வெற்றுக் காகிதங்கள்

எல்லாவற்றையும்
ஒரு கவிதையால்...
எப்போதும்
சொல்லிவிட முடிவதில்லை...

வெயில் சூட்டில் கால் கடுக்க
வெகு தூரம் நடந்து பின் இளைப்பாறும்
ஒரு மர நிழல்
கொடுக்கும் நிறைவினை...

கனவுகளில் துரத்தித் திரிந்த
காதலியொருத்தியை ஒத்தவள்
சட்டென்று நம்மை
யாரோவாய் கடந்து செல்லும்
அவஸ்தை மிகு
படபடப்புக்களை....

கடைசியாய் முகம் பார்த்துக் கொள்ளுங்கள்
என்ற கூச்சலில் கூட்டத்துக்கு
நடுவே நின்று நம் ப்ரிய உறவுகளின்
முகங்களை சிதைக்கு நடுவில்
காணும் பேரவலத்தை....

பிரிந்து விட்ட காதலியை
யாரோ ஒருத்தி போல
எங்கோ சந்தித்து விட்டு....
பேச ஒன்றுமில்லாமல் தவித்து நிற்கும்
அந்த பேரவஸ்தைக் கணங்களை...

அறுந்து போன பட்டத்தின்
நூல் பிடிக்க பின் ஓடி
எட்டிப் பிடிக்க முயலுகையில்
அது கைவிட்டுப் போகும்...
கலக்க நிமிடங்களை...

என்று....
எல்லாவற்றையும்
ஒரு கவிதையால்....
எப்போதும்...
சொல்லிவிட முடிவதில்லை....!



தேவா சுப்பையா...

எழுதியவர் : தேவா சுப்பையா... (23-Aug-14, 7:18 pm)
Tanglish : vetruk kagithangal
பார்வை : 114

மேலே