படிச்சு பாருங்க
மீரட் : சிறுவயதிலிருந்து பிச்சை எடுத்துத் திரிந்தவர், ஊராட்சி தலைவராக ஆகியிருக்கிறார். உ.பி., மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்திலுள்ள கைகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தரம்வீர். “நாட்’ என்ற நாடோடி இனத்தைச் சேர்ந்த இவர், தனது பத்தாவது வயதில் பள்ளிக்குச் செல்வதை விடுத்து பிச்சை எடுக்க ஆரம்பித்தார். இவரது வருமானத்தில்தான் குடும்பம் நாட்களைக் கடத்தி வந்தது. இவர் தனது பிச்சையில் ஒரு பகுதியைச் சேமித்து ,தன் தம்பியைப் படிக்க வைத்தார். இவரது தம்பி இப்போது மாநிலப் பொதுப்பணித்துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றுகிறார்.
கடந்த 2005ல் இவரது கிராமத்தில் ஊராட்சி தேர்தல் நடந்தது. பிற்படுத்தப்பட்ட மற்றும் உயர்குடியினர் இவரைத் தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்கவைத்தனர். தரம்வீரை எதிர்த்து ஜாதவ் இனத்தைச் சேர்ந்தவர் போட்டியிட்டார். தரம்வீர் வெற்றி பெற்றார். தனது கிராமத்தின் நலனுக்காக உழைத்து வரும் தரம்வீர்,” முன்பு எனக்காகப் பிச்சை எடுத்தேன். இப்போது எனது கிராம மக்களுக்காகப் பிச்சை எடுக்கிறேன். இதுவரை 25 லட்ச ரூபாய் வரை கிராம வளர்ச்சிப் பணிகளுக்காக செலவழித்திருக்கிறேன். கிராமத்தின் சாலைகளை சிமென்ட் சாலைகளாக மாற்றுவதுதான் எனது இப்போதைய கனவு’ என்று நெகிழ்கிறார். தரம்வீரின் நேர்மை, அர்ப்பணிப்பு குறித்து கிராம மக்களும் மாவட்ட அதிகாரிகளும் பெருமிதம் கொள்கின்றனர்.