பாறைவாதிகளின் உலகத்தில் துளிர்த்த பசுந்தளிர் -2 - பொள்ளாச்சி அபி

இரத்தபேதம் பார்க்காத ஈக்கள்..! கிருஷ்ணதேவின் இக்கவிதை,
ஒரு போர்க்காட்சியின் அவலத்தை சுட்டிக் காட்டுகிறது.

பொதுவாக போர் நடந்துகொண்டிருக்கும்போதோ..,அல்லது நடைபெற்று முடிந்தவுடனோ..,அங்கு நிலைமை எப்படியிருக்கும்.? என்ற அனுபவம் நமக்கில்லை.ஆனால்,போர் நடைபெற்ற பகுதிகளின் நிலை குறித்து இன்று ஊடகங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

கடந்த காலத்தில் இலங்கை என்றால்,தற்போதைய உதாரணமாக இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கிடையிலான போர் இருக்கிறது.இதன் விளைவாக காசா நகரத்தில் நிகழ்ந்த கொடூரங்கள்,வீடியோ மற்றும் புகைப்படக் காட்சிகள்,மனதை ரணகளமாக்கியுள்ளது.

பொருளாதாரத்தினை முன்னிறுத்தும் அதிகாரப்பரவல்கள்.., மனிதம்,மாண்பு, ஒழுக்கம்,மதம்,இனம் என்ற எந்த விதிகளையும் மதிக்கவில்லை.போரினை நிறுத்தவும் முடியவில்லை.

சகலவிதிகளும் மீறப்பட்டுவிட்ட ஒரு களத்தில்,நாம் எந்த மாதிரியான காட்சிகளைப் பார்த்துவிட முடியும்.? இதுவரையான நமது போர்க்கள காட்சிகள் என்பது நமது கற்பனையில் பல்வேறு விதமாக,குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட, மனிதர்களின் அவலத்தை சுட்டுவதோடு நின்று விடும். ஆனால்,பாதிப்பு என்பது மனிதர்களோடு மட்டும் போவதல்ல..,என்று கருதும் கவிஞர் கிருஷ்ணதேவ் இதோ சில உருக்கமான காட்சிகளைக் காட்டுகிறார்.

“சடலமொன்றை / இழுத்துச்செல்ல முற்படும் / ஒரு நாயை / யாரோ விரட்டுகிறார்கள்.!” --- போரில் இறந்துபோனவர்களை நல்லடக்கம் செய்யக்கூட நாதியில்லாத நிலை, அரசு நிர்வாகம் நிலைகுலைந்து போன காட்சி.

சிந்திய / ரத்தங்கள் மீது / பேதமில்லாமல் / மொய்க்கின்றன / ஈக்கள் !--பேதங்களுடன் வாழ்ந்து,இறந்தபின்,வீதியில் சிதறிய மனிதஇரத்தத்தின் மீது,மனிதனைத்தவிர பேதங்கள் பார்க்காத உயிர்களில் ஒன்றான ஈக்கள் மொய்க்கும் காட்சி.

சற்றே அடங்கி / பூமியில் படிந்து / கொஞ்சம் / ஓய்வெடுக்கிறது / சாவின் புழுதி ! --
போரின் நடுவே,ஒரு இடைவெளியில் புழுதிக் காற்று ஓய்வெடுப்பதாக கூறும் கவிஞரின் வரிகளை,காசா நகரத்தின் மீதான தாக்குதல் குறித்து,ஆதிக்க நாடுகளும் அடங்கிக்கிடக்கும் நாடுகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தை காரணமாக,கிடைத்த 72 மணிநேர போர்நிறுத்தமாகவும் கொள்ளலாம்.

எரிந்து போன / ஒரு மரத்தை / வந்து பார்த்து / ஏமாற்றத்துடன் / திரும்பிச் செல்கின்றன/ அந்தப் பிரதேசத்து / பறவைகள் !-- பறவைகளின் சோகத்தை சொல்லும் இவ்வரிகள்,இயற்கையின் பாதிப்பை மட்டுமா சொல்கிறது.? பறவைகளின் எச்சங்கள் மூலம் பரவும் இயற்கை வளம்,இயல்பாக மற்ற நாடுகளுக்கு கடத்தப்படும் அவல நிலையாகவும் கொள்ளமுடியும்.

குரூரப் புன்னகையோடு / சிதைவுகளை / மேற்பார்வையிடுகிறான் / யுத்தமெனும்
/ ஆடை தரித்த / படுகொலை அரக்கன் !-- பொதுவாக ஒருவருக்கு உதவி செய்தபின்,கிடைக்கும் திருப்தியில் வருவது ஆனந்தப் புன்னகை.ஆனால்,குரூரப் புன்னகை..எப்போது வரும்.? தன் நலனுக்காக,மற்றவர்களை துன்பப்படுத்தி,அதில் இன்பம் காணுகிறபோது..!

சில உடைகள்,நமக்கு அழகைத்தரும்,ஆனந்தத்தைத் தரும்.பணிவை,பண்பைக் கூடத் தரும்.ஆனால்,யுத்தமெனும் ஆடை தரித்துவிட்டால்,அவன் படுகொலை செய்யும் அரக்கனாக மாறாமல் இருக்கமுடியுமா..? என்ன.?

ஒரு இனப்படுகொலையை நடத்தி முடித்துவிட்ட தனது பராக்கிரமம், வெற்றி பெற்றுவிட்டதாக அவன் எண்ணும்போது வெளிப்படும் புன்னகை குரூரப் புன்னகையாகத்தானே இருக்க முடியும்.!

குரூரமாக புன்னகைப்பவர்கள்,எப்போதும் மற்றவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை அறிந்து கொள்ள விழைய மாட்டார்கள். அநாதைகளாகும் பாலகர்கள், முதியோர், பெண்கள் என எதைப்பற்றியும் கவலையும் படமாட்டார்கள்.

ஆனால்,கவிஞன் அறிவான்.,உணர்வான்.,மற்றவர் படும் துயரத்தை தனதாக நினைத்து மறுகுவான்.அந்த உணர்வின் உச்சத்தில்,அவன் உண்மையை எழுதும் போது நம்மையும் மறுகச் செய்வான்.அதன் சாட்சியாக நம் கண்களில் சில சொட்டு கண்ணீரும் எட்டிப் பார்க்கும்.

கவிஞர் கிருஷ்ணதேவ்,-மொய்க்கிற ஈக்களை / விரட்டியபடி / வீழ்ந்து கிடக்கும் / தன் சகோதரனை / அழுதுகொண்டே / எழுப்புகிறாள் /அந்த / பாலஸ்தீனச் சிறுமி ! -- என்று இந்தக் கவிதையை முடிக்கும்போது,அப்படித்தான் நிகழ்கிறது.அவனாவது உயிர்த்தெழ மாட்டானா..? என்ற ஆதங்கத்தையும் நமக்குள் பதித்து விடுவதை மறுப்பதற்கில்லை.

கிருஷ்ணதேவின் வரிகளில் மூழ்கி,ஆழ்ந்து படித்து வெளி வந்தபின்,நாடுவிட்டுப் போகும் பறவைகளின் அழுகுரலைக் கேட்டுக் கொண்டே,உங்கள் உடைகளில் சிந்திய கண்ணீர் சொட்டுகளை, போர்க்களத்தில் படிந்த புழுதியுடன் தட்டி விட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

ஒரு கவிதையால் இவ்வளவு உணர்வுகளைத் தட்டி எழுப்பமுடியுமா..? முடியும் என்பதற்கு இந்தக் கவிதையே சாட்சி.இது எப்படி சாத்தியமாயிற்று.?

மதம்,இனம்,மொழி..என்ற எந்த வேறுபாட்டையும் மனதில் கொள்ளாத மானுட நேசத்தின் பிடிக்குள் நின்று குரலெழுப்பும் ஒரு சர்வதேச மனிதனின் மொழியில் வெளிப்படும் படைப்புக்கு அப்படியொரு சக்தி எப்போதும் உண்டென்றே நான் நம்புகிறேன். கவிஞர் கிருஷ்ணதேவின் பாதையும் இனி இப்படியே பயணிக்கட்டும்..! வாழ்த்துக்கள்.!

மிக சமீபத்தில், “இந்தியாவிற்கு ஆயுதங்கள் விற்ற பணத்தையும், பாலஸ்தீனத்திற்கு எதிரான போரில் இஸ்ரேல் பயன்படுத்திவருகிறது.இனி இஸ்ரேலிடம் எவ்விதமான வர்த்தக உறவுகளும் வைக்காமல் இந்தியா புறக்கணிக்க வேண்டும்.பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஒரு நிலையை இந்தியா விரைவில் எடுக்கவேண்டும்.உலக சமூகம் இஸ்ரேலை தனிமைப்படுத்த வேண்டும்..” என்று நாடெங்கும் ஒலித்துவரும் சமூக ஆர்வலர்களின் குரல்களோடு நமது குரல்களையும் நமக்குத் தெரிந்த வழிகளில் இனி இணைத்துக் கொள்வோம் என்ற உறுதியையும் இந்த நேரத்தில் ஏற்போம்..!

------------------------------- ------------------------------ -----------------------------
கவிஞர் கிருஷ்ணதேவ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்-கிருஷ்ணதேவ், குருச்சந்திரன்,கிட்டான்..ஆகிய பெயர்களில் படைப்புகள் அளித்து வருவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.ஆனால்,ஏதேனும் ஒரு புனைப் பெயரில் தொடர்ந்து எழுதிவந்தால்,அது பல வகையிலும் உங்களுக்கு பயன்தரும்.சரியாக அடையாளப்படுத்தவும் உதவும்.!
--------------------------------------------------
மனம் கவர்ந்த இன்னும் சில கவிதைகளோடு மீண்டும் வருகிறேன். அன்புடன் பொள்ளாச்சி அபி..!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (14-Aug-14, 2:26 pm)
பார்வை : 298

மேலே