுடன் சற்றுத்
தொலை தூரத்திலும், வரவேற்பதற்கு எங்கள் மருமகள்
விமான நிலையத்திலும் காத்திருக்கிறார்கள்.

விமான நிலையத்தில் காரை நிறுத்த கட்டணம் 10 பவுண்டுகள்.
(சுமார் 1040 ரூபாய்கள்). பேத்திகள் இருவரும் பின் இருக்கையில்
தான் பிரத்யேக இருக்கையில் சீட் பெல்ட் அணிந்து அமர வேண்டும்.
எங்கள் மகனுக்கு போன் செய்து விட்டு எங்களை அழைத்துக்
கொண்டு வெளியே வருகிறார்.

எங்கள் மகன் வந்து சிலநொடிகளில் காரில் ஏற்றிக் கொண்டு
வீட்டிற்கு விரைகிறார். ஹௌன்ஸ்லோ ரயில் நிலையம்
வீட்டிற்கு மிக அருகில் நடக்கும் தூரம்தான். ஒவ்வொரு காரிலும்
அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் செல்லக்கூடாது. என் மகன்
காரில் 5 பேருக்கு மேல் செல்ல முடியாது. எனவே எங்கள் மருமகள்
விமான நிலையத்திலிருந்து 'ட்யூப்' ரயிலில் தனியாக வீட்டிற்குச்
செல்கிறார்.

(தொடரும்)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Aug-14, 7:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 317

மேலே