கவியின் கவிதை - மணியன்
எறும்பு ஊறக்
கல்லும் குழியும். . .
எண்ணம் ஊறக்
கவிதையும் குவியும். . . .
எதுகை மோனைகள்
இரு கறையாய்
இனிதே விரியும் . . .
எடுத்த கருவும்
ஏகாந்தம் சூழ
ஏணியாய் உயரும் . . . .
நிலவு வந்து
நெட்டி முறித்து
நிழலாய் அமையும் . . . . .
மலர்கள் சூழ்ந்து
மணம் பரப்பி
மனதை நிரப்பும் . . . . . .
கருவின் வேர்கள்
கவிதையில் ஒளிந்து
காவியம் படரும் . . . . . .
கருவின் உருவோ
கவிதை ஏணியேறி
கார்மேகம் தட்டும் . . . . .
பறக்கும் வரிகள்
பிறவி எடுத்து
பாவலனை எட்டும் . . . . .
பழக்கத்தில் இல்லா
பழந்தமிழ்ச் சொல்லும்
பார்வையில் கிட்டும் . . . . .
வளர்கின்ற தமிழும்
விரிகின்ற சிறகால்
வானம் தட்டும் . . . . . .
கவியின் வரிகளில்
கானகக் குயில்கள்
கானம் மீட்டும் . . . . .
வானத்து வலம் வரும்
விண் மீன் கூட்டம்
வியந்து கண் சிமிட்டும் . . . .
படிக்கின்ற பாமரன்
தட்டும் கையோசை
விண்ணை முட்டும் . . . .
ரசிக்கின்ற ரசிகனின்
ரசனையும் மிகுந்து
ரம்மியம் கூட்டும் . . . . .
தாகம் தீர்த்து
தளர்ச்சி நீக்கி
தமிழே நீயும்
தரமுடன் வருக . . .
தாயகம் சிறந்து
தம்மக்கள் வாழ
தயவருள் புரிக. . . . . . .
*-*-*-* *-*-*-* *-*-*-*-*