அச்சமற்ற பொழுதுகள்

ஷெல் விழும் !
தேசம் ஒருதரம்
ஆடி அடங்கும்
வெடியோசைகள்
தூரத்தில் கேட்கும்
பத்து,பதினைந்து
அண்ணன்மார் வரிச்சீருடையில்
எம்மை கடந்து போவார்கள்
இரவு பயங்கரமானதாக மாறும்
நீண்ட நேரத்தின் பின்
வெடியோசைகள் அடங்கும்
எம்மை கடந்து போனவரில்
சிலரது புகைப்படங்களை
காலை தினசரியில்
வீரமரண அறிவித்தலில் காணலாம்
என்ன செய்கிறோம் என
தெரியாத சிறுபராயத்திலும் கூட
எமக்காய் இறந்தவர்களை நினைந்து அழுவோம்
வித்துடல்கள்
விதைகுழிக்குள் போகும்போது
விம்முவோம்
நல்லூர் முருகன்
கொடியேறும்
நாங்களும் அழகாவோம்
எல்லாம் மறந்து
வீதியுலா வருவோம்
மீண்டும் வெடியோசைகள்
தூரத்தில் கேட்கும்
சிங்கள விமானங்கள்
குண்டுகள் போட
எங்களின் வீடுகள்
தரைமட்டமாகும்
மீண்டும் மீண்டும்
அண்ணன்மார் எம்மை
கடந்து போவார்கள்
சோம்பல் முறித்து
சூரியன் எழும்வரை
போர் புரிவார்கள்
அன்றைய பொழுதுகள்
அசம்பாவிதங்களால் ஆன
அச்சமற்ற பொழுதுகள் .

எழுதியவர் : மு. யாழவன் (21-Aug-14, 9:51 pm)
சேர்த்தது : yazhavan
பார்வை : 89

மேலே