கல்யாண விற்பனை பிரிதிநிதிகள் …

ஓர் நாள்
ஓர் இரவில்
எனக்கோர் தகவல்..

பெண் பார்க்கும்
படலமாம்
மறுநாள் காலை
என் தோழிக்கு…

கலந்து கொள்ள
எனக்குமோர் அழைப்பு
தோழியிடமிருந்து ..

கனவுகளோடு
அவள் உறங்க…
இந்த வரனாவது
அமைக்க வேண்டுமென
ஆண்டவனிடம் கோவித்து
நான் உறங்க …

மறுநாள் காலை
வீட்டுக்குள்
நுழையும் போதே
தென்பட்ட அனைத்து முகத்திலும் ,
சந்தோசமா
வருத்தமா
பழகிப்போன எதார்த்தமா
புரியவில்லை எனக்கும் ...

பரபரப்பில்லை
என் தோழியின் செயலில்களில் ....
எதிர்பார்ப்பில்லை
என் தோழியின் கண்களில் ….
ஆசையும் இல்லவே இல்லை …
எத்தனை முறை
வெளிப்படுத்துவாள்
அவளும் …
உள்ளுக்குள்ளே
உறைந்து போயிருக்க கூடும்
அனைத்தும் ..

பேச்சு சத்தம் கேட்கிறதே
ஓ! வந்துவிட்டார்கள் போலும் ….

இவர் தான் மாப்பிள்ளையோ ..
உறவுகளுக்கு மத்தியில்
ஓர் செய்விக்கப்பட்ட
பொம்மையாக ..

உபசரணைகள் தொடங்குகிறது ..

காபி கப்புடன் தோழியும்
அவளுக்கு துணையாக நானும் ..

பேச்சுக்குரல் கேட்கிறது ….
பரபரப்புகளை தாண்டி,
நீண்ட அளப்பரைகளுக்கு பிறகு

பொண்ணுக்கு 10 சவரன் ..
பையனுக்கு 2 சவரன் ..
50000 ரொக்கம் ..
கல்யாண செலவு பாதி பாதி..

சொல்வது,
இதை சொல்வதற்காகவே
அழைத்து வரப்பட்ட
எதோ ஓர் உறவாக இருக்கக்கூடும் …..

என் முகம் தோழி பார்க்க
அவள் முகம் நான் பார்க்க

ஒ! இவனும் ஆண் இல்லை போலும் ..
விலை பேசப்படும்
அவன் அவயங்களை
வேடிக்கைப் பார்க்கிறானே..

இல்லை இல்லை ..
இவன் ஆண்மையை விற்க
விற்பனை பிரிதிநிதிகளுடன் வந்திருக்கிறான்…

பாவம்! பிச்சை இட்டு அனுப்புங்கள்
சொல்ல நா துடிக்க
அமைதியாய் அமர்ந்திருந்தோம் ..

பெண்ணை பெற்றவர்கள்
தலை அசைக்க …
அவனைப் பெற்றது
பெண் தானா என்ற சந்தேகம் எனக்கு எழ
நானும் எட்டி பார்க்க …

முடிந்துவிட்டது
ஓர் நாள் கூத்து …

மனம் ஆயிரம் சொல்ல
ஏதும் சொல்லாமல்
எப்போதும் போல்
கிளம்பிவிட்டேன் நானும் …

“வயசாயிடுச்சி
கடன் பட்டாவது
இந்த வரன முடிச்சிடனும் ,
வந்ததுலயே
இது தான் கொஞ்சம் குறைச்சலா இருக்கு ”
அவள் அம்மாவின் பயம் மட்டும் காதில் கேட்கிறது …

அவனை வாங்க முடிவெடுத்து விட்டார்கள்...
கேள்வியும் இல்லை பதிலும் இல்லை என்னிடத்தில்..

எழுதியவர் : Mahalakshmi (14-Aug-14, 2:39 pm)
பார்வை : 174

மேலே