கல்பனா சாவ்லா

ஒரு எண்ணம் இது..

ஒரு கனவு இது.. ரிலையன்ஸ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் கால் பதித்த பொழுது இந்த வரிகள் மிகப் பிரபலம். திருபாய் அம்பானியின் இந்த எண்ண்த்தின் வலிமை அந்த கனவின் சக்தி, அது இந்தியாவின் கடைகோடி மனிதனுக்கும் மலிவு விலையில் மொபைல் போனை விற்ற பொழுதுதான் புரிந்தது. ஆஹா அந்த மனிதரின் எண்ணங்களுக்குத் தான் எவ்வளவு சக்தி.

ஒவ்வொரு வெற்றிகரமான மனிதருக்கு பின்னாலும் ஒரு கனவு இருக்கிறது. அதுவே அந்த மனிதனுக்கு ஆற்றல் தரும் ஆக்க சக்தி. அதுவே அந்த மனிதனுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தரும் காமதேனு, கற்பக விருட்ஷம். இப்படி ஒரு கனவு தான் கல்பனா சாவ்லாவையும் உருவாக்கியது.

வெற்றியாளர்களின் வாழ்க்கையிலிருந்து வெற்றிக்கான ரகசியங்களை நாம் இலவசமாகவே நிறைய பெற முடியும். ஆம். முட்டாள்கள் தான் பட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். அறிவாளிகள் பிறர் அனுபவங்களிலிருந்து தெரிந்து கொள்கிறார்கள். எனவே வாருங்கள் இந்திய அறிவியல் மூளையின் மணி மகுடமாக விளங்கும் கல்பனா சாவ்லாவின் வாழ்க்கையிலிருந்து வெற்றியின் ரகசியங்களை நாம் தெரிந்து கொள்வோம்.

திட்டவட்டமான கனவு
கல்பனா சாவ்லாவின் சின்னஞ்சிறு வயதிலேயே எது வேண்டும்? எது தனது பாதை என்று அவருக்கு திட்டவட்டமாக தெரிந்திருந்தது. ஆம் அவள் விண்வெளிக் கனவுகள் பள்ளி வயதிலேயே தொடங்கியது. பள்ளியில் ஓய்வு நேரத்தில் கல்பனா ஜன்னல் வழியே விண்ணில் கரைந்தாள். வானத்து மேகங்களின் வர்ண ஜாலங்களில் தன்னை இழந்தாள். சூரிய ஒளிக் கதிர்களின் பரம ரசிகையானாள்.

“ஏண்டி! எப்ப பார்த்தாலும் வானத்தையே பார்த்துக் கொண்டிருக்க?” தோழிகள் கேட்கும் போது, சிரித்துக் கொண்டே சொன்னாள். “என்னவோ தெரியல! அந்த வானத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று எனக்கு தோன்றுகிறது! என்று சொல்லி சிரித்தாள்.

பள்ளி மாணவிகள் ஓவிய வகுப்பின் போது, மலைகளையும், நீர்வீழ்ச்சிகளையும், பறவைகளையும், மிருகங்களையும் வரைந்து மகிழும்போது, கல்பனா மட்டும் நீல நிறவானத்தையும், அதில் நட்சத்திரங்களையும், நிலவையும் வரைந்து, அதில் ஒரு விமானம் பறப்பது போன்று படம் வரைவாள். ஆம் எந்த நேரத்திலும் அவள் எண்ணத்தில் வானமும், விமானமும் தான் நிறைந்திருந்தன.

பள்ளியிலிருந்து வீடு வந்ததும், மாடியில் அமர்ந்து கொண்டு, மீண்டும் வானத்தையும், வான் நிலவையும், நட்சத்திரங்களையும் பார்த்து பார்த்து ரசிப்பாள் கல்பனா. இதைப் பார்த்து குடும்பமும் தோழிகளும் கேட்க, “என்றாவது ஒரு நாள் நானும் அந்த வானத்திற்கு செல்வன். நிலவையும் நட்சத்திரங்களையும் அருகில் சென்று ரசிப்பேன்” என்று கல்பனா சொன்னாள். ஆம் வானத்தை நேசித்த கல்பனா சாவ்லாவுக்கு வானத்தை தாண்டி விண்வெளியில் தான் பறக்க வேண்டும் என்ற திட்டவட்டமான ஆசை இருந்தது.

அது வெறும் கனவாக மட்டுமல்ல. அவள் பேச்சில், மூச்சில், எண்ணத்தில், எல்லாமுமாக நிறைந்திருந்தது.
வெற்றிக்கான சூத்திரமாக திருவள்ளுவர் இதைச்சொல்கிறார்.
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்ஈண்டு முயலப் படும்.
நீங்கள் கேட்டது கேட்டது போலவே கிடைக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், மிகவும் எளிது. அதையே நினைத்துக் கொண்டிருந்தால் போதும், ஆனால் கல்பனா அதையே நினைத்துக் கொண்டிருக்க மட்டும் செய்யவில்லை. அவள் தன்னை விண்வெளிப் பெண்ணாக நினைத்தாள். விண்வெளிப் பெண்ணாகவே மாறினாள்.
ஆம். அந்த கற்பனை தான், கனவு தான், அவள் விரும்பியதை அடைவதற்கான சக்தியை அவளுக்கு கொடுத்தது.

திடமான நம்பிக்கை
கல்பனாவின் விண்வெளிக் கனவை அங்கீகரிக்க, பாராட்ட அவள் தோழிகளோ! குடும்பமோ முன்வரவில்லை. மாறாக கேலியும் கிண்டலும் தான் பரிசாக்க் கிடைத்தது. காரணம், அப்பொழுது 1970களில் நம் நாட்டில் இருந்த அறிவியல் வளர்ச்சி மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் நிலையில் இல்லை. ஏன் இன்னும் அது கனவாகவே உள்ளது. அப்படி எந்த ஒரு வாய்ப்பும் கண்ணுக்கு தெரியாத சூழ்நிலையிலும்…. தன்னால் விண்வெளிக்கு செல்ல முடியும் என்று உறுதியா, திடமாக நம்பினார் கல்பனா…

கல்பனாவின் திட்டவட்டமான குறிக்கோளுடன் அவரது உறுதியான நம்பிக்கையும் சேர்ந்து, ஏற்படுத்திய அதிர்வலையை உடனே ஏற்றுக் கொண்ட அவள் ஆழ் மனம் அதற்கான வெற்றிப் பாதையை உருவாக்கித் தந்தது.

நம்பிக்கை மட்டுமல்ல. நினைத்ததை அடைவதற்கு அதறகு ஈடான விலையை தந்தாக வேண்டும் என்பதை தெரிந்திருந்தார் கல்பனா. ஆம். அவர் தந்த விலை. அதற்கான தொழில் நுட்ப அறிவினை பெறுவதற்கான அவரது அயராத உழைப்பு.

பஞ்சாப் இன்ஜினியரிங் கல்லூரியில் விமானப் பொறியியல் பிரிவில் பல்கலைக் கழகத்திலேயே முதல் இடம் பெற்றார்.
அமெரிக்காவில் அர்லிங்டன் பல்கலைக் கழகத்தில் ஏரோ நாட்டிகல் பொறியியல் பிரிவில் எம்.எஸ். பட்டம் பெற்றார்.
அமெரிக்காவில் கொலொராடா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முனைவர் பட்டம் 1988ல் பெற்றார்.

அதே ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள எம்.சி.ஏ.டி. இன்ஸ்ட்டியூட்டில் விஞ்ஞான ஆய்வாளராக சேர்ந்தார்.. விண் வெளி குறித்த ஆய்வுகளில் தலைசிறந்து விளங்கினார். தன் ஆய்வுத் திறனால் நாசாவில் நுழைந்தார். நாசாவின் நட்சத்திரம் ஆனார். இதற்கு பின்னால் இருந்த அவரின் கடின உழைப்பு, ஈடுபாடு, ஆர்வம் ஆகியவை வெற்றிக்கு அவர் தந்த விலை என்றால் அது மிகையல்ல.

தளராத முயற்சி
அமெரிக்காவின் ‘தேசிய ஆகாயப் பயணவியல் விண்வெளி நிர்வாக நிறுவனம் என்ற NASA – வில் விஞ்ஞானியாவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

அமெரிக்காவில் வசித்த இந்திய டாக்டர் ஒருவர். “கல்பனா! NASA- வில் அமெரிக்கர்களை மட்டும்தான் பணியில் சேர்த்துக் கொள்வார்கள். உன்னைப் போன்ற வெளிநாட்டுக்காரர்களை அவர்கள் தேர்வு செய்யமாட்டார்கள்” என்று சொன்னார். அதற்கு “இல்லையில்லை! எனக்கு திறமை இருக்கிறது. போதுமான தகுதியும் இருக்கிறது. அதனால் நாசாவில் நான் இடம் பிடிப்பேன்” என்று நம்பிக்கையோடு சொன்னார் கல்பனா.

ஆனால் அந்த முயற்சியில் முதல் முறை அவருக்குத் தோல்வியே கிடைத்தது. இருப்பினும் விடாமுயறசியோடு தன் அறிவை மேலும் வளர்த்துக் கொண்டு அடுத்த முறைவெற்றி பெற்றார்.
தோல்வியைத் தாண்டி ஒரு அடி எடுத்து வைத்தாலும் வெற்றி நிச்சயம் என்ற வெற்றி சித்தாந்தத்தை நிரூபித்தார்.

மனித உறவுகளில் அக்கறை
கல்பனா விஞ்ஞானியாக இருந்த போதிலும் பரத நாட்டியத்தை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர். இதன் பின்புலத்தில் நாசா – மருந்தகத்தில் பணியாற்றிய வசந்தாலட்சுமி என்பவர் மகளின் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் கல்பனா கலந்து கொண்டார்.
அழைத்தார்கள்… சென்றோம்.. முடிந்தது என்று இயந்திரத்தனமாக இருந்து விடாமல், மறுநாள் “நான் அறியாத பலவற்றை உங்கள் நடன அரங்கேற்றத்தின் போது நான் அறிந்து கொண்டேன். அத்தகைய வாய்ப்பினை எனக்கு அளித்தமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று வசந்தலெட்சுமி புட்சா-வுக்கு கடிதம் எழுதினாள் கல்பனா சாவ்லா. எத்தகைய உயர்ந்த செயல். இது போன்ற மனித உறவுகளை வளர்க்கும் நல்ல பழக்கம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?

கனவின் வெற்றி
முதல் விண்வெளிப் பயணத்திற்கு பிறகு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள புட்ஹில் கல்லூரியில் பேசிய கல்பனா இறுதியாக மாணவர்களை நோக்கிச் சொன்னார்.

உங்கள் கனவுகளை கலைத்து விடாதீர்கள், எது நேர்ந்தாலும் களைத்து விடாதீர்கள், அவற்றை நனவாக்க முயலுங்கள் – இறுதி வெற்றி உங்களுக்கே! என்றார். இதுதான் கல்பனாவின் தாரக மந்திரம்.
அதேபோல தன் கடைசி விண்வெளிப் பயணத்தின் பொழுது கல்பனா சாவ்லா தாம் பயின்ற பஞ்சாப் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு அனுப்பிய செய்திதான் வெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டிய திருவாசகம். அவை –

“கனவுகளிலிருந்து வெற்றிகளை சென்றைடையும் பாதைகள் எப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன… அவற்றைக் கண்டு அடையும் பார்வையும் அடைவதற்கான தைரியமும், அதில் பயணிக்கும் பொறுமையும் உங்களுக்கு உண்டாகட்டும்” இதுவே கல்பனா சாவ்லாவின் செய்தியும் அவரின் வாழ்க்கை தரும் செய்தியுமாகும்.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (19-Aug-14, 2:02 pm)
சேர்த்தது : தேவி ஹாசினி
பார்வை : 1146

மேலே